ஐ.நா.நிபுணர் குழுவுக்கு எதிரான இலங்கை அமைச்சரின் உண்ணாவிரதம்: பொன்சேகா கிண்டல்

கொழும்பு| Webdunia|
ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிராக இலங்கை அமைச்சர் மேற்கொண்ட உண்ணாவிரதத்தின் மூலம் இலங்கையின் முகத்தில் சேறு பூசப்பட்டதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கிண்டல் செய்துள்ளார்.

ஐ.நா. விவகாரத்தை இராஜதந்திர ரீதியில் அணுகவேண்டும். ஆனால், பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டு, சைலன் (குளுகோஸ்) பாட்டிலுடன் அரசாங்க ஆதரவில் இங்கு மட்டுமே உண்ணாவிரதம் நடத்தப்பட்டது.சேறும் பூசிக் கொள்ளப்பட்டது என்று அவர் கடுமையாக சாடியுள்ளார்.

உண்ணாவிரதம் முதலைக்கு நெத்தலி சவால் விடுத்த கதையாகும். இதன்மூலம் முகத்தில் சேறுபூசிக் கொள்ளப்பட்டது என்றும் அவர் சொன்னார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து பேசியதாவது:

அமைச்சரவைக் கூட்டம் கிளிநொச்சியில் நடத்தியதால் 10 மில்லியன் ரூபாய் செலவாகியுள்ளது. வாகன போக்குவரத்துக்கு 6 மில்லியனும், போக்குவரத்துக்கு 2 மில்லியனும், சாப்பாட்டுக்கு 2 மில்லியனும் செலவிடப்பட்டது. இதில் பயன் ஏதும் இருக்கின்றதா?
அத்துடன் 20 இலட்சம் ரூபாய் செலவில் பெந்தோட்டையில் அமைச்சர்கள் ஆட்டம் போடுகின்றனர். இவையெல்லாம் யாருடைய பணம்,நாட்டை கட்டியெழுப்புவதற்கு நிதியில்லாத நிலையில் இவையெல்லாம் தேவையா?

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இல்லாமல் போனது தொடர்பாக உண்மையை தெளிவுபடுத்த அமைச்சர்கள் தயார் எனினும், அமைச்சர் பதவிகள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் அமைதியாக இருக்கின்றனர்.
களத்தில் போராடி யுத்தத்தை வெற்றி கொண்ட தளபதி நான், குளிரூட்டப்பட்ட அறைக்குள் இருந்து கொண்டு அதனைச் செய்யவில்லை. இவற்றிற்கு நானே பொறுப்பு என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :