வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Updated : புதன், 2 ஜூலை 2014 (12:21 IST)

ரஜினி பேசுறது எல்லாமே 'பஞ்ச்' தான்

ரஜினி படம் நடிக்கிறார் என்றதும் எழும் முதல் கேள்வி, தலைவர் இந்தப் படத்தில் என்ன மாதிரியான பஞ்ச் டயலாக் பேசுவார்? சில பத்திரிகைகள் ரஜினிக்கேற்ற சிறந்த பஞ்ச் டயலாக்கை எழுதும் வாசகர்களுக்கு பரிசு என்று போட்டிகளும் அறிவித்தது உண்டு. அந்தளவுக்கு ரஜினியும், பஞ்ச் -யும் பக்கத்து பக்கத்து பெஞ்சுக்காரர்கள்.
லிங்கா படத்தில் ரஜினி என்ன பஞ்ச் டயலாக் பேசுகிறார்?
 
லிங்காவை இயக்கும் கே.எஸ்.ரவிக்குமாரிடம் அதிகம் கேட்கப்பட்ட கேள்வி இதாகதான் இருக்கும். முன்பெல்லாம் ரஜினி மட்டும்தான் பஞ்ச் பேசிக் கொண்டிருந்தார். இப்போது சினிமாவில் பஞ்சம் பிழைக்க வந்த துக்கடா நடிகர்களும்கூட அடுக்குத் தொடரில் கூடை கணக்கில் பஞ்ச் பேசி காதை பஞ்சராக்குகின்றனர்.
 
சிவாஜி படத்தில் இதை சுட்டிக் காட்டும் விவேக், வந்தவன் போனவனெல்லாம் பஞ்ச் டயலாக் பேசுறான். அதனால சிவாஜி நீ பேசாத நான் பேசிக்கிறேன் என்று சொல்லும் வசனமே படத்தில் இடம்பெற்றது. சமீபமாக ரஜினி பஞ்ச் டயலாக் பேசுவதை நிறுத்தியிருந்தாலும் லிங்காவில் பஞ்ச் டயலாக் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள ஆவல்.
 

இதுகுறித்து விளக்கமளித்த கே.எஸ்.ரவிக்குமார், திரும்பத் திரும்ப வர்ற மாதிரி எந்த பஞ்ச் டயலாக்கும் படத்தில் இல்லை என்றார்.

அதாவது, நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி பஞ்ச் டயலாக்கை பாட்ஷாவில் பல இடங்களில் ரஜினி பயன்படுத்துவார். அந்த மாதிரி எதுவும் லிங்காவில் இல்லை. அதேநேரம் ரஜினி பேசுறது எல்லாமே 'பஞ்ச்' தான் என்றும் ரவிக்குமார் கூறியுள்ளார். சிவாஜியில் பன்னிங்கதான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளாதான் வரும் என்பாரே... அதுமாதிரி.
 
பஞ்ச் டயலாக்கை விடுங்கள். கோச்சடையான் மாதிரி இது பொம்மை ரஜினி கிடையாது என்பதே பெரிய மகிழ்ச்சிதான் ரஜினி ரசிகர்களுக்கு.