1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வியாழன், 6 நவம்பர் 2014 (10:30 IST)

ஏடாகூடப் படங்கள் - Alexandra's Project

இணையம் இப்போது போல் வீரியமாக இல்லாத நேரம். உலகத் திரைப்பட விழாக்களில் அந்த மாதிரி படங்கள் பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் அலையும். திரைப்பட விழாக்களில் பலான படங்களா? ஆச்சரியமாக இருக்கும்.
 
நமது காலைக்காட்சிப் படங்களுக்கும், திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் படங்களுக்கும் வித்தியாசம் உண்டு. முன்னது நமது பலான உணர்வுகளை விசிறிவிடுவதற்கு என்றே எடுக்கப்படுபவை. பின்னதில் நிர்வாணமும், உடலுறவுக் காட்சிகளும் வாழ்வின் ஓர் அங்கமாக கதாபாத்திரங்களின் உணர்வுகளை, சூழலை குறிப்புணர்த்துவதாக இருக்கும். எழுச்சிக்கு வாய்ப்பேயில்லை. சென்ற வருடம் கான் திரைப்பட விழாவில் விருது பெற்ற ஃப்ளூ இஸ் த வார்மஸ்ட் கலர் லெஸ்பியன் காதலர்களைப் பற்றியது. படம் அவர்களின் லெஸ்பியன் உறவுடன்தான் ஆரம்பிக்கும்.
 
அலெக்சான்ட்ராஸ் புராஜெக்ட் இரண்டாவது வகையைச் சார்ந்தது. படத்தில் பெரிய கதையெல்லாம் இல்லை. அலெக்சான்ட்ரா ஸ்டீவ் என்பவனின் மனைவி. ஹவுஸ்வொய்ப். இரண்டு குழந்தைகள். ஆக்கிப் போடுவதும், புருஷனுக்கு தேவைப்படும் போது அணைத்துக் கொள்வதுமாக பக்கா குடும்பப் பெண். அவளுக்கு ஒரு வருத்தம். என்னடா லைஃப் இது. வீட்டை பார்த்துக்கிறதும், புருஷன் கூப்பிட்டா படுத்துக்கிறதும்தான் வாழ்க்கையா.

எனக்கென்று உணர்வு இல்லையா. நானென்ன வெறும் உடம்பா. புருஷன் அப்படித்தானே நினைக்கிறான். உனக்கு இந்த உடம்பு சொந்தம்னு நினைக்கிற இல்லையா... அதை நான் என்ன செய்றேன் பார். தோட்டக்காரா வா. இந்த உடம்பை எடுத்துக்கோ. நீ மட்டுமில்லை. பணம் தர்ற யாருக்கும் என் புருஷன் சொந்தம்னு நினைக்கிற உடம்பு தற்காலிக சொந்தம். ஸ்டீவ் இப்போ நீ என்ன சொல்ற...? 
 
அலெக்சான்ட்ரா என்ற ஆஸ்ட்ரேலிய குடும்பப் பெண்ணின் இந்த ஃபீலிங்தான் மொத்த படமும். அதை அவள் வெளிப்படுத்துகிற விதம்தான் ரொம்பவே ஷாக்கிங்.

பிறந்தநாள் அன்று உற்சாகமாக வேலைக்கு செல்லும் ஸ்டீவை உயரதிகாரிகள் அழைத்து, உனக்கு பிரமோஷன் தரப்போறோம் என்கிறார்கள். டபுள் லட்டு தின்ன மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தால் காலியாக இருக்கிறது வீடு. ஒரேயொரு வீடியோ டேப் மட்டும், என்னை ப்ளே செய் என்ற வாசகத்துடன் ஸ்டீவுக்காக காத்திருக்கிறது.

டேப்பை ப்ளே செய்தால் அலெக்சான்ட்ரா கேமரா முன் அமர்ந்து மேலே சொன்ன தன்னுடைய எல்லா ஃபீலிங்கையும் புட்டு புட்டு வைக்கிறாள். அதற்கு முன் பிட்டு பிட்டாக அனைத்து உடைகளையும் களைந்துவிடுகிறாள். நடுவில் அந்தத் தோட்டக்காரனும் அலெக்சான்ட்ராவும் சேர்ந்து கொள்ள, இருவருமாக ஸ்டீவின் தாம்பத்தியத்தை புல்டேசரால் சகட்டுமேனிக்கு இடித்துத் தள்ளுகிறார்கள்.
 
என்ன இழவு பெண்ணுடா இவ என்று கலாச்சார கோபம் எழுகிறதா? இதே கதையை எந்த விமர்சனமும் இல்லாமல் பலமுறை பார்த்தவர்கள்தான் நாம். 
 
பாலசந்தரின் கல்கி படம் நினைவிருக்கிறதா? சாடிஸ்ட் பிரகாஷ்ராஜை திருத்துவதற்காக புரட்சிப் பெண் கல்கி பிரகாஷ்ராஜை காதலித்து ஒரு குழந்தையும் பெற்று அதனை பிரகாஷ்ராஜின் மனைவி கீதாவிடம் தந்துவிட்டு மாயமாவாள். பிரகாஷ்ராஜை கல்கி காதலித்து காய விடுவதன் வழியாக மனைவியின் மகத்துவத்தை பிரகாஷ்ராஜ் அறிந்து கொள்வதாக கதை அமைக்கப்பட்டிருக்கும்.

யோசித்துப் பாருங்கள். கல்யாணமான ஒருவனுடன் உறவு வைத்துக் கொண்டால் அவனது மனைவிக்கு அது எவ்வளவு பெரிய மனவேதனையை தரும்? இது பாலசந்தருக்கோ, கல்கிக்கோ படம் பார்த்தவர்களுக்கோ தோன்றவே தோன்றாது. ஆண் யாருடன் வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம். திருந்தி வந்து மன்னிப்பு கேட்டால் போதும். கோவலனில் இருந்து இந்த ஆணாதிக்க சிந்தனைதானே நமக்குள் ஊறி நிற்கிறது.

கீதா - பிரகாஷ்ராஜ் - கல்கி என்பதை பிரகாஷ்ராஜ் - கீதா - தோட்டக்காரன் என்று மாற்றினால் அதுதான் அலெக்சான்ட்ராஸ் புராஜெக்ட். கல்கியில் குழந்தையை தந்து ஒரு உறவை கல்கி ஏற்படுத்தினால், குழந்தைகளை ஸ்டீவிடமிருந்து நிரந்தரமாகப் பிரித்து குழந்தைகளின் முகமே அவனுக்கு மறந்துவிடும்படி செய்கிறாள். 
அலெக்சான்ட்ராவாக நடித்திருக்கும் Helen Buday-க்கு இந்தப் படம் நடித்த போது 41 வயது. கொஞ்சம் தொய்ந்த தோற்றம். எழுச்சிக்கு பதில் ஒரே அதிர்ச்சிதான். கவித்துவமான கேமரா கோணங்களுடன் தொடங்கும் படம் ஸ்டீவ் வீடியோவை ப்ளே செய்த பிறகு ஆணி அடித்த மாதிரி மாறிவிடுகிறது. 

வெளியே அழகாகத் தெரியும் தாம்பத்தியத்தின் அசல் முகம் எத்தனை கோரமானது என்பதை இந்த கேமரா மாற்றத்தின் மூலம் இயக்குனர் Rolf de Heer  குறிப்புணர்த்துகிறார்.
 
2003 பெர்லின் திரைப்பட விழாவில்தான் இந்தப் படம் முதலில் திரையிடப்பட்டது. அய்யகோ இப்படியொரு படமா என்று அன்று கூவத் தொடங்கியவர்கள் இன்றும் அதனை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். சும்மா சொல்லக் கூடாது. படத்தில் அத்தனை வன்மம், அத்தனை வெறுப்பு.
 
படத்தை எப்படியாவது பார்ததுவிடுவது என்று நினைப்பவர்களுக்கு இரண்டு எச்சரிக்கைகள்.
 
இது ஃபீல் குட் படமெல்லாம் கிடையாது. மனசை தொந்தரவு செய்கிற படம். பரவாயில்லை, மேற்படி சீன்ஸ் இருக்கே என்று நினைத்தால்... மனசை தொந்தரவு செய்வதே அந்த காட்சிகள்தான்.
 
படத்தை தனியாக பார்க்கவும். மற்றவர்கள் நம்மை சைக்கோவாக நினைக்கும் வாய்ப்பு உள்ளது.