வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By ஜே.பி.ஆர்
Last Updated : செவ்வாய், 25 நவம்பர் 2014 (10:42 IST)

உலக சினிமா - Metro Manila

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல இயக்குனர் ஷான் எல்லிஸ் இயக்கத்தில் 2013 -ஆம் ஆண்டு மெட்ரோ மணிலா வெளியானது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் பிலிப்பைன்ஸை சேர்ந்த நடிகர்களே நடித்திருந்தனர். 
 
எல்லா ஆசிய நகரங்களையும் போல மக்கள் தொகையால் பிதுங்கி வழியும் நகரம் மணிலா. மிகப்பெரிய பணக்காரர்கள் தொடங்கி பரம ஏழைகள்வரை தன்னகத்தே கொண்டது. இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் எப்படி சரி செய்ய முடியாதவையோ அதேபோல் இந்த ஏற்றத்தாழ்வுகளால் உருவாக்கப்பட்ட சமூக விரோதிகளும். ஜனநெரிசல், குற்றம், வேலையின்மை, கொண்டாட்டம், இடமின்மை போன்றவற்றால் நொதித்துக் கொண்டிருக்கும் பூமிக்கு Oscar Ramirez   என்ற விவசாயி தனது இளம் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் பஞ்சம் பிழைக்க வருகிறான். 
 
பிலிப்பைன்ஸின் வடக்குப் பகுதியில் விவசாயம் செய்து பிழைத்த அவனுக்கு அதன் மூலம் கிடைக்கும் வருவாய் விதை நெல்லுக்கும் போதவில்லை. வறுமை அவனை நகரத்தை நோக்கி துரத்துகிறது. அறிமுகமில்லாத நகரத்தில் அந்த குடும்பம் உணவுக்கும், இருப்பிடத்துக்கும், வேலைக்கும் அலைகிறது. ஒவ்வொரு இடத்திலும் ஏமாற்றமே அனுபவமாக, இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக கழிவுநீர் சகதிக்கு அருகில் எலிவளை போன்ற ஒரு இடம் கிடைக்கிறது. அதுவே பெரும் நிம்மதி.
வேலை கிடைப்பது எளிதாக இல்லை. ஆஸ்கரின் மனைவி ஒரு பாரில் அரைகுறை உடையில் மதுவருந்த வருகிறவர்களை கவனிக்கும் பார் கேர்ள் வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறாள். கடவுளின் கருணை, ஆஸ்கருக்கும் ஒரு வேலை கிடைக்கிறது. பணம் இருக்கும் பெட்டியை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் ஆயுத வேனில் செக்யூரிட்டி வேலை. 
 
செக்யூரிட்டி வேலைக்கு தகுதியில்லை எனினும் ஆஸ்கரின் வெள்ளந்தி குணத்துக்காக அவனை தேர்வு செய்கிறான் டக்ளஸ் ஆங்க் என்பவன். அவன்தான் ஆஸ்கருக்கு பயிற்சி அளித்து வேலையின் நுணுக்கங்களை கற்றுத்தரப் போகிறவன். நகரத்தின் தகிக்கும் நெருக்கடியில் ஆங்க் ஆஸ்கருக்கு பெரும் ஆறுதலாக இருக்கிறான். 
செக்யூரிட்டி வேலை அத்தனை எளிதானதல்ல. பணத்தேவை மிகுந்த நகரத்தில் பெரும் பணத்துடன் வரும் அவர்களது வேன் எப்போதும் தாக்குதலுக்கான இலக்காக இருக்கும். ஆங்கின் கூட்டாளி அப்படியான ஒரு தாக்குதலில் சமீபத்தில்தான் மரணமடைந்திருந்தான். அவனது இடத்துக்குதான் ஆஸ்கர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறான்.
 
வேலைக்கு சேர்ந்த சில தினங்களிலேயே ஆஸ்கரின் நிம்மதி பறிபோகிறது. அவன் திட்டமிடப்பட்டே அந்த வேலைக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறான். ஆங்க் அவனிடம் காண்பித்த பரிவுக்குப் பின்னால் வேறொரு திட்டம் இருக்கிறது. மணிலா எப்போதும் தனக்கோ தனது குடும்பத்துக்கோ நிம்மதியையும், நிறைவான பொருளாதாரத்தையும் தரப்போவதில்லை என்பதை உணர்கிறவன், துணிச்சலாக ஒரு முடிவை எடுக்கிறான். அது எவ்வளவுதூரம் துயரமானது என்பதை படத்தின் இறுதிப்பகுதி பார்வையாளனுக்குள் கடத்திவிடுவதே இந்தப் படத்தின் வெற்றி எனலாம்.
 
நிராதரவின் சோகத்தையும், குற்றத்தின் இருண்மையையும் ஒன்றாக இணைத்தால், அதுதான் மெட்ரோ மணிலா. கிராமத்திலிருந்து நகரத்துக்கு இடம்பெயரும் லட்சக்கணக்கானவர்களின் துயரை இயக்குனரால் படத்தில் கொண்டு வர முடிந்திருக்கிறது. 
பொறுப்பும், பொறுமையும், வெள்ளந்தியும் இணைந்த ஆஸ்கர் கதாபாத்திரம் படம் முடிந்த பின்பும் நம்மை தொந்தரவு செய்யக் கூடியது. ஆஸ்கரின் முன்னாள் முதலாளியின் மகனின் கதையுடன் படத்தை ஆரம்பித்து அதேயிடத்தில் கவித்துவமாக படத்தை முடித்திருப்பது திரைக்கதையின் சாதனை என்றே சொல்ல வேண்டும். 
 
ஒளிப்பதிவு, இசை, நடிப்பு, எடிட்டிங் என்று அனைத்தும் கச்சிதம். மெட்ரோ மணிலா தவறவிடக் கூடாத படம்.