வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. நிதிநிலை அறிக்கை
  3. மத்திய நிதிநிலை அறிக்கை 2014-15
Written By Annakannan
Last Modified: வெள்ளி, 11 ஜூலை 2014 (12:59 IST)

ரூ.500 கோடி மதிப்பீட்டில், 5 சுற்றுலாப் பயணத் திட்டம்

முக்கிய கருப்பொருட்களின் அடிப்படையில் 5 சுற்றுலாப் பயணத் திட்டத்தைச் செயல்படுத்தும் யோசனை, 2014-15ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட்டைச் சமர்ப்பித்துப் பேசிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, இந்தியாவின் வளமான கலாச்சார வரலாற்று மதப் பின்னணி, சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் வேலை வாய்ப்பைப் பெருக்குவதற்கும் நல்ல வாய்ப்பை அளித்து வருவதாகத் தெரிவித்தார். 
 
சாரணாத் - கயா - வாரணாசி பௌத்த சுற்றுலா திட்டமாக மேம்படுத்தப்படும் என்று கூறிப்பிட்ட அவர் உலகின் அனைத்துப் பகுதியிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த நகரங்களை உலகத் தர அளவில் வசதிகள் மேம்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.
 
புராதன இந்திய நரகங்களின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் வகையில் 'ஹிருதய்' என்ற தேசிய பாரம்பரிய நகர மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார். மதுரா, அமிர்தசரஸ், கயா, காஞ்சிபுரம், வேளாங்கண்ணி, ஆஜ்மீர் ஆகிய நகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக இந்தப் பட்ஜெட்டில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு, கல்வி நிலையங்கள் மற்றும் உள்ளூர் சமுதாயத்தினரின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும். 
 
'பிரசாத்' என்ற தேசிய புனித யாத்திரை இயக்கம் ஒன்றும் இந்த நிதியாண்டில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொன்மையான மையங்களை பாதுகாக்கும் திட்டத்திற்கென ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்தார். கோவா சர்வதேச மாநாட்டு மையமாக உருவெடுத்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்நகரில் சர்வதேச தரத்தில் வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், பொதுத் துறை - தனியார் பங்களிப்புடன் வசதிகளை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு மத்திய அரசு உதவி அளிக்கும் என்று கூறினார்.