சோமாவ் தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியதில் 100 பேர் பலி

சிட்னி| Webdunia|
அமெரிக்காவுக்கு சொந்தமான சோமாவ் தீவில் நேற்றிரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 8.0 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

பசிபிக் கடலில் நியூஸீலாந்துக்கு அருகே உள்ளது சோமாவ் தீவு. நியூஸீலாந்துக்கு கிழக்கே இருக்கும் இந்தக் குட்டி தீவின் தென் கிழக்கே 120 கிமீ. தொலைவில் கடலுக்கடியில் 18 கி.மீ. ஆழத்தில், இந்திய நேரப்படி நேற்றிரவு 11.18 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோளில் 8.0 புள்ளிகளாகப் ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக கடலோரத்தில் உள்ள பகுதிகளில் ராட்சத அலைகள் புகுந்து வீடுகளை தரைமட்டமாக்கின. நூற்றுக்கணக்கான கார்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன.
இதில் 100க்கும் அதிகமான மக்கள் பலியாகிவிட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை. பல உடல்கள் மண்ணுக்குள் பாதி புதைந்த நிலையில் காணப்படுகின்றன. மேலும் பல உடல்கள் புதைந்து போயிருக்கலாம் என கருதப்படுகிறது.

அருகில் இருக்கும் டோங்கா தீவிலும் சுனாமி தாக்கி 5 பேர் பலியானார்கள். மேலும், இந்த சுனாமி அலைகள் நியூசிலாந்து வரை வந்தன. ஆனால் உயரம் குறைந்த சுனாமி அலைகளால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள சோமாவ் தீவில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அமெரிக்க விமான படைக்கு அதிபர் பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சி-130 ரக விமானங்கள் நிவாரணப் பொருட்களுடன் சோமாவ் சென்றடைந்துள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :