வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: புதன், 16 ஏப்ரல் 2014 (12:24 IST)

200 இளம் மாணவிகளை கடத்தி பாலியல் தொல்லை; தீவிரவாதிகள் அட்டூழியம்

மத்திய ஆப்பிரிக்க நாட்டில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் 200 பள்ளி இளம் மாணவிகளை கடத்திச் சென்றுள்ளனர். அவர்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டதாக தப்பி வந்த மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
 
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டுமென போக்கோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதமேந்திய போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
 
நைஜீரியாவில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களை தாக்கி அழிக்கும் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர்.
 
நைஜீரியா நாட்டின் வடகிழக்கு மாநிலமான போர்னோவில் உள்ள அம்ச்சக்கா மற்றும் சுற்றுப்புற கிராங்களுக்குள் நேற்று முன்தினம்  கும்பலாக புகுந்த போகோ ஹரம் தீவிரவாதிகள், அங்கிருந்த வீடுகளின் மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வீசி ஆவேச தாக்குதல் நடத்தினர்.
 
உயிர் பயத்தில் வீடுகளுக்குள் இருந்து வீதிக்கு ஓடி வந்த அப்பாவி மக்களின் மீது அந்த கொடியவர்கள் கண்மூடித் தனமாக துப்பாக்கிகளால் சுட்டதில் 70-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பலியாகினர். அம்ச்சக்கா கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த ஒரு ஆழ்துளை கிணற்றையும் அவர்கள் வெறித்தனமாக அழித்து, சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றனர்.
 
இந்நிலையில், போர்னோ மாவட்டத்தில் உள்ள மைடுகுரி நகரில் இருந்து 130 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சிபோக் பகுதியில் உள்ள பெண்கள் உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு நேற்றிரவு வேன், லாரி  மற்றும் பஸ்களில் வந்த போக்கோ ஹரம் தீவிரவாதிகள், காவலர்களூடன் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.
 
விடுதிக்குள் தூங்கிக் கொண்டிருந்த சுமார் 200 இளம் வயது மாணவிகளை பலவந்தமாக வாகனங்களில் தூக்கிப் போட்டுக் கொண்டு கடத்திச் சென்றனர். போகும் வழியில் இருந்த வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களையும் அவர்கள் தீயிட்டு கொளுத்தி அழித்தனர்.
 
இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்ட உள்ளூர் ராணுவ அதிகாரிகள், ‘விரைவில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிடும்’ என்று தெரிவித்தனர்.
 
மேற்கத்திய நாடுகளின் கல்வி முறையை தீவிரமாக எதிர்த்து வரும் போக்கோ ஹரம் அமைப்பினர், சமீப காலமாக பள்ளிகள் மற்றும் மாணவர்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர். கடந்த மாதம் ஒரு பள்ளியின் விடுதிக்குள் புகுந்து மாணவர்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றனர்.
 
மாணவிகளை கடத்தப் போவதாக சில தினங்களுக்கு முன்னர் வீடியோ மூலம் மிரட்டல் விடுத்திருந்தனர். அரசு போதுமான பாதுகாப்பு அளித்திருந்தால் இந்த கடத்தல் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என்று சிபோக் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
 
தீவிரவாதிகள் சென்ற லாரிகளில் ஒன்று நடு வழியில் பழுதானதால் அதில் இருந்த மாணவிகளை இறக்கி, வேறொரு லாரியில் ஏற்றியப் பின்னர் பழுதான லாரியை அவர்கள் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். 
 
இதேபோல், ஒரு வேனும் ‘பஞ்சர்’ ஆகிப் போனதால், அதிலிருந்த மாணவிகளையும் மற்றொரு வாகனத்தில் ஏற்றியபோது, இருளில் தீவிரவாதிகளின் கண்களில் படாமல் புதர் மறைவில் பதுங்கியபடி சிபோக் நகரை வந்தடைந்த சில மாணவிகள் வாகனத்தின் உள்ளே தீவிரவாதிகள் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளனர்.