வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2016 (16:46 IST)

உலக சினிமா - அமோரஸ் பெராஸ்

2000 -இல் அமோரஸ் பெராஸ் திரைப்படம் வெளியான போது, உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களை அது பரவசப்படுத்தியது. அவர்கள் அதுவரைப் பார்த்துவந்த திரைக்கதைகளைவிட சிக்கலான திரைக்கதையில் சுவாரஸியமாக அமோரஸ் பெராஸின் கதை சொல்லப்பட்டிருந்தது. ஒரு படத்தில் ஒரு கதை சொல்லப்பட்டுவந்த நேரத்தில் பல கதைகள் ஒன்றையொன்று இந்தப் படத்தில் ஊடாடியிருந்தன.

 
 
படத்தின் ஆரம்பத்தில் ஆக்டவியோ என்கிற இளைஞன் குண்டடிப்பட்ட தனது நாயை காரில் எடுத்து வருகிறான். அவனை சிலர் காரில் துரத்தி வருகின்றனர். இந்த பரபரப்பான சேஸிங்கில், ஆக்டவியோவின் கார் இன்னொரு காருடன் மோதுகிறது.
 
இந்த ஆரம்பக் காட்சியை தொடர்ந்து ஆக்டோவியோ மற்றும் சூசனாவின் கதை சொல்லப்படுகிறது. சூசனா ஆக்டவியோவின் அண்ணனின் மனைவி, ஒரு குழந்தைக்கு தாய். ஆக்டவியோ சூசனாவை காதலிக்கிறான். இது அவளுக்கும் தெரியும். அவளுடன் தொலைதூரம் போய் எதாவது கடை வைத்து பிழைத்துக் கொள்வதுதான் ஆக்டவியோவின் வாழ்க்கை லட்சியமாக இருக்கிறது.
 
அவன் தனது நாயை நாய்ச் சண்டையில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கிறான். சூசனாவுடன் ஓடிப்போவதற்காக அந்தப் பணத்தை அவளிடமே தந்து சேமித்து வருகிறான்.
 
இந்நிலையில் பெரும் போட்டி ஒன்றில் கலந்து கொள்ள அவனுக்கு அழைப்பு வருகிறது. அதில் கலந்து கொண்டால் நிறைய பணம் கிடைக்கும். ஏற்கனவே சேமித்த பணம், போட்டியில் கிடைக்கும் பணம் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்புவது என ஆக்டவியோ சூசனாவிடம் கூறுகிறான்.
 
ஆனால், முதல்நாளே சூசனா தனது கணவன் குழந்தை மற்றும் பணத்துடன் காணாமல் போகிறாள். ஆக்டவியோ பந்தயத்தில் கலந்து கொள்கிறான். அவன் வெற்றி பெறவிருக்கும் நேரம், எதிராளியான லோக்கல் ரவுடி, தனது துப்பாக்கியால் ஆக்டவியோவின் நாயை சுட்டுவிடுகிறான். ஆக்டவியோ பதிலுக்கு அந்த ரவுடியை கத்தியால் குத்திவிட்டு தப்பிக்கும் போதுதான் அந்த விபத்து நடக்கிறது.
 
இப்போது கதை, வலேரியா என்ற மாடல் அழகியின் வாழ்க்கையை சொல்கிறது. இந்த வலேரியாவின் காருடன்தான் ஆக்டவியோவின் கார் மோதுகிறது. 
 
இந்த விபத்தின் போது, தெருநாய்களை பராமரித்து குப்பைகளை பொறுக்கி வாழ்க்கை நடத்திவரும் வயதானவர் ஆக்டவியோவின் குண்டடிபட்ட நாயை தன்னுடன் எடுத்து செல்கிறார். மூன்றாவதாக அவரது கதையும் சொல்லப்படுகிறது.
 
ஒரு விபத்து... அதில் சம்பந்தமுடைய மூன்று பேர்களின் கதை என்று முன்னும் பின்னுமாக நகரும் இந்தத் திரைக்கதையை மாதிரியாக வைத்தே மணிரத்னம் தனது ஆய்தஎழுத்து படத்தை எடுத்தார். ஆக்டவியோவின் அண்ணனாக வருகிறவரின் தோற்றம், கோபம் அனைத்தையும் நாம் ஆய்தஎழுத்து மாதவினிடம் பார்க்க முடியும். 
 
உலக சினிமா சரித்திரத்தில், திரைக்கதை மீது கவனத்தை குவித்த படங்களில் அமோரஸ் பெராஸையும் முக்கியமாக சொல்லலாம்.