வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : திங்கள், 25 ஆகஸ்ட் 2014 (12:59 IST)

உலக சினிமா – ஹானர் (Honour)

உலகில் வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பேர் கௌரவ கொலை செய்யப்படுகின்றனர். சாதி, மதம் மற்றும் பணத்தை முன்னிறுத்தி குடும்பத்தின் கௌரவத்தை காக்க நடத்தப்படும் இந்த கொலைகளில் கொலை செய்யப்படுகிறவர்கள் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் பெண்கள்.
இந்த வருடம் வெளியான ஹானர் திரைப்படம் கௌரவ கொலையை பற்றியது. லண்டனில் விதவை தாய் மற்றும் இரு சகோதரர்களுடன் வசித்து வருகிறவள் மோனா. இளம் பெண். துடிப்பானவள். லண்டனின் நாகரிக உலகத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவள். இந்தியாவைச் சேர்ந்த தன்வீர் என்ற இளைஞனை காதலிக்கிறாள். மோனாவின் குடும்பம் கட்டுப்பெட்டியான பாகிஸ்தான் முஸ்லீம்கள்.
 
எப்போதேனும் சொந்த நாட்டுக்கு திரும்பிப் போக நேர்ந்தால் மகளின் காதல் ஊரில் அகௌரவத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறாள் மோனாவின் தாய். தாயும், சகோதரனும் சேர்ந்து மோனாவை கொலை செய்ய முயல்கின்றனர். முதல் முயற்சியில் மோனா அதிர்ஷ்டவசமாக தப்பிக்கிறாள். அவளை தேடி கண்டுபிடித்து கொலை செய்ய தாயும், மகனும் பணத்துக்கு கொலை செய்யும் ஒருவனை நியமிக்கின்றனர்.
முஸ்லீம்களின் பிற்போக்குத்தனங்கள் குறித்து மிகைபுனைவு நிலவும் உலகில் இந்தப் படம் முஸ்லீம்கள் மீதான அச்சத்தை மேலும் அதிகப்படுத்தும். அதேநேரம் இதுபோன்ற கௌரவ கொலைகள் நாடு முழுவதும் நடந்து கொண்டுதானே இருக்கின்றன?
 
உணவு தயாரித்த பின் தாய்க்கும் சகோதரனுக்கும் தேனீர் தயாரித்து சோபாவில் மோனா ரிலாக்ஸாக அமரும் போது சகோதரன் பின்னாலிருந்து மோனாவின் கழுத்தை நெரிக்கிறான். தாய் அவளது கால்களை பிடித்துக் கொள்கிறாள். இளைய சகோதரன் - சிறுவன் - அவளை புதைக்க பெட்டியை எடுத்து வருகிறான். அந்தப் பெட்டியை மோனாதான் சற்றுமுன் சுத்தம் செய்திருந்தாள். மோனாவை புதைப்பதற்கான பெட்டியை அவளை வைத்தே சுத்தம் செய்ய வைத்தது அவளது தாய்.
 

படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் தாய் கதாபாத்திரம் சில்லிட வைக்கும். மகள் தாலி அறுத்தாலும் பரவாயில்லை, அவளை தொட்ட கீழ் சாதிக்காரனின் தலையை எடுத்துவா என ஆவேசம் கொள்ளும் தாய்களைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் அப்படியொரு தாயை திரையில் பார்க்கையில் மனம் சில்லிடதான் செய்கிறது.
மகளை கண்டு பிடித்து கொலை செய்யும் பொறுப்பை கொலையாளிடம் ஒப்படைக்கும் போது மோனாவின் தாய் கேட்கும் குறுக்கு கேள்விகள், மகளின் இதயத்தை பார்த்த பிறகும் சந்தேகம் கொள்ளும் குயுக்தி என அது தாய் கதாபாத்திரம் போலவே இல்லை. மத நம்பிக்கைகளிலும் அடிப்படைவாதத்திலும் மூழ்கிப் போன ஒரு மத அடிப்படைவாதி போலவே சித்தரிக்கப்பட்டுள்ளது. 
அனைத்து விமர்சனங்களையும் தாண்டி இதுவொரு சுவாரஸியமான த்ரில்லர். பார்வையாளர்களை ஏமாற்றாத சின்னச் சின்ன திருப்பங்களுடன் வேகமாக நகரும் திரைக்கதை. அதற்கு நியாயம் செய்யும் அற்புதமான ஒளிப்பதிவு, இசை மற்றும் எடிட்டிங். Shan Khan  படத்தை இயக்கியுள்ளார்.
 

இரானில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஸோரயா என்ற பெண் கணவனுக்கு துரோகம் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கல்லால் அடித்து கொல்லப்பட்டாள். அந்த நிகழ்வை ஸ்டோனிங் ஆஃப் ஸோரயா எம் என்ற பெயரில் எடுத்தனர் (இந்தப் படம் குறித்த விரிவான கட்டுரை நமது தளத்தில் உள்ளது) அந்தப் படத்தை எடுக்க உதவியது அமெரிக்க ராணுவத்துக்கு பல்வேறு உதவிகள் செய்யும் ப்ளாக் வாட்டர் என்ற நிறுவனம். ஆப்கானிஸ்தான், இராக்கில் அமெரிக்கா நிறுவிய டம்மி அரசாங்கங்களின் ராணுவத்துக்கு இந்த நிறுவனம் பயிற்சி அளித்துள்ளது.
அமெரிக்காவின் எதிரி நாடான இரானில் பெண்கள் மீது செலுத்தப்படும் வன்முறையை உலகுக்கு தெரியப்படுத்துவதன் வழியாக இரான் மீது வெறுப்பை விதைக்க முடியும். என்றேனும் அமெரிக்கா இரான் மீது போர் தொடுக்கும் போது இந்த வெறுப்பு அமெரிக்காவுக்கு ஒரு மாரல் சப்போர்டாக இருக்கும்.
 

ஹானர் படத்தைப் பார்த்த போது இந்தப் படத்துக்குப் பின்னால் இதுபோன்ற ப்ளாக் வாட்டர் ஏதேனும் ஒழுகியிருக்குமோ என்ற ஐயம் எழுந்தது.

திரைப்படத்தை திரைப்படமாக பார்க்க வேண்டும், ஓவியத்தை ஓவியமாக பார்க்க வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்துகிறார்கள். நமக்கென்னவோ அனைத்தையும் அரசியல் சேர்த்து பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.