செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. உலக ‌சி‌னிமா
Written By John
Last Updated : புதன், 9 ஏப்ரல் 2014 (20:15 IST)

உலக சினிமா - S N O W P I E R C E R

Snowpiercer  2013 ல் வெளியான கொரிய திரைப்படம். கொரிய இயக்குனர் Bong Joon-ho இயக்கியது.
Snowpiercer
இதுவொரு சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் படம். ஜீவராசிகள் எதுவும் உயிர்வாழ முடியாதபடி உலகம் முழுவதும் பனியால் உறைந்து கிடக்கிறது. அனைவரும் பனியில் இறந்துவிட கொஞ்சம் பேர் மட்டும் ஒரு ரயிலில் பயணிக்கிறார்கள். கடந்த 17 வருடங்களாக அந்த ரயில் நிற்காமல் உலகை சுற்றி வருகிறது. ரயிலில் இருப்பவர்களுக்கு அதுதான் உலகம். வெளியே கால் வைத்தால் மரணம் நிச்சயம்.

ஒரு குட்டி உலகத்தைப் போலவே அந்த ரயில் வாழ்க்கை கட்டமைக்கப்பட்டுள்ளது. ரயிலின் வால் எனப்படும் பின்பகுதி அடிமைகளின் இருப்பிடம். அவர்கள் மேட்டுக்குடியினரின் முன்பகுதிக்கு வர அனுமதியில்லை. உணவும், தண்ணீரும் சொற்பமாக விநியோகிக்கப்படும். எலிவளை போன்ற இருப்பிடத்தில் வாழ்ந்து சாக பணிக்கப்பட்டவர்கள். வெளி உலகம் குறித்து தெரியாமல் ரயிலிலேயே பிறந்து வளர்கிறவர்களும் அங்குண்டு.
17 வருடங்களாக நிற்காமல் பயணிக்கும் அந்த ரயிலை உருவாக்கி அதனை செலுத்திக் கொண்டிருப்பவர் வில்ஃபோர்ட். ரயிலின் முன்பகுதியில் இருக்கும் என்ஜின் அறையைவிட்டு அவர் வெளியே வருவதில்லை. அவரது திறமையில், கருணையில் அந்த ரயில் இயங்குகிறது. அவர் இல்லையேல் ரயில் இல்லை, மனிதர்கள் இல்லை, வாழ்வு இல்லை.
ரயிலின் வால் பகுதி மனிதர்களுக்கு அந்த நரகத்திலிருந்து தப்பித்து தங்களை அதிகாரம் செய்யும் மேட்டுக்குடியினரின் முன்பகுதிக்கு சென்றுவிட வேண்டும் என்று எப்போதும் ஒரு துடிப்பு. ஒவ்வொரு பெட்டியாக முன்னேறி அந்த ரயிலின் உயிர் இயக்கமான என்ஜின் அறையை கைப்பற்றினால் மட்டுமே அது சாத்தியம். ஒவ்வொரு பெட்டியின் கதவுகளையும் தாண்டி செல்வது எளிதல்ல. கதவுகள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டவை. பின்பகுதி மக்களின் முன்னோக்கி செல்லும் முயற்சிகள் பலமுறை கடுமையான முறையில் அடக்கப்பட்டுள்ளது.

ரயில் உலகை சுற்றி வருகிறது என்றோமில்லையா? அதன் பாதை வடிவமைக்கப்பட்டிருப்பதிலும் ஒரு ஆச்சரியமான ஒற்றுமை உண்டு. கிறிஸ்துமஸ் தினத்தில் அந்த ரயில் எந்தப் பகுதியை கடக்கிறதோ சரியாக ஒரு வருடம் கழித்து அதே கிறிஸ்துமஸ் தினத்தில் மறுபடியும் அந்த ரயில் அப்பகுதியை கடந்து செல்லும். அதேபோல் ஒவ்வொரு பகுதியையும் சரியாக ஒரு வருடம் கழித்து அதே தினத்தில், அதே நேரத்தில் கடந்து செல்வதைப் போல ரயிலின் வேகமும், பாதையும் அமைக்கப்பட்டிருக்கும்.
இதுதான் இந்தப் படத்தின் பின்புலம். இப்படியொரு சூழல் எப்படி ஏற்பட்டது போன்ற விவரணைகளுக்குள் நுழையாமல் படம் நேரடியாக தொடங்குகிறது. 
ரயிலின் வால் பகுதிகளில் வசிக்கும் மனிதர்களுக்கு வழிகாட்டுகிறவராக இருப்பவர் கிலியம் என்கிற வயதான மனிதர். அவரின் அறிவுரைப்படி கர்டிஸ் என்ற துடிப்பான இளைஞன் முன்பகுதிக்கு செல்ல சந்தர்ப்பம் எதிர்பார்த்து ஆட்களை தயார் செய்கிறான். அவர்களுக்கு முன்பக்கத்திலிருந்து அவ்வப்போது குறிப்புகள் வருகின்றன. அதற்கேற்ப தங்களின் திட்டத்தை வகுத்துக் கொள்கிறவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் தங்களின் திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். வெற்றிகரமாக முதல் பெட்டியை தாண்டிச் சென்று சிறை இருக்கும் பகுதியில் ரயிலின் கதவுகளை வடிவமைத்தவனை விடுவிக்கிறார்கள். அவனது உதவி இருந்தால் மட்டுமே அடுத்தடுத்த கதவுகளை திறந்து முன்னேற முடியும்.

இந்த திடீர் புரட்சியில் இரு தரப்பிலும் பெரும்பான்மையானவர்கள் கொல்லப்படுகிறார்கள். கடைசியில் கர்டிஸும், கதவை வடிவமைத்தவனும், அவனது 17 வயது மகளும் மட்டும் என்ஜின் பகுதிவரை வருகிறார்கள். என்ஜின் பகுதியில் கர்டிஸ் வில்ஃபோர்டை சந்திக்கையில் படம் எதிர்பாராத இன்னொரு தளத்துக்கு செல்கிறது. இந்தப் படத்தை முக்கியமானதாகவும், இயக்குனர் Bong Joon-ho -ஐ முக்கிய இயக்குனராகவும் அடையாளம் காட்டுவது இந்த கடைசிப் பகுதிதான்.
ரயிலையும், அதன் ஒவ்வொரு பெட்டியையும் மிகநுணுக்கமாக வடிவமைத்துள்ளனர். அடிமைகளின் வாழ்க்கைக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது முன்பகுதியில் இருப்பவர்களின் தினசரி வாழ்க்கை. அவர்கள் சொர்க்கம் எனப்படுகிற வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்.
படத்தின் திரைக்கதை அமுதசுரபியைப் போல ஆச்சரியங்களை அள்ளி தந்து கொண்டேயிருக்கிறது. கிலியமுக்கு ஒரு கை, ஒரு கால் இல்லை. அந்த கை இல்லாமல் போனதற்கு பின்னால் ஒரு கதை உண்டு. அந்த கதைக்கும் கர்டிஸுக்கும் தொடர்பு உண்டு. முன்பகுதியிலிருந்து அடிமைகளுக்கு உணவுகளில் கடத்தப்படும் ரகசிய குறிப்புகளை அனுப்புவது யார்? எதற்கு அந்த குறிப்புகள் அனுப்பப்படுகிறது? இந்த கேள்விகளுக்கு அதிரகசிய காரணங்கள் இருக்கிறது. கதவுகளை வடிவமைத்தவன் ஒவ்வொரு கதவை திறந்ததும் க்ரோனல் என்ற போதை வஸ்துவை ஏன் கேட்கிறான்? அடிமைகளின் குழந்தைகள் அவ்வப்போது ஏன் வில்ஃபோர்டின் ஆள்களால் முன்பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்?

திரைக்கதையில் அவ்வப்போது மேலெழும்பி வரும் இந்த கேள்விகளுக்கான பதில்கள் இரண்டு மணிநேரம் நம்மை சீட் நுனியில் வைக்கின்றன. ஆனாலும் அந்த இறுதிப் பகுதி கிளாஸிக். நமது உலகில் பேணப்பட்டு வரும் ஏற்றத் தாழ்வுகள், செயற்கையாக உருவாக்கப்படும் போர்கள், போலியாக தரப்படும் நம்பிக்கைகள், உந்துசக்திகள் என பலவற்றின் குறுக்குவெட்டு தோற்றம்தான் இறுதிப்பகுதி. 
Bong Joon-ho  கொரியாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர். உலக சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயமானவர். குறிப்பாக தமிழகத்தில். இவர் இயக்கிய முதல் முழுநீளத் திரைப்படம் பார்க்கிங் டாக்ஸ் நெவர் பைட் 2000 -ல் வெளியானது. மூன்று வருடங்கள் கழித்து மெமரிஸ் ஆஃப் மாடர் திரைப்படம். 2006ல் த ஹோஸ்ட். அதன் பிறகு 2009ல் மதர் (இந்தப் படத்தை பற்றிய விமர்சனத்தை இதே பகுதியில் காணலாம்). மதருக்கு பிறகு 2013ல் இந்தப் படம் வெளியானது. மெமரிஸ் ஆஃப் மர்டர் திரைப்படம் சீரியல் கொலைகளை துப்பறிவது. கடைசிவரை அந்தப் படத்தில் கொலையாளி கண்டு பிடிக்கப்படுவதில்லை. விசாரணையின் வழியாக தெரியவரும் மனிதர்கள், நிகழ்வுகள், விசாரிப்பவர்களின் மன மாறுதல்கள் என்று ஒரு பெரும் உலகம் அந்த படத்தில் சிருஷ்டிக்கப்பட்டிருக்கும். மதர் படமும் ஏறக்குறைய அப்படிதான்.
பதிலை நோக்கி பாயாமல் கேள்விகளுக்கான காரணங்களை, அதன் ஆன்மாவை, புறச்சூழலை ஆராய்வதுதான் Bong Joon-ho படங்களின் தனித்துவம். இந்த ஆக்ஷன் படத்திலும் அதனை அவரால் சாதிக்க முடிந்திருக்கிறது.