Webdunia|
Last Modified செவ்வாய், 28 அக்டோபர் 2008 (11:03 IST)
இனவெறி காரணமாக, அமெரிக்க அதிபர் பதவிக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமாவை கொலை செய்ய தீட்டிய திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அடுத்த மாதம் நடைபெறும் அமெரிக்க பதவிக்கான தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் பாரக் ஒபாமா போட்டியிடுகிறார். கறுப்பர் இனத்தை சேர்ந்த இவருக்கே தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இவர் தற்போது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் அங்குள்ள டென்னசி மாகாண போலீசார், சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி, இவர்கள் இருவரும் இனவெறி காரணமாக, பாரக் ஒபாமா உள்ளிட்ட பலரை கொலைச்செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஒரு காரில் வேகமாக வந்து மோதி, ஒபாமாவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டதாக இருவரும் போலீசாரிடம் கூறியுள்ளனர்.
அவர்களிடமிருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.