வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : சனி, 11 அக்டோபர் 2014 (14:52 IST)

உலக சினிமா - The Two Faces of January

இந்த வருடம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில், த டூ ஃபேசஸ் ஆஃப் ஜனவரி திரையிடப்பட்டது. ட்ரைவ், 47 ரோனின் போன்ற முக்கிய திரைப்படங்களின் திரைக்கதையாசிரியரான Hossein Amini  இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இயக்குனராக இது அவரது முதல் படம்.
1962-இல் அமெரிக்கரான செஸ்டர் மெக்ஃபார்லேண்ட் தனது மனைவியுடன் கிரீஸுக்கு சுற்றுலாப் பயணியாக வருகிறார். ஏதென்ஸில் அவர்கள் ஊர்சுற்றிப் பார்க்கும் போது ரெய்டல் என்ற டூரிஸ்ட் கைடுடன் அறிமுகம் ஏற்படுகிறது. ரெய்டல் அமெரிக்க இளைஞன். செஸ்டர் அவனது தந்தையை ஞாபகப்படுத்துவதால் அந்த தம்பதியுடன் நெருக்கமாக பழகுகிறான்.
ரம்மியமான இரவு டின்னருக்குப் பின் ஹோட்டல் அறைக்கு திரும்பும் செஸ்டரைத் தேடி ஒரு நபர் வருகிறார். அவர் ஒரு தனியார் துப்பறிவாளர். செஸ்டர் அமெரிக்காவில் தன்னை நம்பி பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்களை ஏமாற்றி ஏதென்ஸ் வந்திருப்பதை அறிந்து கொள்கிறோம். அந்த துப்பறிவாளன் செஸ்டரால் ஏமாற்றப்பட்டவர்களால் நியமிக்கப்பட்டவர்.

இந்தப் படத்தின் சிறப்பம்சம், கிளைமாக்ஸை நோக்கி பாயாமல் மெது மெதுவாக சஸ்பென்ஸை விவரித்து செல்கிறது படம். ஹோட்டலில் நடக்கும் கைகலப்பில் துப்பறிவாளன் எதிர்பாராமல் இறந்துவிட பிரச்சனை உருவாகிறது. ரெய்டல் செஸ்டருக்கும் அவரது மனைவிக்கும் உதவ முன் வருகிறான். ஆனால் செஸ்டரால் ரெய்டலை முழுமையாக நம்ப முடியவில்லை. அவன் தனது மனைவியுடன் காட்டும் நெருக்கம் அவரை எரிச்சலடைய வைக்கிறது. செஸ்டருக்குள் ஏற்படும் இந்த மாற்றங்கள் பிரமாதமாக படமாக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் படம், ரோமன் பொலான்ஸ்கியின், நைஃப் இன் த வாட்டர் திரைப்படத்தை நமக்கு ஞாபப்படுத்துகிறது.
 
குற்றம் புரிந்தவனை குற்றவுணர்வும், மனசாட்சியும் எப்போதும் பின்தொடர்ந்தபடியே இருக்கும். அது வெவ்வேறு வடிவங்களில் அவர்களை துரத்தும். செஸ்டரின் விஷயத்தில் ரெய்டல் மற்றும் அவரது மனைவி மீதான சந்தேகமாக செஸ்டரை நிம்மதியிழக்க வைக்கிறது. பலரை ஏமாற்றிய ஒருவனுக்கு அறிமுகமில்லாத ஒருவனை எப்படி நம்ப முடியும்? அந்த நம்பிக்கையின்மை செஸ்டரை அனைத்தும் இழந்து உயிரையும் விடும் அளவுக்கு இக்கட்டான நிலைக்கு கொண்டு செல்கிறது.
நம்பிக்கை என்பது மிக  உயர்ந்த விஷயம். நம்பிக்கைத் துரோகம் செய்த ஒருவனை அவனது நம்பிக்கையின்மையே அழித்து விடுகிறது. செஸ்டரின் இறுதி கணத்தில் நமக்கு அவர் மீது பரிதாபம் ஏற்படுகிறது. படத்தில் அவர் குற்றவாளியாக இல்லாமல் பலவீனங்கள் மிகுந்த நம்மைப் போன்ற சராசரி மனிதனாக சித்தரிக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணம்.  
ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் படத்தை பார்க்கிற உணர்வை இந்தப் படம் தருகிறது. காட்சிகளின் பின்னணியில் வரும் கிரீஸின் வெவ்வேறு நிலக்காட்சிகள் கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு கூடுதல் அழுத்தம் தருகிறது. இசை, ஒளிப்பதிவு, நடிப்பு, திரைக்கதை என அனைத்தும் கச்சிதமாக அமைந்த சஸ்பென்ஸ் திரைப்படம் என்று இதனைச் சொல்லலாம்.
 
செஸ்டராக Viggo Mortensen -யும், அவரது மனைவியாக Kirsten Dunst -யும், ரெய்டலாக Oscar Isaac -யும் மிகையில்லாத நடிப்பை வழங்கியுள்ளனர். 1964 -ஆம் ஆண்டு இதே பெயரில் Patricia Highsmith எழுதிய நாவலைத் தழுவி Hossein Amini  இந்தப் படத்தை எடுத்துள்ளார்.