1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 22 டிசம்பர் 2014 (13:22 IST)

பாகிஸ்தானில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கைது: பள்ளி, கல்லூரிகள் மூடல்

பாகிஸ்தானில் 300 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், இந்நிலையில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் இஸ்லாமாபாத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
 
கடந்த 16ஆம் தேதி பாகிஸ்தானில் பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடத்தில்  புகுந்த 6 தாலிபான் தீவிரவாதிகள், 132 குழந்தைகள் உள்பட 148 பேரை சுட்டுக்கொலை செய்தனர்.
 
இந்த சம்பவம், பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் அரசுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுதியது. இதைத் தொடர்ந்து, அங்கு தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது ராணுவ விமானங்கள் தொடர்ந்து குண்டு வீசி வருகின்றன.
 
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி, தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை இஸ்லாமாபாத்திலும், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
 
உளவுத்துறை தொடுத்த தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட இடங்களில் இந்த தேடுதல் வேட்டையை காவல்துறையினர் மற்றும், பல்வேறு உளவு முகமையினர் கூட்டாக மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்தத் தேடுதல் வேட்டையில், மோப் நாய் படை, ஆயுதம் தாங்கிய காவல் படை, வெடிகுண்டு செயலிழப்பு படை, கமாண்டோ படைகள் உள்ளிடட்ட படைப்பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்தத் தேடுதல் வேட்டையில், ஞாயிற்றுக்கிழைமை காலை வரை 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகளிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
 
இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் ‘டான்’ இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், “தீவிரவாதிகளை தூக்கில் போட்டதைத் தொடர்ந்து, புதிதாக தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்கள் வந்துள்ளன.
 
அதை கருத்தில் கொண்டு, உளவுத்துறையினர் கொடுத்தத் தகவல்களின் அடிப்படையில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது“ என்று கூறியுள்ளார்.
 
இந்நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு, தீவிரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல்கள் இருப்பதால் இஸ்லாமாபாத்தில் இன்று முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.