வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : சனி, 30 ஆகஸ்ட் 2014 (15:03 IST)

உலக சினிமா - மர்டரர் (Murderer)

Ling என்ற போலீஸ் அதிகாரி சீரியல் கொலைகளைப் பற்றிய விசாரணையில் இருக்கையில் சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன. அவை, அந்த கொலைகளுக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதான சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. முக்கியமாக அவரது அழைப்பின் பேரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வரும் சக போலீஸ் அதிகாரியான Tai  ஏழாவது மாடியிலிருந்து கீழே விழுந்து கோமா நிலைக்குப் போகிறார். 
தடலென Tai  விழுவதிலிருந்து படம் தொடங்குகிறது. ரத்த சகதியாக கிடக்கும் அவர் தட்டுத் தடுமாறி எழுந்து நிற்க முயற்சிக்க, முழுங்கால் எலும்புகள் நொறுங்கி அப்படியே மீண்டும் தரையோடு ஐக்கியமாகிவிடுகிறார். யாரையும் ஒருகணம் உலுக்கிவிடுகிற காட்சி. முதல் ஷாட்டிலேயே பெரும் அதிர்ச்சியுடன் படத்துடன் ஒன்றிப்போய் விடுகிறோம்.
 
போலீஸ்காரர்கள் வருகிறார்கள். Tai -க்கு போன் செய்து அழைத்த Ling  அதே அடுக்குமாடி குடியிருப்பில் தலையில் அடிபட்டு கிடக்கிறார். அவர் விழித்து பதில் சொன்னால் மட்டுமே Tai  -க்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள முடியும். யார் அவரை தள்ளி விட்டது என்பதையும்.
 

ஆனால் Ling  -க்கு நடந்தவைகள் மறந்து விடுகிறது. ஒருவகையான ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ். அவருக்குப் பதில் வேறெnரு டீம் தொடர் கொலைகளை விசாரணை செய்ய அமர்த்தப்படுகிறது. Ling  சம்பவம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பை சோதனையிடுகையில் ஓரிடத்தில் இரத்தக்கறை படிந்த எலெக்ட்ரிக் ட்ரில்லிங் மெஷினை கண்டு பிடிக்கிறார்.

அந்த மெஷின் அவருடையது. அவரது வீட்டில் ரத்தக்கறை படிந்த அவரது கை அடையாளம் இருப்பதையும் பார்க்கிறார். கொலை செய்யப்பட்டவர்களின் உடம்பில் ட்ரில்லிங் மெஷினால் ஆங்காங்கே துளையிடப்பட்டிருப்பதை Ling பார்க்கிறார். அந்த துளைகளை ஒன்றிணைத்தால் ஒரு முயலின் படம் வருகிறது. அந்த முயல் படம் Ling  -இன் வீட்டிலும் உள்ளது. 
 
Ling  -க்கு மனைவியும் ஒரு மகனும் உண்டு. பார்க்கிற்கு ஒருநாள் செல்லும் போது மகன் இவரது கவனக்குறைவால் தண்ணி தொட்டியினுள் விழுந்து இறந்து விடுகிறான். அதனால் ஐந்து வயது சிறுவன் ஒருவனை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள்.
 

படம் எதிர்பாராத திருப்பங்களுடன் செல்கிறது. கிடைக்கிற தடயங்கள் Ling  -க்கு எதிராக உள்ளன. திடீர் திடீரென நினைவுகள் இழந்து போவதால் அவரால் சரியாக எதையும் கணிக்கவும் இயலவில்லை. Ling  கொலைகாரனையும், கொலைக்கான காரணத்தையும் கண்டுபிடித்தாரா? அவர்தான் கொலைகாரனா?
த்ரில்லிங்காக செல்லும் படம் கடைசி அரை மணி நேரத்தில் யாருமே கணிக்க முடியாத இன்னொரு ட்ராக்குக்குள் நுழைகிறது. அதை மட்டுமே தனிப் படமாக எடுக்கலாம். ஆனால் திடீரென படத்தின் போக்கையே மாற்றும் போது நம்மால் அதனுடன் ஒட்ட முடியாமல் போவது இந்தப் படத்தின் பெரிய குறை என்றுதான் சொல்ல வேண்டும். 
சிலர் வயது ஏறினாலும் உடல்ரீதியாக வளராமல் குழந்தையாகவே இருப்பார்கள். சிலருக்கு அவர்களின் வயதை மீறி தோற்றம் மட்டும் வயதாகிக் கொண்டே போகும். கோடியில் ஒருவருக்கு இருக்கும் இந்த வியாதிக்கும் இந்தப் படத்தின் கதைக்கும் தொடர்பு உண்டு. இதற்கு மேல் சொன்னால் படம் பார்க்கையில் சுவாரஸியம் போய்விடும்.
 

Roy Chow  இயக்கிய இந்த ஹாங்காங் படம் 2009-ல் திரைக்கு வந்தது. சென்ற வருடம் மலையாளத்தில் வெளியான மும்பை போலீஸ் படம் இதன் காப்பி என்று விமர்சனம் எழுந்தது.

படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு விபத்து நடக்கிறது. அதில் போலீஸ் அதிகாரிக்கு நினைவிழந்து போகிறது. அதனை வைத்து காப்பி என்றனர். ஆனால் இரண்டு படங்களுக்குமிடையில் அறுநூறு வித்தியாசங்கள் உண்டு. என்றாலும் மர்டர் கதையினால் மலையாளிகள் இன்ஸ்பயர் ஆகியிருக்கவும் வாய்ப்புள்ளது.
 
நீங்கள் த்ரில்லர் படங்களை ரசிப்பவர் என்றால் மர்டரர் உங்களுக்கான படம்.