ஆப்கானில் தாக்குதல் : ஜெர்மன் இராணுவ தளபதி ராஜினாமா

பெர்லின் | Webdunia| Last Modified வியாழன், 26 நவம்பர் 2009 (16:40 IST)
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக ஜெர்மன் படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்களும் பலியானது தொடர்பான சர்ச்சை காரணமாக ஜெர்மன் இராணுவ தலைவர் வோல்ப் கேங் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக போர் நடத்தி வரும் அமெரிக்க படையினருக்கு உதவியாக 'நேட்டோ' படையும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த 'நேட்டோ' படையில் இடம் பெற்றுள்ள ஜெர்மன் படையினர் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதியன்று நடத்திய மிகக் கடுமையான விமான தாக்குதலில் தாலிபான்கள் 69 பேருடன், சிவிலியன்கள் 30 பேரும் கொல்லப்பட்டனர்.
இது ஜெர்மனயில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.ஆனால் சிவிலியன்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று ஜெர்மன் அரசு மறுத்திருந்தது.

இந்நிலையில், விடியோ ஆதாரங்கள் மற்றும் ரகசிய இராணுவ அறிக்கைகளில் சிவிலியன்கள் கொல்லப்பட்டது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜெர்மன் நாளிதழ் ஒன்று இன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று ஜெர்மன் இராணுவ தலைவர் இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார்.

இத்தகவலை ஜெர்மன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜூ கட்டன்பர்க் இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :