1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By ஜெ.பி,ஆர்.
Last Updated : செவ்வாய், 4 அக்டோபர் 2016 (15:49 IST)

உலக சினிமா - செவன் சாமுராய் முதல் தி மெக்னிபிசென்ட் செவன் வரை

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் இந்த வாரம், தி மெக்னிபிசென்ட் செவன் படம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இதுவொரு தழுவலின், தழுவல் கதை.

 
அதாவது அகிரா குரோசவா இயக்கத்தில் 1954 -இல் வெளிவந்த செவன் சாமுராய் படத்தை 1960 -இல் ஹாலிவுட்டில் ரீமேக் செய்தார்கள். படத்தின் பெயர் தி மெக்னிபிசென்ட் செவன். ஜான் ஸ்டர்ஜஸ் இயக்கிய இந்தப் படம் அன்று செம ஹிட். செவன் சாமுராய் படத்தை ஹாலிவுட் கௌபாய் கதையாக மாற்றியிருந்தார்கள். 
 
இப்போது அதே படத்தை அதே பெயரில் மீண்டும் எடுத்திருக்கிறார்கள். படத்தை இயக்கியிருப்பது Antoine Fuqua.
 
இவர் ஒரு கமர்ஷியல் இயக்குனர்தான். ஆனால், ரோலெண்ட் எமெரிச்சுக்கு கொஞ்சம் மேல். ரோலண்ட் வெள்ளை மாளிகைளை எதிரிகள் ஆக்கிரமிக்கும் கதையைக் கொண்டது, வொயிட் ஹவுஸ் டவுன் படத்தை எடுத்த போது அதேபோன்றதொரு கதையை வைத்து ஒலிம்பஸ் ஹேஸ் பாலன் படத்தை Antoine Fuqua இயக்கினார். இந்த இரண்டையும் பார்த்தால் இருவருக்குள்ள வித்தியாசம் ரோலண்டின் படத்தைவிட ஒலிம்பஸ் ஹேஸ் பாலன் பல மடங்கு உசத்தி.
 
அவரது தி ஈக்லைசர் படம் சமீபத்தில் வந்த ஆக்ஷன் படங்களில் டாப் என்று சொல்லலாம். அடுத்து இயக்கிய சவுத்பௌவ் ஒரு நல்ல திரைப்படம். அவர் தி மெக்னிபிசென்ட் செவனை இயக்குகிறார் என்ற போதே எதிர்பார்ப்பு எழுந்தது.
 
செவன் சாமுராயில், கிராமத்தை கொள்ளையடிக்கும் கொள்ளைக் கூட்டத்துக்கு எதிராக 7 சாமுராய்கள் போராடுவதுதான் கதை. அதில் சாமுராய்கள் கிராமத்து மக்களை அதிகாரம் செலுத்துவது போல் தெரியும். ஆனால், கடைசியில் இந்த இரண்டு தரப்பில் அதிக லாபம் பெறுவது கிராமத்தவர்கள்தான் என்பதை குரோசவா காட்டியிருப்பார். அதுவொரு கிளாசிக். ஆனால், ஹாலிவுட் படத்தில் அப்படியெந்த கிளாசிக் டச்சும் கிடையாது. டமால் டுமீல்தான்.
 
கௌபாய் கிராமம் ஒன்றில் ஒரு வில்லன் ஆட்டிப் படைக்கிறான். அவனால் கணவனை இழந்த பெண் வெளியூர் சென்று 7 பேரை அழைத்து வருகிறாள். அவர்களுக்கு தலைவன் போல் செயல்படுவது சாம் என்பவன். அவன் தான் இந்தப் படத்தின் நாயகன். டென்சில் வாஷிங்டன் இதில் நடித்துள்ளார். 
 
1960 -இல் வெளிவந்த படத்தில் இருந்த இசையும், நடிப்பும், உள்ளார்ந்த ஏதேவொன்றும் புதிய படத்தில் இல்லை. ஆனால், இயக்கியது Antoine Fuqua என்பதால் போரடிக்காமல் உட்கார்ந்து பார்க்கலாம். 
 
95 மில்லியன் டாலர்களில் தயாரான இந்தப் படம் யுஎஸ்ஸில் முதல் மூன்று தினங்களில் 34.7 மில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளது. அதனால் போட்ட பணம் கிடைக்கும்.
 
கொடுத்த காசுக்கு என்டர்டெய்ன் செய்கிறது படமும்.