வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 2 பிப்ரவரி 2017 (19:20 IST)

24 மணி நேரம் உணவு இல்லாமல் இருந்தது உண்டா? - ட்ரம்பிற்கு 7 வயது சிறுமி கேள்வி

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரான், ஈராக், சிரியா, சோமாலியா, சூடான், யேமன் மற்றும் லிபியா ஆகிய 7 நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறுவோருக்கு 90 நாட்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தார்.


 

இந்நிலையில், ஈரான் அரசு, ”அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைகளில் இனி மேல் அமெரிக்க டாலர் பயன்படுத்தப்பட மாட்டாது. இதற்கு மாற்றாக வேறு பொதுவான வெளிநாட்டு நாணயம் பயன்படுத்தப்படும். ஈரான் மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்து இருந்தது.

இதற்கிடையில், கடந்த டிசம்பர் மாதம் பானா அலாபத் (Bana Alabed) என்ற கிழக்கு அலெப்போவைச் சேர்ந்த ஒரு 7 வயது சிறுமியும் அவளது தாய் பாத்திமாவும் தற்போது அலெப்போவிற்குள் சிக்கித் தவிப்பதாக செய்திகள் வெளியாகி ஊடகங்கள் கவனத்தை ஈர்த்தன. மேலும், அலாபத் தனது டுவிட்டர் பக்கத்தில், 'இதுதான் எமது கடைசி செய்தியாக இருக்கும்' என்ற செய்தி சர்வதேச கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், 7 வயது சிறுமி பானா அலாபத், தனது தாயாரின் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சில கேள்விகளை கேட்டுள்ளார். மேலும், தனது ட்விட்டரில் கடிதம் மூலமும் கேள்வி கணை தொடுத்துள்ளார்.

அதில், ”கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிழக்கு ஆலெப்போவில் இருந்து துருக்கிக்கு குடியேறினோம். சிரியா யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிகளில் நானும் ஒருத்தி. தற்போது புதிய இல்லமான துருக்கியில் அமைதியாக இருக்கிறேன்.

நான் வெளியில் சென்று மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. இதுவரையிலும் என்னால் பள்ளிக்கூட செல்ல முடியவில்லை. இது ஏன்? அமைதி ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமானது. உங்களுக்கும் கூட.

எப்படியாகிலும், லட்சோபலட்ச சிரிய நாட்டு குழந்தைகள் என்னைப் போல இல்லை. சிரியாவின் வெவ்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நீங்கள் அமெரிக்க அதிபரென்பது எனக்கு தெரியும். எனவே, உங்களால் சிரிய குழந்தைகளையும், சிரிய மக்களையும் தயவுசெய்து காப்பாற்றுங்கள்” என்று எழுதியுள்ளார்.

மேலும், அந்த வீடியோவில் அலாபத், “நீங்கள் என்றைக்காவது, 24 மணி நேரமும் உணவு, குடிநீர் இல்லாமல் இருந்திருக்கிறீர்களா?, சிரியாவில் உள்ள குழந்தைகளும் தீவிரவாதி போல தெரிகின்றனரா? அவர்களைப் பற்றி நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

உங்களது நடவடிக்கை மிகவும் மோசமானது. தடையை நீக்கவில்லை என்றால், எங்களது நாட்டையாவது அமைதியாக இருக்க விடுங்கள்” என பேசியுள்ளார். சிறுமியின் இந்த புதிய வீடியோவானது சமூக வலைதளங்களில், தற்போது வைரலாக பரவி வருகின்றது.