வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 13 பிப்ரவரி 2015 (11:08 IST)

ஆஸ்கர் பீவர் - American Sniper

ஃபெப்ரவரி 22 -ஆம் தேதி 87 -வது ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட உள்ளது. அமெரிக்காவின் வல்லமையை பறைசாற்றும் திரைப்படங்களுக்கே எப்போதும் ஆஸ்கரில் முன்னுரிமை வழங்கப்பட்டு வந்துள்ளது. ஈராக், ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போருக்குப் பிறகு, அந்த போரில் அமெரிக்கர்கள் வெளிக்காட்டிய வீரத்தை, தியாகத்தை வெளிப்படுத்தும் படங்களுக்கு ஆஸ்கர் மிக எளிதாக வசப்பட்டு வருகிறது.
அந்தவகையில், கிளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கியிருக்கும் அமெரிக்கன் ஸ்னைப்பர் திரைப்படம் ஆறு ஆஸ்கர் பரிந்துரைகள் பெற்றதில் வியப்பு எதுவுமில்லை. 
 
அமெரிக்காவின் ஆக்கிரிமிப்பு போரால் அழிக்கப்பட்ட நாடுகளின், நாட்டு மக்களின் துயரங்கள் குறித்து எந்த கேள்வியும் எழுப்பாமல், அமெரிக்க போர் வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும், மனக்கிலேசங்களையும் மட்டும் காட்சிப்படுத்துபவையாகவே ஹாலிவுட் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. அமெரிக்கன் ஸ்னைப்பரும் இதற்கு விதிவிலக்கல்ல.
 
கிரிஸ் கேய்ல் என்ற அமெரிக்க நேவி சீல் ஸ்னைப்பர் தனது ஈராக் போர் அனுபவங்களை புத்தகமாக எழுதினார். புத்தகத்தின் பெயர், அமெரிக்கன் ஸ்னைப்பர் - த ஆட்டோபயோகிராஃபி ஆஃப் த மோஸ்ட் லெதல் ஸ்னைப்பர் இன் யு.எஸ். ஹிஸ்டரி. 
 
ஸ்னைப்பர் என்றால், தொலைதுரங்களில் உள்ள இலக்கை குறி வைத்து சுடுகிறவர். ஒன்று ஒன்றரை கிலோ மீட்டருக்கு தொலைவிலுள்ள இலக்கையும் இவர்கள் குறி பார்த்து சுடுவார்கள். படை வீரர்களுக்கு அரணாக செயல்படுகிறவர்கள் ஸ்னைப்பர்கள். 
 
டெக்சாஸைச் சேர்ந்த, கௌபாயாக வேண்டும் என்ற விருப்பத்திலிருக்கும் கிரிஸ் கேய்ல், 1998 -இல் யு.எஸ். தூதரகத்தை குண்டு வைத்து தகர்த்த சம்பவத்தைத் தொடர்ந்து யுஎஸ் நேவி சீலில் சேர்கிறார். அங்கு யுஎஸ் நேவி ஸ்னைப்பராகும் அவர், 2001 செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு ஈராக்குக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். மொத்தம் நான்குமுறை அப்படி அவர் ஈராக்குக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்.

இந்த காலகட்டத்தில் 255 பேரை அவரது துப்பாக்கி பலி வாங்குகிறது. அதில் 160 மரணங்களை யுஎஸ் ராணுவம் உறுதி செய்துள்ளது. இந்த அனுபவங்களை பின்னணியாக வைத்து கிரிஸ் கேய்ல் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கன் ஸ்னைப்பரை கிளின்ட் ஈஸ்ட்வுட் எடுத்துள்ளார்.
இதுவரை கிளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கிய திரைப்படங்களில் இதுவே அதிக லாபத்தை சம்பாதித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் இதன் வசூல் இரண்டாயிரம் கோடிகளை தொடுகிறது. அமெரிக்காவில் அதிகம் வசூலித்த போர் குறித்த திரைப்படம் இதுதான். ஆனால், கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் திரைப்படங்களில் பொதுவாக காணப்படும் மனதைத் தொடும் அம்சம் இல்லாத திரைப்படமும் இதுதான். மில்லியன் டாலர் பேபி,  த ப்ரிட்ஜஸ் ஆஃப் மேடிசன் கவுண்டி, த மிஸ்டிக் ரிவர் போன்ற படங்களை இயக்கிய ஈஸ்ட்வுட் இப்படியொரு படத்தை எடுத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்தான். அமெரிக்கன் ஸ்னைப்பர் வழக்கமான அமெரிக்க வீர தீரத்தை சொல்லும் மற்றுமொரு படமாகவே உள்ளது. கிரிஸ் கேய்லுக்கும் அவரது மனைவுக்குமான உணர்ச்சிகரமான பகுதிகளும்கூட.
 
சிறந்த திரைப்படம், சிறந்த தழுவல் திரைக்கதை உள்பட ஆறு ஆஸ்கர் விருதுகளுக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பல வருதுகளை வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதில் சிறந்த திரைப்படத்துக்கான விருது இடம்பெறக் கூடாது என்பதே பொதுவான சினிமா ரசிகர்களின் வேண்டுதல்.