செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: திங்கள், 21 ஜூலை 2014 (13:47 IST)

த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் கமல் ஜோ‌டி கௌதமி, மேலும் தகவல்கள்

த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கின் பூஜை சென்னையில் போடப்பட்டது. கமல், ஜீத்து ஜோ‌சப், ஜெயமோகன், ஜிப்ரான், படத்தின் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்தப் படத்தில் கமல் மனைவியாக மீனா நடித்த கதாபாத்திரத்தில் கௌதமி நடிக்கிறார்.
ஒரு த்ரில்லர் படத்தை குடும்பப் பின்னணியில் எடுத்து வெற்றிபெற வைக்க முடியும் என்பதை நிரூபித்த படம் த்ரிஷ்யம். குடும்ப உறவுகள்தான் இதில் பிரதானம். மோகன்லாலின் டீன்ஏஜ் மகள் உடை மாற்றுவதை உயர் போலீஸ் அதிகாரியின் மகன் ரகசியமாக செல்போனில் பதிவு செய்து, தனது ஆசைக்கு அவள் இணங்காவிட்டால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டுகிறான். அப்போது அங்கு வரும் மீனா (பெண்ணின் தாய்) மகளின் வீடியோவை அழித்துவிடும்படி கெஞ்சுகிறார். மிரட்டுகிறவனின் பார்வை மகளிடமிருந்து தாய்க்கு மாறுகிறது. மகள் வேண்டாம் தாய் தனது ஆசைக்கு சம்மதித்தால் போதும் என்கிறான். கோபமாகும் மகள் அவனது தலையில் இரும்புக் கம்பியால் அடிக்க அவன் இறந்து போகிறான். 
 
இறந்தது உயர் போலீஸ் அதிகாரியின் மகன். தனது குடும்பமே சிறைக்குப் போக நோரிடும் என்ற நிலையில் அந்த கொலையை மறைத்து தனது குடும்பத்தை எப்படி மோகன்லால் காப்பாற்றுகிறார் என்பது மீதி கதை. 
 
மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இப்படம் கன்னடம் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றி பெற்றுள்ளது. தமிழ் ரீமேக் விரைவில் ஆரம்பமாகிறது. 
 
மலையாளத்தில் படத்தை இயக்கிய ஜீத்து ஜோ‌சப் தமிழ் ரீமேக்கை இயக்குகிறார். ஒளிப்பதிவு சுஷித் வாசுதேவன். இவர்தான் மலையாள ஒரிஜினலுக்கும் ஒளிப்பதிவாளர். இசை ஜிப்ரான். விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக இதற்கும் இசையமைக்கிறார். இளையராஜாவுக்குப் பிறகு இப்படி தொடர்ச்சியாக கமல் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு பெற்றவர் ஜிப்ரான்தான்.
 
வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ், ராஜ்குமார் தியேட்டர்ஸ் இணைந்து படத்தை தயாரிக்கிறது.