வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Suresh
Last Updated : சனி, 5 மார்ச் 2016 (10:07 IST)

அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்: பணிகளைத் தொடங்கிய அதிகாரிகள்

தேர்தல் விதிகள் அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் பறக்கும் படை அதிகாரிகள் தங்களது பணியைத் தொடங்கியிருப்பதாக, கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான  அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.


 

 
இது குறித்து அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்ததும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
 
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 10 தொகுதிகள் உள்ளன.
 
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதில் மொத்தம் 80 ஆயிரத்து 758 வாக்காளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டனர்.
 
இவர்களில், 21,801 பேர் புதிய வாக்காளர்கள். இறந்தவர்கள், இடமாற்றியவர்கள் என 20 ஆயிரம் பேர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளன.
 
 ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், முதன்மைத் தேர்தல் உதவி அலுவலர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
இவர்களிடம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். கோவை மாவட்டத்தில் 949 வாக்குச் சாவடி மையங்களில் 2,892 வாக்குச் சாவடிகள் உள்ளன.
 
மேலும் 19 துணை வாக்குச் சாவடிகள் அமைக்க ஆணையத்துக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. மொத்தம் 2,911 வாக்குச் சாவடிகள் மூலம் தேர்தல் நடைபெறும்.
 
இதில், 273 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 5 சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
 
இந்தத் தேர்தலில் கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் மட்டும், வாக்காளர்கள் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தார்கள் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஒப்புகைச் சீட்டு அளிக்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளது.
 
தேர்தல் நடத்தை விதிகளைக் கண்காணிப்பதற்காக 30 பறக்கும் படைகள், 30 செலவுக் கணக்குக் கண்காணிப்புப் படைகள், 10 விடியோ பதிவுக் குழுக்கள், பத்திரிகை, ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்களைக் கண்காணிக்கும் குழுக்கள் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன. 
 
இக்குழுக்களைச் சேர்ந்த அதிகாரிகள் தங்களது பணிகளைத் தொடங்கியுள்ளனர். மேலும், நடத்தை விதி மீறல்கள் தொடர்பாக புகார் அளிப்பதற்காக 24 மணி நேரமும் செயல்படும் விதமாக ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
 
கட்டுப்பாட்டு அறைக்கு பொறுப்பு அலுவலராக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணான 1800 425 5141 மற்றும் 1950 என்ற எண்ணுகு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம்.
 
புகார் தெரிவிக்கப்பட்ட இடங்களுக்கு அதிகாரிகள் உடனடியாகச் செல்கின்றனரா என்பதைக் கண்காணிப்பதற்காக தேர்தல் பணியில் ஈடுபடும் சிறப்புப் படைகளின் 70 வாகனங்களிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படும்.
 
இதை மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும்.  கோவை மாவட்டத் தேர்தல் பணிக்கு அரசு அதிகாரிகள், காவல் துறையினர் உள்பட 13,924 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
 
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருப்பதால் அரசின் புதிய திட்டங்களை அறிவிக்கவோ, பணிகளைத் தொடங்கவோ முடியாது.
 
இருப்பினும், பழைய திட்டப் பணிகளைத் தொடரலாம். ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக கொண்டு செல்பவர்கள் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்.
 
மாவட்டம் முழுவதிலும் எந்தெந்த இடங்களில் பொதுக் கூட்டங்கள் நடத்தலாம் என்று இடங்களைத் தேர்வு செய்து, அது குறித்த பட்டியலை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளோம்.
 
அந்த இடங்களில் மட்டுமே கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்படும். அதேபோல், பொதுமக்களுக்குத் தொந்தரவு அளிக்காத வகையில் பிரசாரங்கள், தேர்தல் பிரிவு அதிகாரிகளின் சோதனைகளை நடத்திக் கொள்ள உத்தரவிடப்படுகிறது.
 
வாக்குச் சாவடிகளில் குடிநீர், கழிப்பிடம், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் செய்யப்பட உள்ளன. மேலும் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சக்கர நாற்காலிகளை பயன்படுத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
 
அதன்படி கோவைக்கு 949 சக்கர நாற்காலிகள் தேவைப்படுகின்றன. இவற்றை மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றிடம் இருந்து பெற திட்டமிடப்பட்டுள்ளது" என்று அர்ச்சனா பட்நாயக் கூறினார்.