வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Updated : செவ்வாய், 17 பிப்ரவரி 2015 (13:08 IST)

ஆஸ்கர் பீவர் - The Imitation Game

யாரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கும் அறிவுஜீவிப்படம், த இமிடேஷன் கேம். படத்தின் கதை, கதாபாத்திரம், திரைக்கதை, நடிப்பு, வசனங்கள் என அனைத்தும் புத்திசாலித்தனம் என்கிற நேர்கோட்டில் சந்திக்கிற அபூர்வமான திரைப்படம் என இதனை சொல்லலாம்.
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனின் நாஜிப்படைகளை ஒடுக்கியதில் பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுக்கும், படைவீரர்களுக்கும் பிரதான பங்கிருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் வெற்றியின் நாயகர்களாக இவர்கள்தான் இதுவரை நினைவுகூரப்பட்டும், கொண்டாடப்பட்டும் வருகிறார்கள். த இமிடேஷன் கேம் திரைப்படம், போரின் வெற்றிக்கு இவர்கள் யாரும் காரணமில்லை. சில பிரிட்டன் அறிவுஜீவிகளும் அவர்கள் உருவாக்கிய மகத்தான எந்திரமும்தான் காரணம் என்கிறது. நினைவில் கொள்க, இந்தப் படம் கற்பனை கதையல்ல, வரலாற்றில் வாழ்ந்து மறைந்த ஆலன் டூரிங் என்ற மேதையின் நிஜக்கதை.

1939 -இல் பிரிட்டன் ஜெர்மனியுடன் போர் அறிப்பை வெளியிடுகிறது. ஜெர்மன் படைகள் ஐரோப்பாவின் ஒவ்வொரு நாடாக துவசம் செய்து முன்னேறுகிறது. நாஜிப் படைகளுக்கு அனுப்பப்படும் சங்கேத பாஷைகளை பிரிட்டன், சோவியத் ரஷ்யா உள்பட எந்த நாட்டு வல்லுனர்களாலும் டீகோட் செய்ய முடிவதில்லை. சங்கேத பாஷைகளை அறிய ஜெர்மன் எனிக்மா என்ற இயந்திரத்தை பயன்படுத்துகிறது. அந்த மெஷினில் ஒன்று பிரிட்டன் அதிகாரிகளிடமும் உள்ளது. ஆனால், கோடிக்கணக்கான சாத்தியங்களிலிருந்து ஜெர்மனியர்கள் அனுப்பும் செய்தியை அவர்களால் கண்டறிய முடிவதில்லை.
 
எனிக்மாவை ஆராய்ச்சி செய்யும் அணியில் தானாக வந்து சேர்கிறார் ஆலன் டூரிங். ஏற்கனவே அங்கிருக்கும் பலரை நீக்கம் செய்து, கிராஸ் வேர்ட் எனும் குறுக்கெழுத்துப் போட்டியில் வல்லவர்களான சிலரை பணிக்கு அமர்த்திக் கொள்கிறார். மேலும், எனிக்மா என்ற எந்திரத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க, ஒரு எந்திரத்தால் மட்டுமே சாத்தியம் என்று ஒரு எந்திரத்தையும் செய்து அதற்கு கிறிஸ்டோபர் என பெயரும் இடுகிறார்.

பல வருட ஆராய்ச்சிக்குப் பின்னால் ஜெர்மன் படைகளின் சங்கேத பாஷையை டூரிங்கின் எந்திரம் டிகோட் செய்கிறது. இன்னும் நில நிமிடங்களில் நடக்கயிருக்கும் பயங்கர தாக்குதலை அவர்கள் அறிந்து கொள்கிறார்கள். அதனை தடுத்து நிறுத்த டூரிங்கின் சக அலுவலகர்கள் முயற்சி செய்ய, டூரிங் அவர்களை தடுக்கிறார்.
பல வருட கடின ஆராய்ச்சிக்குப் பின் அவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. உடனடியாக அதனை செயல்படுத்தி ஜெர்மன் படையின் தாக்குதலை நிறுத்தினால், அவர்களுக்கு சந்தேகம்வரும், உடனே எனிக்மாவின் செட்டிங்கை மாற்றி விடுவார்கள். பிறகு எப்போதும் அவர்களின் சங்கேத பாஷையை அறிந்து கொள்ள முடியாமல் போகும். அதனால், ஜெர்மன் படைகளின் சங்கேத பாஷையை தெரிந்து கொண்டோம் என்பது தெரியாத அளவுக்கு குறைந்தபட்ச நடிவடிக்கைகளின் மூலம் படிப்படியாக ஜெர்மன் படைகளை தோற்கடித்து போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்கிறார் டூரிங். அவரது கருத்து ஏற்றுக் கொள்ளப்படுகிறது. படிப்படியாக ஜெர்மன் படைகள் முறியடிக்கப்பட்டு கடைசியில் முற்றாக அழிக்கப்படுகிறன. பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வெற்றியடைகின்றன. 
 
1941 -க்குப் பிறகு நடந்த இரண்டாம் உலகப் போர் என்பது டூரிங் தலைமையிலான சில அறிவுஜீவிகளினால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு விளையாட்டு என்கிறது இந்த படம். அவர்கள் இல்லையேல் வெற்றி சாத்தியமாகியிருக்காது என இப்படம் அழுத்தி சொல்கிறது. டூரிங் கண்டுபிடித்த கிறிஸ்டோபர் என்ற எந்திரம்தான் இப்போதைய நவீன கம்ப்யூட்டரின் முன்மாதிரி எனவும் இப்படம் விளக்குகிறது. 
 
நார்வேயைச் சேர்ந்த Morten Tyldum  இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நார்வேயில் படம் இயக்கி வந்த இவர் இயக்கியிருக்கும் முதல் பிரிட்டன் திரைப்படம் இது. எழுத்தாளர் Andrew Hodges எழுதிய ஆலன் டூரிங்கின் பயோகிராஃபியான, Alan Turing: The Enigma  -என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதை எழுதப்பட்டது.
 
டூரிங் ஓரினப்புணர்ச்சியாளர். போருக்குப் பின் ஓரினப்புணர்ச்சிக்காக - அப்போது பிரிட்டனில் ஓரினப்புணர்ச்சி சட்டவிரோதம் - ஆண்மை நீக்கம் (Chemical castration)  செய்யப்பட்டார். 1954 -இல் தனது 41 வது வயதில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
 
டூரிங்கின் திறமையும், அறிவும், அர்ப்பணிப்பும் அவரை எப்போதும் மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தியே வைத்திருந்தது. தனது முயற்சிக்கு ஆதரவாக இருப்பார் என்றே தன்னுடன் பணிபுரிந்த பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். சங்கேஷ பாஷையின்பால் டூரிங்கின் ஆர்வத்தை திருப்பியது கிறிஸ்டோபர் என்ற அவரது பள்ளிப்பருவ நண்பன். அவனது நினைவாகவே தனது எந்திரத்துக்கு அவர் கிறிஸ்டோபர் என பெயரிட்டார்.

டூரிங்கின் திறமைக்கும், அர்ப்பணிப்புக்கும் எவ்வித வெகுமதியும் கிடைக்கவில்லை என்பதுடன் தண்டனைதான் பரிசாக கிடைத்தது. ஓரினப்புணர்ச்சிக்கு தண்டனையாக சிறையை தேர்வு செய்வதற்குப் பதில் ஆண்மை நீக்கத்துக்கு டூரிங் ஒப்புக் கொண்டதுக்கு கிறிஸ்டோபர் என்ற அவரது எந்திரம்தான் காரணம். அது மட்டும்தான் அவரது வாழ்நாள் நண்பனாக அவரது தனிமைக்கு துணையாக இருந்தது. சிறைக்குச் சென்றால் கிறிஸ்டோபரை பிரிய நேரிடும் என்பதற்காகவே அவர் ஆண்மை நீக்கத்துக்கு ஒப்புக் கொண்டார். 
டூரிங்கைக் குறித்து சமீபத்தில்தான் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2009 -இல் பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் பிரிட்டீஷ் அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக பொது மன்னிப்பு கேட்டுக் கொண்டார். 2013 -இல் இரண்டாம் ராணி எலிசபெத் டூரிங் மீதான அத்தனை குற்றங்களையும் வாபஸ் வாங்கிக் கொள்வதாக அறிவித்தார்.
 
டூரிங்கின் பள்ளிப் பருவம், எனிக்மாவை டிகோட் செய்ய முயன்ற போர் காலம் மற்றும் போருக்குப் பிந்தைய இறுதிகாலம் என மூன்று காலங்களில் படம் முன்னும் பின்னும் பயணிக்கிறது. படத்தின் டெம்போவை இந்த முன்பின் திரைக்கதையின் மூலம் இறுதிவரை இழக்காமல் கொண்டு சென்றுள்ளார் திரைக்கதையாசிரியர். சமீபத்தில் இவ்வளவு அற்புதமான புத்திசாலித்தனமான வசனங்கள் வேறு எந்தப் படத்திலும் இடம்பெற்றதில்லை. படத்தின் நாயகன் கொஞ்சம் எக்ஸ்சென்ரிக்கான அறிவுஜீவி என்பதால் படத்துடன் மிகஆப்டாக இந்த வசனங்கள் பொருந்திப் போகின்றன.
 
சிறந்த திரைப்படம் உள்பட 8 ஆஸ்கருக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருது இந்தப் படத்துக்கு கிடைக்கும். சிறந்தப் படத்துக்கான விருது கிடைத்தால் நிச்சயமாக அது தவறான முடிவாக இருக்காது.