வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: திங்கள், 25 ஆகஸ்ட் 2014 (19:14 IST)

நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம்தான் த்ரிஷ்யம் - நீதிபதி அதிரடி தீர்ப்பு

நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம்தான் த்ரிஷ்யம். இது காப்புரிமை சட்டத்தை மீறும் செயலாகும் என நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
 
த்ரிஷயம் படம் சென்ற டிசம்பர் மாதம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஜீத்து ஜோ‌சப் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருந்தார். தெலுங்கு, கன்னட மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றி பெற்றது. அடுத்த மாத தொடக்கத்தில் த்ரிஷயத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் ஆரம்பிக்கப்பட உள்ளது. கமல் இதில் நடிக்கிறார்.
இந்நிலையில், த்ரிஷ்யம் படத்தின் கதை என்னுடைய, ஒரு மழை காலத்து நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. அந்த‌‌க் கதையின் உரிமை எனக்கே சொந்தம். அதனை தமிழில் என்னுடைய அனுமதி இல்லாமல் எடுக்கின்றனர். அதற்கு தடை விதிக்க வேண்டும் என மலையாள எழுத்தாளர் சதீஷ்பால் கொச்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதனைத் தொடர்ந்து தமிழில் த்ரிஷியத்தை ரீமேக் செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
 
அதன் பின் சதீஷ்பாலின் நாவலை படித்த நீதிபதி, படத்தையும் பார்த்தார். அதையடுத்து அவர் அளித்த தீர்ப்பில், ஒரு மழை காலத்து நாவலுக்கும் த்ரிஷ்யம் படத்துக்கும் சிறிய வித்தியாசங்களே உள்ளன. அந்த நாவலைத் தழுவிதான் படம் எடுக்கப்பட்டு உள்ளது. இது காப்புரிமை சட்டத்தை மீறிய செயலாகும் என அதிரடியாக குறிப்பிட்டுள்ளார். மேலும், த்ரிஷயத்தை தமிழில் எடுப்பது என்றால் பிணை தொகையாக ரூபாய் பத்து லட்சத்தை முன்கூட்டியே கோர்ட்டில் செலுத்த வேண்டும் எனவும் ஆணை பிறப்பித்துள்ளார்.
 
த்ரிஷ்யம், தான் உரிமை வாங்கி வைத்திருக்கும் ஜப்பானிய நாவல், த டிவோஷன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸின் தழுவல் என இந்திப்பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் ஜீத்து ஜோ‌சப்புக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.