1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By Sasikala
Last Updated : வியாழன், 18 பிப்ரவரி 2016 (17:47 IST)

ஆஸ்கர் பீவர் - த ரெவனென்ட்

ஆஸ்கர் பீவர் - த ரெவனென்ட்

மாத இறுதியில் ஆஸ்கர் விருதுகள் அளிக்கப்பட உள்ளன. இந்த வருட விருதுப் போட்டியில் 12 பரிந்துரைகளுடன் முன்னிலையில் உள்ளது த ரெவனென்ட்.


 


அலேஜான்ட்ரோ கொன்சலஸ் இனாரித்து இயக்கத்தில், லியோனார்டோ டிகாப்ரியோ நடித்துள்ள இந்தப் படம் குறைந்தது 4 விருதுகளையாவது வெல்லும் என்பது நிபுணர்களின் கருத்து.
 
1823 -ஆம் ஆண்டு அமெரிக்காவின் பனி படர்ந்த மிசௌரி பகுதியில் தோலுக்காக விலங்கு வேட்டையில் கேப்டன் ஆன்ட்ரூ ஹென்றியின் தலைமையில் ஒரு குழு ஈடுபட்டிருக்கிறது. அப்போது அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்கள் அவர்கள் மீது கொலைவெறி தாக்குதலை தொடுக்கின்றனர். பலர் இறந்துபோகிறார்கள், தோல்களில் கணிசமானவை செவ்விந்தியர்களிடம் மாட்டிக் கொள்கிறது. 
 
தப்பிப் பிழைத்தவர்களை, அப்பிராந்தியத்தை நன்கு அறிந்த ஹ்யூக் கிளாஸ் வழிநடத்துகின்றான். சிறுவனான கிளாஸின் மகனும் அவனுடன் இருக்கிறான். இந்நிலையில் ஒரு  கரடியிடம் கிளாஸ் மாட்டிக் கொள்கிறான். கரடி உயிர்விட, கிளாஸ் எழுந்து நிற்க முடியாத அளவுக்கு காயம்படுகிறான். கேப்டனும் பிறரும் கிளாஸை படுகையில் கிடத்தி தூக்கிச் செல்கிறார்கள். ஒருகட்டத்தில் அது முடியாமல் போக, கிளாஸ் 
உயிர்துறக்கும்வரை அவனுடன் இருந்து இறுதிச்சடங்கை நடத்த யார் முன்வருகிறார்களோ, அவர்களுக்கு அதிக பணம் தருவதாக கூறுகிறார் கேப்டன். கிளாஸின் மகனும், வேறொரு சிறுவனும், கிளாஸையும் அவனது மகனையும் வெறுக்கும் ஜான் பிட்ஸ்ஹெரால்டு என்பவனும் கிளாஸுடன் தங்குகிறார்கள். 
 
ஆனால், நிலைமை மாறுகிறது. கிளாஸின் மகனை ஜான்; கொன்றுவிடுகிறான். மகன் கொலை செய்யப்படுவதை தடுக்க முடியாமல் படுக்கையில் துடித்துப் போகிறான் கிளாஸ். அவனையும் உயிரோடு புதைக்கிறான் ஜான்.
 
ஒருவழியாக தனது புதைக்குழியிலிருந்து தப்பிக்கும் கிளாஸ், கடும் பனியையும், பலமான காயங்களையும் தாண்டி எப்படி ஜானை பழிவாங்குகிறான் என்பது கதை.
 
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம், யதர்த்தமாக அமைய வேண்டும் என்பதற்காக மைனஸ் 25 முதல் 30 டிகிரி இருக்கும் மலைப்பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினர். ஒளிப்பதிவாளர் இமானுவேல் லெபோஸ்கி இயற்கை ஒளியையே பெரும்பாலும் பயன்படுத்தினார். 
 
படத்தின் பிரதான அம்சம் ஒளிப்பதிவும் டிகாப்ரியோவின் நடிப்பும். இதுவரை அரை டஜனுக்கும் மேல் விருதுகளை பெற்றிருக்கும் அவர் இந்தமுறை கண்டிப்பாக ஆஸ்கர் வாங்குவார் என்பதே அனைவரின் கணிப்பு. அதேபோல் இமானுவேலுக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் கிடைக்க பெரும் வாய்ப்புள்ளது. சென்றமுறை த பேர்ட்மேன் படத்துக்காக இனாரித்துக்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் கிடைத்தது. அதனால், இந்த வருடம் கிடைக்குமா என்பது சந்தேகம்.
 
காட்சிவடிவிலான பெரும் அனுபவத்துக்கு த ரெவனென்ட் உத்தரவாதம்.