1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Anandakumar C
Last Updated : வெள்ளி, 8 ஏப்ரல் 2016 (11:12 IST)

அழகிரி உறவினருக்கு அதிமுகவில் சீட்: கொதிப்பில் மதுரை சோழவந்தான் அதிமுகவினர்...

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் மாற்றல் ஹிட் லிஸ்டில் மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கம் என்பவருக்கும் விரைவில் கல்தா கொடுக்கப்படவுள்ளதாம்.


 

 

 
மாணிக்கம் பொதுப்பணித்துறை கட்டட கான்டிராக்டர். அவரது நெருங்கிய உறவினர் (சின்ன மாமனார், மனைவியின் தந்தையின் தம்பி) ஒ.ராமச்சந்திரன் மு.க அழகிரியிடம் பர்சனல் பிஏவாக இருந்தவராம்.
 
ராமச்சந்திரனும், அழகிரி மனைவி காந்தி அழகிரியும் நெருங்கிய உறவினர்கள். ராமச்சந்திரன் மூலம் திமுக ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித்துறை கான்டிராக்ட்டுகள் அனைத்தும் மருமகன்  மாணிக்கத்துக்கு வந்து குவிந்தன.
 
இதனால் சாதாரணமாக இருந்த மாணிக்கம் பல கோடிகளுக்கு அதிபதியானார். அழகிரி குடும்பத்துடன் நெருங்கிப் பழகிய மாணிக்கத்துக்கு, அழகிரி மனைவி வழியில் வந்த உறவுக்கார பெண்ணை மாணிக்கத்துக்கு திருமணம் செய்து வைத்தனர்.
 
கடந்த 2010 ஆம் ஆண்டு அதிமுக பொதுக்கூட்டம் நடத்துவதற்காக தனது 2 ஏக்கர் நிலத்தை மாணிக்கம் இலவசமாக அளித்தாராம். மேலும் 5 ஏக்கர் நிலத்தை அந்த நில உரிமையாளரை மிரட்டி மாணிக்கம் அதிமுகவுக்கு வாங்கிக் கொடுத்தாராம்.
 
அதனைக் காரணம் காட்டி எம்எல்ஏ சீட்டுக்கு அச்சாரம் போட்டு வாங்கியுள்ளார் மாணிக்கம் என்கின்றனர். பின்னர் மதுரை அதிமுக முக்கியப் பிரமுகர்களிடம் நெருங்கிப் பழகிய மாணிக்கம் அதிமுகவில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.
 
ஓபிஎஸ், நத்தம் ஆகியோருக்கு கோடிக்கணக்கில் பணத்தை வாரி வழங்கி மாணிக்கத்துக்கு அதிமுக மாவட்ட மாணவர் அணி செயலாளர் பதவியை அடைந்தாராம். தற்போது மாணிக்கத்து எம்எல்ஏ சீட் வழங்கியது அதிமுகவில் பல ஆண்டுகளாக இருந்த முக்கியப் பிரமுகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.
 
மேலும் சோழவந்தான் தொகுதியில் பெரியார் பிரதான வாய்க்காலை  தூர்வாருவதாக கான்டிராக்ட் பணியை மாணிக்கம் எடுத்து மொத்தம் ரூ. 10 கோடியை மோசடி செய்ததாக அந்த பகுதி மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். (சோழவந்தான் பெரியார் பிரதான வாய்க்கால் 1 க்கு ரூ. 3.25 கோடியும், 4வது வாய்க்காலுக்கு ரூ. 3 3/4 கோடியும் வாங்கி பணிகளை செய்யாமல் விட்டு விட்டாராம்).
 
குறுகிய காலத்தில் பணத்தை அள்ளி வீசி வளர்ந்து கட்சிக்கு சம்பந்தமில்லாத ஒரு பொதுப்பணித்துறை கான்டிராக்டருக்கு  சோழவந்தான் தொகுதியில் சீட்டு கொடுத்தது அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் அதிருப்தியில் உள்ளனர்.
 
மாணிக்கம் மீது மதுரை போலீசில் நில மோசடி தொடர்பான விசாரணைகளும் நிலுவையில் உள்ளனவாம். அதனை எப்ஐஆர் வரை கொண்டு போகாமல் பெட்டிஷனோடு முடிக்கும்படி தனது ஆதரவு போலீசுக்கு கரன்சியுடன் சென்று கவனித்து விட்டு வந்து விடுவாராம்.
 
மேற்கண்ட விவரங்களை சோழவந்தான் பகுதி மக்கள், அதிமுக தொண்டர்கள் புகாராக எழுதி ஜெவுக்கு அனுப்பியுள்ளார்களாம். அரசியல் அனுபவம் இல்லாத மாணிக்கம், குறுகிய காலத்தில் திமுகவில் இருந்து அதிமுகவில் ஐக்கியமாகி தற்போது எம்எல்ஏ சீட்டு வாங்குகிற அளவுக்கு வளர்ந்துள்ளதாக அந்த பகுதி அதிமுகவினர் கொதிப்படைந்துள்ளார்களாம்.
 
மேலும் அழகிரியின் நெருங்கிய உறவினராக உள்ள மாணிக்கம் மறைமுக ஆதரவாளராக செயல்பட்டு வருவது ஜெவுக்கு தெரியுமா, என்று அதிமுகவினர் புலம்பி வருகின்றனர். மாணிக்கம் பற்றிய உண்மை நிலவரைங்களை ஒரு மனுவாக தயார் செய்து போயஸ் தோட்டத்துக்கு புகாராக அனுப்பியுள்ளார்களாம்.