1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Suresh
Last Updated : வெள்ளி, 8 ஏப்ரல் 2016 (08:41 IST)

திமுக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு பல நலத்திட்டங்கள்: கனிமொழி

திமுக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக சென்னையில் நடந்த மகளிரணி கூட்டத்தில் கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.


 

 
சென்னை கிழக்கு மாவட்ட திமுக மகளிரணி ஆலோசனை கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில் கனிமொழி பேசியதாவது:-
 
திமுக தேர்தல் அறிக்கை மிகச்சிறந்த தேர்தல் அறிக்கையாக விரைவில் வெளி வர உள்ளது. அதில் பெண்களுக்கு பெருமளவில் பல நலத்திட்டங்களை கருணாநிதி வைத்துள்ளார்.
 
நீங்கள் தேர்தல் அறிக்கையை படித்து பார்த்து மற்ற பெண்களிடம் கொண்டு செல்ல வேண்டும். பெண்கள், தமிழக மக்கள் முன்னேற்றத்துக்காக உழைக்கும் ஒரே இயக்கம் திமுக தான்.
 
பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று நினைத்தவர் கருணாநிதி. திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட தொலைக்காட்சி இன்றும் வேலை செய்கிறது. மக்களுக்கு அக்கறையோடு நல்ல பொருட்களை விசாரித்து வாங்கி கொடுத்தோம்.
 
தமிழ்நாடு எல்லா துறைகளிலும் பின்னடைந்து வருகிறது. டாஸ்மாக்கில் மட்டும்தான் வளர்ந்து வருகிறது.
 
குடிப்பழக்கத்தால் பாதிக்கப்படாத குடும்பமே இல்லை என்ற நிலை ஏற்பட்டு வருகிறது. கருணாநிதி மதுவை ஒழிப்பேன் என்று சொல்லி இருக்கிறார்.
 
அதை எல்லாரிடமும் நீங்கள் சொல்ல எதிர்காலத்தில் வளர்ச்சி, மலர்ச்சியை ஏற்படுத்த உதயசூரியனால் மட்டும் தான் முடியும். கருணாநிதி, மு.க.ஸ்டாலினால் மட்டும் தான் முடியும். இவ்வாறு கனிமொழி கூறினார்.