வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Suresh
Last Updated : வெள்ளி, 25 மார்ச் 2016 (08:12 IST)

நடமாடும் வாக்காளர் சேவை மையம்: ராஜேஷ் லக்கானி

பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு விசேஷ பார்வையாளர்கள் 7,500 பேர் நியமிக்கப்பட உள்ளதாகவும், நடமாடும் வாக்காளர் சேவை மையம் செயல்படுத்தப்பட்வுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.


 

இது குறித்து ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழகத்தில் தற்போது 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றோடு மேலும் 700 வாக்குச்சாவடிகளை கூட்டுவதற்கான முன்மொழிவு பெறப்பட்டுள்ளது.
 
அனைத்து வாக்குச்சாவடிகளும் புகை பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளிலும், தொகுதிக்கு ஒன்று என்ற வீதத்தில் 16 நடமாடும் வாக்காளர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
 
இந்த நடமாடும் மையத்தில் கம்ப்யூட்டருடன் ஊழியர்கள் இருப்பார்கள். தொகுதி முழுவதும் உலா வந்து, வாக்காளர்களுக்கு தேவையான சேவைகளை வழங்குவார்கள்.
 
வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்தல், பெயரை நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல் போன்ற அனைத்து சேவைகளையும் இந்த மையத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
 
இந்த நடமாடும் சேவை மையத்தின் செயல்பாட்டை பார்த்து விட்டு மற்ற தொகுதிகளுக்கும் இந்த வசதி விரிவாக்கம் செய்யப்படும்.
 
தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் அரசியல் கட்சியினரின் வாகனங்களை, தேர்தல் கமிஷனின் அனுமதியை பெற்ற பிறகுதான் பயன்படுத்த முடியும்.
 
அப்படிப்பட்ட வாகனங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை கண்டறிய எஸ்எம்எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளோம்.
 
அதன்படி, செல்போனில் ஆங்கிலத்தில் கார் என்று டைப் செய்து இடைவெளி விட்டு விட்டு, சந்தேகத்துக்கு உரிய வாகனத்தின் கடைசி 4 எண்களை டைப் செய்து, 1950 என்ற தேர்தல் கமிஷனின் இலவச செல்போன் சேவை எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
 
அந்த வாகனத்துக்கு அனுமதி இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி உடனே பதில் எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.
 
தற்போது சில வாகனங்களில், "தேர்தல் பணிக்காக" என்று எழுதி ஒட்டிக் கொண்டு செல்வதாக புகார்கள் வந்துள்ளன.
 
அவை உண்மையிலேயே தேர்தல் அலுவலர்களால் தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களா? அல்லது போலியாக அதுபோல் எழுதி ஒட்டிக் கொண்டு செல்லும் வாகனங்களா? என்பதையும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அறியலாம்.
 
பதற்றமான வாக்குச்சாவடிகளில் "மைக்ரோ அப்சர்வர்" என்ற நுண் பார்வையாளர்கள் (மத்திய அரசுப் பணியாளர்கள்) நியமிக்கப்பட உள்ளனர்.
 
அந்த வகையில் சுமார் 7 ஆயிரத்து 500 நுண் பார்வையாளர்களின் (விசேஷ பார்வையாளர்கள்) பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
தேர்தல் செலவினப் பார்வையாளர்கள், உதவி செலவினப் பார்வையாளர்களும் நியமிக்கப்படுவார்கள். செலவினப் பார்வையாளர்களாக ஐஆர்எஸ் படித்து வருமான வரித்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.
 
உதவி செலவினப் பார்வையாளராக வருமான வரித்துறை அல்லது சுங்கவரித் துறையில் பணியாற்றும் அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.
 
தமிழகத்தில் தற்போது 136 பதிவு பெற்ற கட்சிகள் உள்ளன. அவற்றில் 15 கட்சிகளுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழச் சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அரசியல் கட்சிகள் தங்களுக்கு என்ன சின்னம் வேண்டும் என்பது குறித்து இந்திய தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பிக்க வேண்டும். அதை பரிசீலித்து தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கும்.
 
தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தை அதிகரித்து வருகிறோம். இதற்கு உதவ பெரிய ஜவுளிக்கடைகள் ஒப்புக்கொண்டு உள்ளன. அங்கு வாடிக்கையாளர்கள் துணி வாங்கினால், அதை போட்டுத் தரும் பையின் மீது, தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் அடங்கிய "ஸ்டிக்கர்" ஒட்டித் தரப்படும்.
 
இந்த தேர்தலை முன்னிட்டு உரிமம் பெறப்பட்ட 18 ஆயிரத்து 788 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.