1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: திங்கள், 28 ஜூலை 2014 (11:41 IST)

நான்தான் யங் சூப்பர் ஸ்டார் - புதிதாக கிளம்பிய பூதம்

யங் சூப்பர் ஸ்டார் பட்டம் ஒரு தேவையற்ற சுமை, அதை இறக்கி வைக்கிறேன் என தன்னைத்தானே தலைக்கு ஏற்றிய சுமையை தானே இறக்கி வைப்பதாக எஸ்டிஆர் (சிம்பு) சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டார். இவ்வளவு நாள் எஸ்டிஆரை அலங்கரித்த யங் சூப்பர் ஸ்டார் அன்றுமுதல் அனாதையானது. அதற்கு அடைக்கலம் தர முன்வந்துள்ளார் பிரேம்ஜி அமரன்.
தமிழ் சினிமாவில் பெயருக்கு முன்னால் பட்டம் சேர்ப்பது கேலிக்கூத்தாகி வருகிறது. பெரும்பாலும் நடிகர்கள் நாலு படம் நடிக்கும் முன்பே புரட்சி, தளபதி, மக்கள் என்று ஏதாவது ஒன்றை தங்கள் பெயருடன் இணைத்துக் கொள்வார்கள். இப்போதெல்லாம் முதல் படத்திலேயே இது ஆரம்பமாகிவிடுகிறது. சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு எச்சில் ஒழுக பலரும் காத்திருக்கின்றனர்.
 
ஆர்கே என்றொரு நடிகர் இருப்பதே பலருக்கு தெரியாது. அவர் மக்கள் தளபதி என்று புதிய பட்டத்தை பெயருக்கு முன்னால் இணைத்துள்ளார். இவர்களின் கைகளில் மக்களும் புரட்சியும் படும்பாடு சொல்லி மாளாது.
 
யங் சூப்பர் ஸ்டார் பட்டம் திடீரென எஸ்டிஆரால் கைவிடப்பட்டு அனாதையானது. தான் கைவிட்டாலும் யாருடையாவது கைகளில் அதனை ஒப்படைக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு எஸ்டிஆருக்கு போகவில்லை. அவர் அந்தப் பட்டத்தை பிரேம்ஜிக்கு பரிசளித்துள்ளார்.
 
என் தலைவர் சிம்பு, யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தை எனக்கு கொடுத்துள்ளார். ஆதலால் இந்நாள் முதல் நான் யங் சூப்பர் ஸ்டார் பிரேம்ஜி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் பிரேம்ஜி.
 
யங் சூப்பர் ஸ்டார் பட்டம் தனக்கு இப்படியொரு காமெடி நிலைமை வரும் என்று ஒருபோதும் நினைத்திருக்காது.