1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: திங்கள், 25 ஆகஸ்ட் 2014 (11:56 IST)

திருட்டு டிவிடி - சொன்னபடி திருடர்களைப் பிடித்த பார்த்திபன்

திருட்டு டிவிடிக்கு எதிராக நானே நேரடியாக களம் இறங்கப் போகிறேன். திருட்டு டிவிடி குறிப்பிட்ட ஒரு திரையரங்கில் தயாராகியிருக்கிறது. அந்த திரையரங்கை சீல் வைப்பேன் என்று சில தினங்கள் முன் சொன்னதை அப்படியே செயல்படுத்தியுள்ளார் பார்த்திபன்.
திருட்டு டிவிடி விற்பனையை கண்டுபிடிக்க அதன் கேந்திரமான பர்மா பஜாருக்கு முதலில் சென்றது பார்த்திபன் அண்ட் கோ. இரண்டு கடைகளில் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் திருட்டு டிவிடி விற்பனை நடந்ததை கண்டு பிடித்தனர். அதன் கோடவுனை சோதனை செய்து 25 ஆயிரம் திருட்டு டிவிடிகளை கைப்பற்றினர். சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
ரங்கராஜபுரம், அண்ணா நகர் பகுதிகளிலும் சோதனை நடத்தி இரண்டு கடைகளை பூட்டினார்கள் பார்த்திபனும் அவரது உதவியாளர்களும். இந்த திருட்டு டிவிடிகள் தயாரானது கோவை சென்ட்ரல் திரையரங்கு என அழைக்கப்படும் அஷ்டலஷ்மி திரையரங்கில்.
 
 ஆகஸ்ட் 17 -ஆம் தேதி அதிகாலை மூன்று மணிக்கு திருட்டு டிவிடி தயாரிக்க என்றே கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை திரையிட்டு வீடியோவில் அதனை படம் பிடித்துள்ளனர்.
 
சம்பந்தப்பட்ட திரையரங்கை பூட்டி சீல் வைக்கவும், இரண்டு வருடங்களுக்கேனும் அந்தத் திரையரங்கை திறக்காமலிருக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார் பார்த்திபன். தவிர, மூன்று கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்கவும் முடிவு செய்துள்ளார்.
 
இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து இரு முடிவுகள் எடுத்துள்ளார் பார்த்திபன்.
 
இனிமேல் திருட்டு டிவிடி விற்றால் அது வெறும் கைதாக மட்டும் இருக்காது, அடிதடியும் நிச்சயம்.
 
இனி பார்த்திபனே அவரது படத்தின் டிவிடியை 100 ரூபாய்க்கு விற்பனை செய்வார்.
 
பார்த்திபனின் அதிரடி நடவடிக்கை திருட்டு டிவிடி விற்பனை செய்கிறவர்களை ரொம்பவே யோசிக்க வைத்திருப்பது அவருக்கு கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.