1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Updated : செவ்வாய், 29 ஜூலை 2014 (21:05 IST)

உடனடிச் செய்தி: தமிழக மீனவர்கள் 50 பேர், இலங்கை கடற்படையினரால் கைது

(2014 ஜூலை 29 - முக்கிய செய்திகளின் சுருக்கம், இங்கே)

நாகை, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த மீனவர்கள், ஐந்து விசைப் படகுகள் மற்றும் இரண்டு பைபர் படகுகளில் இன்று அதிகாலை, கோடியக்கரைக்குத் தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் அவர்களைக் கைது செய்து, காங்கேசன் துறைமுகத்துக்குக் கொண்டு சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
============================

ஈராக்கில் உள்நாட்டுச் சண்டை நடைபெற்று வரும் நிலையில், அங்குப் பணியாற்றி வந்த மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 25 தொழிலாளர்கள், விமானம் மூலம் இன்று சென்னை வந்தனர். தமிழக அரசின் ஏற்பாட்டின் பேரில் இவர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
============================

குஜராத்தின் மேசானா பகுதியில் இட்கா என்ற பகுதியில், இன்று ரம்ஜான் திருநாளை ஒட்டி, இரண்டாயிரம் பேர் தொழுகையில் ஈடுபட்ட நேரத்தில், அருகில் இருந்த சுவர் இடிந்து விழுந்தது. இதில் 8 வயதுச் சிறுவன் உள்பட, இருவர் உயிரிழந்தனர். 35க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 

============================
 
தமிழக இளைஞர் ஒருவர், பீகார் விடுதி ஒன்றில் மரணம் அடைந்துள்ளார். மதுரையைச் சேர்ந்த கம்ரேஷ் பாபு (20) என்பவரின் உடல், இந்திய - நேபாள எல்லையில், கிழக்குப் பீகாரின் சம்பரன் மாவட்டத்தில் உள்ள விடுதி ஒன்றில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அப்பகுதியின் காவல் துறை கண்காணிப்பாளர் சுதீர் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

============================

உத்தரப் பிரதேசத்தின் மீரட் மாநகரில் தானா மருத்துவமனைப் பகுதியில், தன் கள்ளக் காதலனின் உதவியுடன் பெண் ஒருவர், தன் கணவரைக் கொலை செய்தார். மதன்லால் (40) என்பவரின் மனைவி மாயா, கணவரிடமிருந்து பிரிந்து, தன் நான்கு குழந்தைகளுடன் தனியே வசித்து வந்தார். 2014 ஜூலை 28 அன்று மதன்லால், தன் மனைவியைப் பார்க்கச் சென்றார். அதன் பிறகு, பின்னிரவில் அவரது உடல் சந்தேகத்துக்கு இடமான வகையில் கண்டெடுக்கப்பட்டது என்று காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

============================

மேற்கு தில்லியில் உள்ள பஞ்சாபி பாக் என்ற பகுதியில் 14 வயதுச் சிறுமியை அக்கம் பக்கத்தில் வசித்த மூன்று பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 2014 ஜூலை 27, ஞாயிறு அன்று சிறுமி, தனது வீட்டுக்குத் திரும்பும் வழியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ராஜேஷ் (22), முகம்மது நசீம் (20), 18 வயதுக்கு உட்பட்ட ஒருவர் ஆகியோர், சிறுமியைக் காலி இடத்துக்கு இழுத்துச் சென்று, கூட்டாக இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

============================

2012ஆம் ஆண்டு, அருகில் வசித்த 4 வயதுக் குழந்தையைப் பாலியல் பலாத்காரம் செய்த 21 வயது இளைஞருக்கு, 2014 ஜூலை 28 அன்று, அகமதாபாத் அமர்வு நீதிமன்றத்தில் 7 ஆண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பின்டு என்கிற கிஷன் பீல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், இத்தகைய நபர் சமூகத்தில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க முடியாது என்று அமர்வு நீதிபதி வனானி தெரிவித்தார்.

============================
 
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் வரி செலுத்துவோர், தங்களது கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கு, 31ஆம் தேதி வரை சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள 12 கவுண்டர்களுடன், கூடுதலாக 30 சிறப்புக் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

============================

வருவாய்க்கு அதிகமாகச் சொத்து சேர்த்த புகாரின் பேரில், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர் அனோஷ் எக்காவிற்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கி வைக்க, அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.
 
============================

இராஜஸ்தானில் 20 வயதுப் பெண் (திருமணம் ஆனவர்), ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இன்று காலை, பிரியங்கா என்ற பெண், ஜகத்பூரின் நந்தபுரி என்ற பகுதியில் ஓடும் ரயில் முன் திடீரெனப் பாய்ந்தார். சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை, தொடர்ந்து நடக்கிறது.

============================
 
இராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் தோரிமன்னா பகுதியில், மார்பிங் செய்த ஆபாச வீடியோவைக் காட்டி, பெண்ணை மிரட்டிய இருவர் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், லட்சுமண்ராம், ஜூன்ஜாராம் ஆகிய இருவரும் 2014 ஜூலை 28 அன்று கைது செய்யப்பட்டதாக, அப்பகுதியின் காவல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

============================

காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து, இன்று காலை 80 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

============================
 
இராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, இன்று தேரோட்டம் நடைபெற்றது.

============================
மேலும்

 
உத்தரப் பிரதேசத்தின் கவுடியா என்ற கிராமத்தில் 17 வயதுடைய தலித் பெண், சக கிராமத்தைச் சேர்ந்தவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணின் குடும்பத்தவர்கள் வெளியே சென்றிருந்த போது, இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக அப்பகுதியின் காவல் துறை கண்காணிப்பாளர் பரத் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

============================

ஆந்திராவின் புதிய தலைநகரை விஜயவாடா - குண்டூர் இடையே அமைக்க அம்மாநில அரசு பரிசீலித்து வருகிறது. ஆந்திராவின் 13 மாவட்ட மக்களும் எளிதில் அணுகும் வகையில் இந்தப் பகுதி அமைந்துள்ளதாக, ஆந்திர அமைச்சர் பி.நாராயணா தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினம், ஆந்திராவின் ஒரு மூலையில் அமைந்திருப்பதால், அதனைத் தலைநகர் ஆக்கப் பரிசீலிக்கவில்லை என்றும் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் கூறியுள்ளார்.

============================

காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான தனது தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் இது வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை, 1046 ஆக அதிகரித்துள்ளது.

============================
 
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, ஒடிசா கடற்பகுதியில் கைது செய்யப்பட்டு, பாரதீப் சிறையில் அடைக்கப் பட்டிருந்த இலங்கை மீனவர்கள் ஐந்து பேர், அவர்களது படகுகளுடன் 2014 ஜூலை 28 அன்று விடுதலை செய்யப்பட்டனர்.
 
============================
 
அரியானா மின்துறை அமைச்சர் கேப்டன் அஜய் சிங் யாதவ், பதவி விலகினார். லாலு பிரசாத் யாதவின் சம்பந்தியான இவர், ஆளும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர். அரியானா முதலமைச்சர் ஹூடாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளார். தான் சக்தியற்றவராக (பவர்லெஸ்) உணர்ந்தால் விலகினேன் எனப் பதவி விலகிய மின் துறை அமைச்சர் (பவர் மினிஸ்டர்) தெரிவித்துள்ளார். 

============================
 

அந்தமான் கடலோரப் பகுதியில் இன்று மதியம் 12.37 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது, 5.5 ஆகப் பதிவானது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

============================

உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரில் 27 வயதுடைய பெண், ஐந்தாம் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். அன்ஷிகா என்ற அந்தப் பெண், தன் கணவருடன் நிகழ்ந்த சூடான வாக்குவாதத்திற்குப் பிறகு, நேற்று இரவு அவர்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாம் மாடியிலிருந்து குதித்துவிட்டார். காவல் துறையினர், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
============================
 
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இயங்கி வரும் ரோப்கார் சேவை, வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக, 2014 ஜூலை 28 அன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. 

============================

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியா முழுவதும் 600 உதவி மையங்கள் அமைக்க, மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ, சட்ட வசதிகள், காவல் துறையினரின் உதவிகள் கிடைக்க, இந்த மையங்கள் வழிவகை செய்யும். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று, நிதி அமைச்சகம், இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
 
============================

நாட்டில் உள்ள 12 பெரிய துறைமுகங்களிலும் சரக்கு கையாளும் திறனை இரண்டு மடங்காக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மும்பையில் துறைமுக சபை தலைவர்களுடன் நேற்று நடத்திய ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது 800 மெட்ரிக் டன் அளவு உள்ள துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1600 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்படும் என்றார்.

============================

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப் பூரத் தேரோட்டம் நாளை நடைபெறுவதையொட்டி, விருதுநகர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

============================
 
மேல்மருவத்தூர் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, நாளை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

============================