1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Murugan
Last Updated : வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (09:48 IST)

சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நேரம் இரண்டு மணி நேரம் அதிகரிப்பு : தேர்தல் கமிஷன் அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 16ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரித்து தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது.


 

 
234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்டசபைக்கு வருகிற மே 16ஆம் தேதி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
 
வழக்கமான நேரத்தை விட இந்த முறை கூடுதலாக வாக்குப்பதிவு இரண்டு மணி நேரம் அதிகரித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதனால் வழக்கமாக காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு, இந்த முறை 7 மணிக்கு தொடங்குகிறது. அதேபோல், 5 மணிக்கு முடியும் வாக்குப்பதிவு இந்த முறை 6 மணிக்கு முடியும். 
 
தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய சட்டசபைகளுக்கு ஏப்ரல் 22ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேவையான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.
 
தமிழ்நாட்டில் ஓட்டுப்பதிவுக்கு கூடுதலாக தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளிமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. 
 
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுக்கப்படுவதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
 
மே மாதம் அக்னி நட்சத்திரத்தின் போது தேர்தல் நடைபெறுவதால், வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும். ஓட்டளிக்க வரும் மக்கள் சிரமப்படுவார்கள். எனவே அதை கருத்தில்கொண்டுதான், வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், வருகிற 4ஆம் தேதி காலை 7 மணி முதல், மே 16ஆம் தேதி மாலை 6.30 மணி வரை கருத்துக் கணிப்புகள் வெளியிட தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.