வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By ஜே.பி.ஆர்
Last Updated : புதன், 8 அக்டோபர் 2014 (09:50 IST)

உலக சினிமா - நோ மெர்சி (No Mercy)

தென் கொரியப் படமான நோ மெர்சி ஒரு பழி வாங்கும் படம். உலகில் வெளியாகியிருக்கும் குரூரமான பழி வாங்கும் படங்களில் நோ மெர்சிக்கு முக்கிய இடமுண்டு. ஒரு மனிதனின் ஆன்மாவையும் சேர்த்து பழி வாங்குவது எப்படி என்பதை நோ மெர்சியை பார்த்து அறிந்து கொள்ளலாம்.
 
Kang Min-Ho  நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்டிபிக் இன்வெஸ்டிகேஷனில் பணிபுரியும் ஒரு மருத்துவர். தலை, கால், கைகள் தனித்தனியே துண்டிக்கப்பட்ட ஒரு பாலியல் தொழிலாளியின் போஸ்ட் மார்ட்டத்தை செய்யும் பொறுப்பு அவருக்கு வருகிறது. போஸ்ட் மார்டத்தின் வழியாக அவர் கண்டுபிடிக்கும் உண்மைகள் கொலையாளி யார் என்பதை உடனே கண்டுபிடிக்க உதவுகிறது.
கொலையாளி Lee Sung-Ho  என்ற ஒரு சமூகப் போராளி. ஆறு மாசடைவது குறித்த போராட்டத்தை முன்னெடுத்து செல்கிற இளைஞன். போலியோவால் பாதிக்கப்பட்டு ஊன்றுகோலின் துணையுடன் நடமாடுகிறவன். கைது செய்யப்பட்டதும் விசாரணை அதிகாரியிடம் குற்றத்தை ஒத்துக் கொள்கிறான்.
 
இந்நிலையில் 13 வருடங்களாக அமெரிக்காவில் இருக்கும் மருத்துவரின் மகள் தாயகம் திரும்புகிறாள். அவளை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருக்கிறார் மருத்துவர். அப்போது அங்கு வருகிற இளைஞன் ஒருவன், Lee Sung-Ho  தரச் சொன்னதாக சில போட்டோக்களை மருத்துவரிடம் தந்து விட்டு செல்கிறான். தனது மகள் கடத்தப்பட்டு எங்கேயோ கட்டி வைக்கப்பட்டிருப்பதை அந்தப் புகைப்படங்களிலிருந்து மருத்துவர் தெரிந்து கொள்கிறார். உடனே Lee Sung-Ho  -ஐ காணச் செல்கிறார். மகள் வேண்டுமென்றால் தன்னை அந்த கொலை வழக்கிலிருந்து காப்பாற்றும்படி கூறுகிறான் Lee Sung-Ho 

மருத்துவருக்கு வேறு வழியில்லை. Lee Sung-Ho  கொலைகாரன் இல்லை என்பதை நிரூபிக்க தான் கண்டறிந்த உண்மைகளுக்கு எதிராக அவரே அலிபிகளை ஏற்படுத்துகிறார். 
 
Lee Sung-Ho  எதற்காக தான் மாட்டிக் கொள்ளும் வகையில் தடயங்களை ஏற்படுத்தி கைதாகிறான்? ஏன் குற்றத்தை ஒப்புக் கொண்டபின் தன்னை விடுக்கும்படி ஒரு இக்கட்டை மருத்துவருக்கு ஏற்படுத்துகிறான்? 
 
கடற்கரை கோரை புற்களுக்கு நடுவில் கொலையுண்ட பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்படும் ஆரம்ப காட்சிகளில் நாம் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகிறேnம். ஆனால் Lee Sung-Ho  தன்னை விடுக்கும்படி மருத்துவருக்கு நெருக்கடி ஏற்படுத்துகையில் - மருத்துவரிடம் அவன் கணக்குத் தீர்க்க வேண்டிய ஏதோ ஒன்று இருக்கிறது என்பது நமக்கு தெரிய வந்தாலும் - அதுவொரு சாதாரண பழிவாங்கும் கதைக்குள் நுழைகிறது. 
பல வருடங்களுக்கு முன் Lee Sung-Ho  சிறுவனாக இருக்கையில் அவனது பள்ளியில் படிக்கும் சகோதரி செல்வாக்கு மிகுந்த குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். அவள் விரும்பிதான் அவர்களுடன் உடலுறவு கொண்டாள் என சக மாணவி சாட்சியம் சொல்கிறாள் (அவள்தான் கொலை செய்யப்பட்ட பாலியல் தொழிலாளி).

பலாத்காரம் நடந்ததற்கான தடயம் மாணவியின் பிறப்புறுப்பில் இல்லை, அது சுமூகமாக நடந்த உடலுறவு என்று சில நிர்ப்பந்தங்களால் மாற்றிச் சொல்கிறார் மருத்துவர். குற்றவாளிகள் விடுவிக்கப்படுகின்றனர். Lee Sung-Ho  -இன் சகோதரி தற்கொலை செய்து கொள்கிறாள். 
 
மருத்துவர் அன்று செய்த தவறுக்காக, தற்கொலை செய்து கொண்ட சகோதரியின் பொருட்டு இப்போது Lee Sung-Ho  பழிவாங்குகிறான். 

சராசரியான பழிவாங்கும் படமாகச் செல்லும் நோ மெர்சி கடைசி பத்து நிமிடங்களில் நம்மை உறைய வைக்கும் ஒரு உண்மைக்குள் கொண்டு செல்கிறது. உயிரோடு இருந்தால் தனக்குத் தரப்பட்ட தண்டனையின் நினைவுகள் துரத்திக் கொண்டேயிருக்கும், சாவைவிட அந்த நினைவுகள் நரகம் என்பதை உணர்ந்து கொள்ளும் மருத்துவர் துப்பாக்கியால் சுட்டு தன்னை மாய்த்துக் கொள்கிறார். 
தனது தொழிலை துஷ்பிரயோகம் செய்த ஒரு மருத்துவரை இதைவிட மோசமாக, குரூரமாக தண்டிக்க முடியாது. அந்த கடைசி பத்து நிமிட உண்மை படம் பார்க்கும் நம்மையும் பலநாள் தூங்க விடாமல் செய்யக் கூடியது.
 
2010 -இல் வெளிவந்த இந்தப் படத்தை Hyeong-Joon Kim  இயக்கியிருந்தார். கொரியாவின் பிரபலமான ஓல்ட் பாய் படத்தின் அம்சங்களை இந்தப் படத்தில் காணலாம். அதேநேரம் அதிலிருந்து இந்தப் படம் முற்றிலும் மாறுபட்டது. நமது மனசாட்சியை புதுப்பித்துக் கொள்ள நோ மெர்சி உதவும்.