1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By Caston
Last Updated : திங்கள், 26 அக்டோபர் 2015 (18:30 IST)

உலக சினிமா - த மார்ஷியன்

த மார்ஷியன் ரிட்லி ஸ்காட்டை காப்பாற்றியிருக்கிறது. பிளேடு ரன்னர், ஏலியன், பிளாக் ட்ரெய்ன், தெல்மா அண்ட் லூயிஸ், கிளாடியேட்டர், ஹானிபல், பாடி ஆஃப் லைஸ் போன்ற அருமையான கமர்ஷியல் படங்களை தந்த ரிட்லி ஸ்காட், கடந்த சில வருடங்களாக போரடிக்க ஆரம்பித்தார். அவரது ப்ரொமிதியஸ், எக்ஸேடஸ் - காட்ஸ் அண்ட் கிங்ஸ், ராபின்ஹுட் போன்ற படங்கள் ரிட்லி ஸ்காட்டின் ரசிகர்களுக்கு பொறுமையை சோதிக்கும் அவஸ்தைகளாக அமைந்தன.


 
 
எக்ஸோடஸ் - காட்ஸ் அண்ட் கிங்ஸ் போன்ற படத்தை ரிட்லி ஸ்காட் ஏன் எடுத்தார் என்பது இன்னும் புரியாத புதிர். அனைவருக்கும் தெரிந்த மோசஸின் கதைதான், இந்தப் படம். மோசஸ் கடவுளின் சக்தியை பெற்று அடிமைகளை விடுவித்த பைபிள் கதையை, கடவுளின் சக்திக்குப் பதில் இயற்கை உதவியதாக மெனெக்கெட்டு மாற்றி காட்சிப்படுத்தியிருந்தார் ரிட்லி ஸ்காட். பொறுமையை சோதிக்கும் முயற்சி.
 
ரிட்லி ஸ்காட்டின் கடைசி ஸ்பேஸ் படமான, ப்ரொமிதியஸ் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போன பிறகு, விண்வெளியை வைத்து இன்னொரு படம் எடுக்க ரிட்லி ஸ்காட்டுக்கு அதீத தைரியம் இருந்திருக்க வேண்டும். அவரைவிட தயாரிப்பாளர்களுக்கு அதிக தைரியம் இருந்திருக்க வேண்டும்.
 
மார்ஸ் கிரகத்துக்கு செல்லும் நாயகன் மார்க் வாட்னி அங்கு மாட்டிக் கொள்கிறான். அவன் இறந்துவிட்டதாக கருதி, அவனது குழு அவனை மார்ஸில் விட்டுவிட்டு கிளம்பிவிடுகிறது. உயிர்வாழ எதுவும் இல்லாத மார்ஸில் மார்க் மாட்னி எப்படி தப்பிப் பிழைத்தான் என்பது கதை.

அசந்தர்ப்பமான சூழலில் மனிதன் மாட்டிக் கொள்வதை வைத்து நிறைய படங்கள் வந்துள்ளன. காஸ்ட் அவே தொடங்கி 2013 -இல் வெளியான ராபர்ட் ரெட்போர்டின், ஆல் இஸ் லாஸ்ட் வரை நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும். அப்படியொரு படம்தான், த மார்ஷியன். மார்ஸ் கிரகம் எனும்போது சர்வதேச அளவில் படத்துக்கு ஒரு கவனம் கிடைத்தது.


 
 
மார்க் வாட்னி மார்ஸில் தனியாக இருந்தாலும், நாஸாவுடன் அவனால் தொடர்பு கொள்ள முடிகிறது. தனது தாவரவியல் படிப்பை வைத்து, மார்ஸில் உருளைக்கிழங்கு பயிர் செய்கிறான் மார்க். இதனால், மார்க் தனிமையில் மாட்டிக் கொண்டிருக்கிறான் என்ற பதட்டம் நமக்கு வருவதில்லை. படத்தின் முக்கியமான குறைபாடாக இதனைச் சொல்லலாம்.
 
மார்ஸ் எப்படியிருக்கும் என்ற ஆராய்ச்சிகளின் முடிவை வைத்து படத்துக்கான அரங்கை நிர்மாணித்திருக்கிறார்கள். சிஜி வேலைகளும் அப்படியே மார்ஸை பிரதிபலிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்தவகையில், த மார்ஷியன் ஒரு விஷுவல் ட்ரீட் எனலாம்.
 
108 மில்லியன் யுஎஸ் டாலர்கள் செலவில் தயாரான இப்படம் யுஎஸ்ஸில் மட்டும் 166 மில்லியன் டாலர்களை சூலித்துள்ளது. வெளிநாடுகளில் 218 மில்லியன் டாலர்கள். கமர்ஷியலாக படம் வெற்றி. ரிட்லி ஸ்காட்டுக்கு இதுவே பெரிய ஆறுதல்தான்.