பெண்மையை போற்றுவோம்!

Sasikala| Last Updated: செவ்வாய், 7 மார்ச் 2017 (13:02 IST)
பெண்மையை போற்றுவோம்!
 
பெண்ணை காமப்பிண்டமாய் 
நோக்கும் ஆடவரின் 
இதயக் கலவையினில்
சாக்கடையின் கலப்பு
 
பெண்ணை தெய்வமாகவும்
பூமியை பெண்ணாகவும்
பாவிக்கும் நிலத்தில்
பெற்றவனே இச்சை தீர்க்கும் அவலம்...

 
அப்படியென்ன பெண்ணிடம்...
 
ஓர் ஆடவனைப் பெற்று 
அவனுக்கு முலையூட்டி
ஆளாக்கும் அவளது
அங்கங்களை கூறிட்டவாறு
எதுவழியாக பிரசவித்தாளோ
அதையே சுகப்பொருளென கொண்டு
துரத்தி கவ்விக்கொல்லும் மிருகங்களை
என்ன சொல்ல...
 
முதுமையை எட்டுபவனும்
பருவத்தை கடப்பவனும் கூட
சிறுமியை குறிவைக்கிறான்
 
பெண்ணிடம் இருக்கும்
சிறப்புகளையும்
நல்லியல்புகளையும்
உள்வாங்காது தொடுக்கும்
காமப் போரினில் பெண் பலியாகிறாள்  
 
பெண்ணின் பிறப்பு
கண்ணீரிலிருந்து துவங்குவது 
உண்மையா?
 
கூட்டுக் குடும்பத்தின் நெருக்கடிகளிலும்
குடிகார கணவனின் அடி நெடிகளிலும்
குடும்ப பாரத்தினை தாங்கியபடி 
கடக்கும் அவர்களை 
என்னவென்று சொல்வது?
 
பெண் என்பவள் 
தோலால் போர்த்தப்பட்ட
ஒரு பொம்மையா அல்லது 
உயிரால் நிரப்பப்பட்ட 
ஓருடலா என்பதை 
காலம்தான் தீர்மானிக்க வேண்டும்!
 
-கோபால்தாசன்

webdunia

இதில் மேலும் படிக்கவும் :