1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By Sasikala
Last Updated : வியாழன், 3 மார்ச் 2016 (13:04 IST)

ஆஸ்கரில் சிறந்த படத்துக்கான விருது வென்ற ஸ்பாட்லைட்

ஆஸ்கரில் சிறந்த படத்துக்கான விருது வென்ற ஸ்பாட்லைட்

88-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த படம், சிறந்த ஒரிஜினல் திரைக்கதை என இரு பிரிவுகளில் ஸ்பாட்லைட் திரைப்படம் விருது வென்றது. இதுவொரு சரித்திர நிகழ்வு என்றால் மிகையில்லை.


 
 
அமெரிக்காவின் பாஸ்டன் நகரை மையமாகக் கொண்டு வெளிவரும் பிரபல பத்திரிகை, த பாஸ்டன் க்ளோப். இந்த பத்திரிகையின் இன்வெஸ்டிகேட்டிங் டீம், ஸ்பாட் லைட். இவர்கள் பாஸ்டன் நகரில் உள்ள கத்தோலிக்க பாதிரிமார்களின் பாலியல் அத்து மீறல்கள் குறித்து புலனாய்வு செய்கின்றனர். சிறுவர்களை பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கும் ஒரு பாதிரியாரை முன்வைத்து தொடங்கும் இந்த விசாரணை அடுக்கடுக்கான அதிர்ச்சிகளை ஸ்பாட் லைட் டீமுக்கு தருகிறது. 
 
அரை டஜன் பாதிரியார்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற அவர்களின் கணிப்பு பொய்கிறது. ஏறக்குறைய 90 பாதிரியார்கள், சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வருகிறது. அமெரிக்கா முழுவதும் இந்த எண்ணிக்கை ஆயிரங்களை தொடுகிறது. 
 
ரோமன் கத்தோலிக்கர்கள் மிகுதியாக உள்ள யுஎஸ்ஸில் ஸ்பாட் லைட் டீம் பல்வேறு எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி வருகிறது. செப்டம்பர் 11 நடக்கும் இரட்டை கோபுர தாக்குதலும் அவர்களுக்கு இடையூறாக வந்து சேர்கிறது. இதையெல்லாம் கடந்து, ஆதாரங்களுடன் பாதிரியார்களின் சிறுவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்களை வெளியிடுகிறார்கள். 2003 -இல் நடக்கும் இந்த சம்பவம், யுஎஸ்ஸில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகிறது.
 
இந்த உண்மைச் சம்பவத்தை வைத்து ஸ்பாட்லைட் திரைப்படத்தை டாம் மெக்கார்த்தி இயக்கியுள்ளார். சர்ச் விவகாரம் என்பதால் இந்த பாலியல் அத்துமீறல்கள் அதிகம் வெளிவராமலே இருந்தன. அது எல்லை மீறும்போது வாடிகானே தலையிட்டு சம்பந்தப்பட்ட பாதிரியார்களை இடமாற்றம் செய்து விஷயத்தை மறைத்திருக்கிறது.
 
ஸ்பாட்லைட்டில் இந்த விவகாரம் வெளிவந்த பின் நூற்றுக்கணக்கானவர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேச முன்வந்தனர். 
 
மதம் என்பது ஒரு நிறுவனத்தால் கட்டுப்படுத்தும் போது, பக்தியின் பெயரால் பலரும் அட்டூழியங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களை பக்தியின் பெயரால் காட்டிக் கொண்டுக்காமல் இருப்பதுடன், பாதுகாக்கவும் செய்கிறார்கள். ஸ்பாட் லைட் திரைப்படம் உண்மையை நிர்வாணமாக முன் வைக்கிறது.
 
சிறந்த திரைப்படம், சிறந்த ஒரிஜினில் திரைக்கதை என முக்கியமான இரு விருதுகள் பெற அனைத்துவிதத்திலும் தகுதியான படம் இது.