மேலும் 50 மில்லியன் பேர் வறுமையில் தள்ளப்படுவர்- ஐ.நா!

Webdunia| Last Modified வெள்ளி, 4 ஜூலை 2008 (14:53 IST)
உணவுபபொருட்களின் விலை அதிகரித்து வருவதால் ஏழை நாடுகளில் மேலும் 5 கோடி பேர் வறுமைக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இதனால் அந்த நாடுகளில் உணவுபபாதுகாப்பை அதிகரிக்க உலக நாடுகளின் ஒத்துழைப்பை ஐ.நா கோரியுள்ளது.

பிராஸ்ஸல்சில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் தலைமை இயக்குனர் ஜேக் டியோஃப் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய உணவு நெருக்கடிக்கு பல்வேறு காரணங்களை எடுத்துக் கூறிய இவ‌ர், இயற்கை எரிபொருளின் பயன்பாடு அதிகரிப்பு, வேளாண் விளைபொருள்களுக்கான அதிகரிக்கும் தேவை, தானியங்களின் குறைவான ‌வி‌னியோக‌ம் ஆகிய காரணங்கள் இன்றைய நெருக்கடியை உருவாக்கியுள்ளன என்றார்.
இதுதவிர, ஏற்றுமதி நாடுகளின் கட்டுப்பாடுகள், மொத்த விற்பனைச் சந்தைகளில் முதலீடு, உரம் போன்ற வேளாண் இடுபொருளின் அதிக விலை ஆகியவையும் இந்த நெருக்கடியை உருவாக்கியதில் பங்கு வகிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பருவநிலை மாற்றங்களால் உலகம் முழுதும் ஆண்டுதோறும் 5 முதல் 10 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாழாகின்றன என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
புவி வெப்பம் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்ததன் காரணமாக, ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளின் முக்கியப் பயிர்களின் விளைச்சல் 20 முதல் 40 விழுக்காடு வரை குறைந்திருப்பதாகவும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

இன்றைய உணவு நெருக்கடிகளுக்கு வளரும் நாடுகளின் வேளா‌ண் உற்பத்தியை பற்றி சர்வதேச நாடுகள் காட்டி வந்த அலட்சியப் போக்குகளே காரணம் என்று அதிரடிக் கருத்தை வெளியிட்டார் டியோஃப்.


இதில் மேலும் படிக்கவும் :