வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 30 ஜனவரி 2015 (12:21 IST)

உலக சினிமா - Winter Sleep

சமகால இயக்குனர்களில் முக்கியமானவர், நூரி பில்கே சைலான். துருக்கியைச் சேர்ந்த இவரது வின்டர் ஸ்லீப் திரைப்படம் 2014 கான் திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படத்துக்கான OPalme d’r  விருதினை பெற்றது.
தீவிர சினிமா ரசிகர்களுக்கு சைலானின் பெயர் ஏற்கனவே பரிட்சயமானது. அவரது ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் சைலானின் மீதுள்ள எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவரது முக்கிய திரைப்படமான த்ரீ மங்கிஸ் குறித்த விரிவான கட்டுரை நமது தளத்தில் உள்ளது.
 
மனித மனதின் புதிர்பாதைகளை பின்தொடர்வதுதான் சைலானின் திரைப்படங்களின் முக்கிய அம்சமாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது. படத்தில் சொல்லப்படும் கதை மற்றும் காட்சிகளின் வழியே சைலானின் திரைப்படத்தை விளக்க முற்படுவது நீரை கையால் அள்ளுவதுக்கு சமமானது. 
 
வின்டர் ஸ்லீப் திரைப்படத்தில் ஐதின் என்ற மனிதனை குறித்து பிரதானமாக சொல்லப்படுகிறது. அவரை மையப்படுத்தியே பிற கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன.
 
துருக்கியின் மலைப்பகுதி ஒன்றில் ஹோட்டல் நடத்துகிறவர் ஐதின். தந்தை வழிவந்த சொத்துக்களால் சிரமம் எதுவுமின்றி வாழும் பணக்காரர். தன்னை ஒரு ஆபத்பாந்தவனாகவும், பிறருக்காக வாழ்பவராகவும் காட்டிக் கொள்ளும் ஒரு போலி உலகத்தில் வாழ்கிறவர். அந்த போலித்தனத்தை போலித்தனம் என்று அறியாதவர். அதன் காரணமாக உறவின் பிணைப்பை அறிந்து கொள்ளவோ அதனை பேணவோ தெரியாதவர். அடுத்தவரை பழிப்பதன் வழியாக, அவர்களின் இயலாமையை சுட்டிக் காட்டுவதன் மூலம் தனக்கான இருப்பை ஸ்திரப்படுத்திக் கொள்கிறவர்.

ஐதினைப் போல இந்த குணமாகவே வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள். அதேபோல், உலகில் பிறந்த எல்லா மனிதனுக்குள்ளும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இந்தக் குணம் வெளியே தலைகாட்டியிருக்கும். அதுவே இந்தப் படத்தை நமக்கு மிகநெருக்கமானதாக உணரச் செய்கிறது.
ஐதின் தனது போலித்தனத்திலிருந்து விடுபடுட்டு அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நிலைக்கு திரும்புவதை இந்தப் படத்தில் சிறப்பாக காட்சியிப்படுத்தியுள்ளார் சைலான். அவரது பிற படங்களைப் போலவே ஒளிப்பதிவு படத்தை வேறெnரு தளத்துக்கு இட்டுச் செல்கிறது. அவரது கதை சொல்லும் பாணி மெருகேறி பிரகாசிப்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
 
நிதானமான அதேநேரம் அழுத்தமான காட்சிகள், சினிமாவை பொழுதுபோக்காக அணுகும் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும். படம்வேறு கிட்டத்தட்ட மூன்றேகால் மணிநேரம் ஓடுகிறது. 
 
வின்டர் ஸ்லீப் தீவிர சினிமா ரசிகர்களுக்கான அற்புதம்.