வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (10:18 IST)

உலக சினிமா - ஏ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்

David Cronenberg என்ற பெயர் க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். கனடாவைச் சேர்ந்தவர். இவர் இயக்கும்  படங்கள் குற்றங்களால், குற்றவாளிகளால் நிறைந்தவை. அதனை டேவிட் குரோனன்பெர்க் திரையில் கையாளும் விதம் அழுத்தமானது.

 
2005 -இல் அவரது இயக்கத்தில் வெளிவந்த படம், ஏ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ். அவரது மற்ற படங்களைப் போலவே இதிலும்  அநாவசியமான விவரிப்புகள் இல்லை. கேங்ஸ்டர்னு சொல்றாங்க, அப்படி என்ன அவர் பண்ணுனார் என்று கேள்வி  கேட்பவர்களுக்கு படம் ரசிக்காது. இங்கு அதிகம் சொல்லப்படுவது இல்லை, சொல்லப்படுவதை வைத்து நாம் யூகிப்பதே இவரது  படங்களின் விசேஷம்.
 
டாம் ஸ்டால் சின்ன ஹோட்டல் நடத்தி வருகிறவர். குடும்பப் பறவை. மனைவி, டீன் ஏஜ் மகன், சிறுமியான மகள். ஒருநாள்  அவரது கடையில் இரண்டு பேர் கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர். ஹோட்டலில் பணிபுரியும் பெண்ணை அவர்கள் எந்த  விநாடியும் கொலை செய்யலாம் என்கிற சூழல். இந்தக் காட்சி நமக்கு பதட்டத்தை தரும். ஏனென்றால் திருடவரும் இரண்டு பேரும் எப்படிப்பட்டவர்கள் என்பது நமக்கு தெரியும். இவர்களிடமிருந்துதான் படமே ஆரம்பிக்கும்.
 
ஒரு மோட்டலிலிருந்து இந்த இருவரும் நிதானமாக வெளியே வருவார்கள். பிறகு ஒருவன் மட்டும் மோட்டலின் அலுவலக  அறைக்கு சென்றுவிட்டு திரும்ப வருவான். காரில் தண்ணீர் இருக்காது. இன்னொருவன் அலுவலக அறைக்கு சென்று தண்ணீர்  பிடிக்கச் செல்வான். உள்ளே மோட்டலின் மேனேஜர், பணிப்பெண் இருவரும் கொல்லப்பட்டு கிடப்பார்கள். அவர்களை கடந்து  போய் அவன் தண்ணீர் பிடிப்பான். அப்படியொரு நிதானம், அப்படியொரு இயல்பு.
 
அந்த இருவர்தான் நாயகனின் கடையிலும் கொள்ளையடிக்க முயல்வது. இந்த நேரத்தில் சாதுவான நமது நாயகன் தடாலடியாக  செயல்பட்டு இரண்டு பேரையும் சுட்டுக் கொல்வான். இந்த சம்பவம் அவனை அந்த நகரத்தின் ஹீரோவாக உயர்த்தும்.
 
அதேநேரம் இரண்டு பேர் - பிலடெல்பியாவைச் சேர்ந்த கேங்ஸ்டர்ஸ் - ஹோட்டலுக்கு நாயகனை தேடி வருவார்கள். அவர்கள்  தேடிவரும் ஜோய் குஸாக் நமது நாயகன் என்பது அவர்களின் சந்தேகம். சந்தேகமில்லை, உறுதியாக அப்படித்தான்  நினைக்கிறார்கள். இந்த அந்நியர்களின் வரவும், அவர்கள் நாயகனின் குடும்பத்தை ஃபாலோ செய்வதும் அந்த குடும்பத்தில் சின்ன  பதட்டத்தை ஏற்படுத்துகிறது.
 
உண்மையில் நமது நாயகன் யார்? பிலடெல்பியா கேங்ஸ்டர்கள் சொல்வது போல், முன்னாள் கில்லர் ஜோய் தானா? இந்தப்  பிரச்சனையால் நாயகனின் குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது? அவர்கள் நம் நாயகனை நம்புகிறார்களா?
 
இந்த கேள்விகளுக்கான பதில்களை நிதானமாக சொல்கிறது படம்.
 
கேங்ஸ்டர்கள் எப்போதும் கத்தி பேசுவதில்லை. துப்பாக்கிமுனையில் ஒருவரை நிறுத்தி பிரசங்கம் செய்வதில்லை. அவர்களின்  இருண்ட உலகம் எப்படிப்பட்டது, அவர்களின் குணாம்சம் எப்படி இருக்கும் என்பதை வழக்கம் போல் இந்தப் படத்திலும்  அழுத்தமாக பதிய வைக்கிறார் இயக்குனர்.
 
க்ரைம் த்ரில்லர் படங்களின் ரசிகர்களுக்கு ஏ ஸ்டோரி ஆஃப் வயலன்ஸ் சிறந்த கையேடு.