வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: புதன், 27 ஆகஸ்ட் 2014 (15:44 IST)

சிவன் அல்-கொய்தாவை விட மோசம்

சிவனின் செயல் அல் கொய்தாவைவிட மோசம் என்று கூறி பிரச்சனையில் சிக்கியுள்ளார் ராம் கோபால் வர்மா.
 
என்ன பிரச்சனை? 
 
பிள்ளையார் எப்படி பிறந்தார் என்பது குறித்து பல கதைகள் உலவுகிறது. அதில் பிரதானமானது, பார்வதி தேவி குளிக்க செல்கையில் தனது அழுக்கை உருட்டி ஒரு பாலகனை செய்து காவலுக்கு நிறுத்தினார் என்பது. அந்த நேரம் பார்த்து சிவன் பார்வதியை பார்க்க வருகிறார். பார்வதியின் அழுக்கால் உயிர் பெற்றவர் என்பதால் பார்வதியின் கணவரான சிவனை கணபதிக்கு தெரியவில்லை. அம்மா குளிக்கிறாங்க, இப்போதைக்கு பார்க்க முடியாது என்று சிவனை தடுக்கிறார்.
 
சிவனுக்கு சும்மாவே மூக்கு மேல் சிவக்கும். தனது மனைவியைப் பார்க்க ஒரு பாலகன் முடியாது என்றதும் கோபம் உக்கிரமடைய அவனது தலையை வாளால் கொய்து விடுகிறார். விஷயம் தெரிந்த பார்வதி ருத்திரமடைய தெய்வீகப் போர் மூள்வதற்கான நிலைமை. பிறகு இருவரையும் சமாதானப்படுத்துகிறார்கள். கோபம் தணிந்த சிவன், வடக்கு நோக்கி செல்லுங்கள், முதலில் யார் எதிர்படுகிறார்களோ அவர்களின் தலையை வெட்டி எடுத்து வந்து பாலகனின் வெட்டுண்ட கழுத்தில் பொருத்தினால் பாலகன் உயிர் பெறுவான் என்கிறார். 
 
வடக்கு நோக்கி செல்கிறவர்களுக்கு முதலில் எதிர்படுவது ஒரு யானை. அதன் தலையை கொய்து வந்து பாலகனின் கழுத்தில் பொருத்த, கணபதி உயிர் பெறுகிறார். கணபதிக்கு யானை தலை வந்ததற்கான காரணம் இதுதான் என்று புராணம் சொல்கிறது. 
 
ச‌ரி, மேட்டருக்கு வருவோம். இதே கதையைதான் வர்மாவும் கூறியிருக்கிறார். பார்வதி தேவி குளிக்கும் போது அவர் பாலகன் ஒருவனை காவலுக்கு வைத்துள்ளார். சிவன் அந்த பாலகனின் தலையை கொய்து பிறகு ஒரு யானை தலையை பொருத்தியுள்ளார். பாலகனின் தலையை வெட்டியது அல் கொய்தா தீவிரவாதியை விட மோசமானது என்றிருக்கிறார் வர்மா.
 
உடனே அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் ஒரு வக்கீல். இந்து புராணங்க‌ளில் சொல்லப்படும் கதைகளை விஸ்தரித்தால் அது இன்றைய அறத்துக்கு ஒரு சதவீதம் கூட பொருந்தாது. வர்மா மீது வழக்கு தொடர்ந்ததுக்குப் பதில் காலங்காலமாக பேசப்பட்டு வரும் இந்த புராண கதைகளுக்கு அந்த வக்கீல் விடை தேட முயன்றிருக்கலாம்.