வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Webdunia

பந்து வீச்சு அபாரம்! இந்தியா மீண்டும் எளிதாக வெற்றி பெற்றது!

20 ஓவர் உலகக் கோப்பை 2வது போட்டியிலும் இந்திய ஸ்பின் பந்து வீச்சு குறிப்பாக அமித் மிஸ்ரா, அஸ்வினின் பந்து வீச்சு பிரமாதமாக அமைய வெஸ்ட் இண்டீஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தி தொடர்ச்சியாக 2வது வெற்றியைப் பெற்றது.
FILE

டாஸ் வென்ற தோனி மேற்கிந்திய தீவுகளை பேட் செய்ய அழைக்க அந்த அணி 129 ரன்களுக்கு 7 விக்கெட் என்று மட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆடிய இந்தியா ரோகித், கோலி அரைசதங்களுடன் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்தியா 19.4 ஓவர்களில்தான் இந்த வெற்றியைப் பெற்றது. கடந்த உலகக் கோப்பை போல் நெட் ரன் விகிதம் வந்தால் பிரச்சனைதான். ஆனால் பாகிஸ்தான், வேஸ்ட் இண்டீஸை வீழ்த்திய விதம், இந்தியாவுக்கு அந்தப் பிரச்சனையெல்லாம் இல்லாமலேயே அரையிறுதி வாய்ப்பைப் பெற்றுத் தரும் என்று நம்புவோமாக!
FILE

புவனேஷ் குமார் இன்று சாதனை புரிந்தார். அதாவது T20 சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் சிக்கனமான பந்து வீச்சை வீசியவர் என்ற சாதனையை புரிந்தார். அதுவும் T20 கிரிக்கெட்டில் உலகின் சிறந்த அதிரடி மன்னன் கெய்ல் இருக்கும்போதே 3 ஓவர்களில் 3 ரன்களை மட்டுமே புவனேஷ் கொடுத்தார். இது ஒரு T20 உலக சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. டிவைன் ஸ்மித் தடவு தடவென்று தடவி கடைசியில் 29 பந்து 11 ரன் எடுத்து 8வது ஓவரில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து அஸ்வின் பவுலிங்கில் வீழ்ந்தார்.
FILE

முன்னதாக கெய்லுக்கு அஸ்வின் ஸ்லிப்பில் கேட்ச் விட்டார். பீல்டிங் இந்த டோர்னமென்டில் மோசமாக உள்ளது. ஆஸ்ட்ரேலியாவையும் கேட்ச் விடும் வியாதி பீடித்ததை இன்று பாகிஸ்தானுக்கு எதிரகாக் கண்டோம். இந்தியா தொடர்ந்து பீல்டிங் சொதப்பல் செய்து வருகிறது.
FILE

கிறிஸ் கெய்ல் இன்று சாதுவாக்கப்பட்டார். தோனி அவரை சாதுவாக்கினார். ஒன்றும் அடிக்க முடியவில்லை. மிஸ்ரா வந்தவுடன் ஒரு சிக்ஸ் அடித்தார். 33 பந்துகளில் 34 ரன்களை மட்டுமே எடுத்த கெய்ல் அடுத்ததாக மோசமான ஒரு ரன் அவுட்டில் வெளியேறினார். ஷமி அருமையான பீல்டிங்.

30 ரன்களுக்கு மேல் கெய்ல் எடுத்து இவ்வளவு அதிக பந்துகளை எடுத்துக் கொண்டது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. சாமியெல்ஸ் 22 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து அமித் மிஸ்ராவின் லெக் ஸ்பின் பந்தை மேலேறி வந்து அடிக்க நினைக்க பந்து திரும்பி மட்டையைக் கடந்து தோனியிடம் செல்ல அவர் ஸ்டம்பிங் செய்தார்.

அடுத்த பந்தே மிஸ்ரா அபாரமாக ஒரு ஃபாஸ்ட் கூக்ளியை வீச டிவைன் பிராவோ நேராக காலில் வாங்கி எல்.பி ஆகி வெளியேறினார். 15வது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 74/4 என்று தடுமாறியது. டேரன் சமி 11 ரன்கள் எடுத்தார் அவர் ஜடேஜா பந்தை லாங் ஆஃபில் தூக்கி அடிக்க ரோகித் அதனை பவுண்டரிக்கு இஞ்ச் முன்னதாக பிடித்தார்.
FILE

ஆந்ரே ரசல் ஒரு சிக்சருடன் 7 ரன்கள் எடுத்திருந்தபோது ஜடேஜா பந்தை மிட்விக்கெட்டில் மிஸ்டைம் செய்து கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆஅனார்.

கடசியில் சிம்மன்ஸ் நன்றாக ஆடினார். 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் அவர் 27 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்தில் பேக்வர்ட் பாயிண்டில் டநானிடம் கேட்ச் கொடுத்தார். இதனியும் விட்டிருப்பார் தவான் நல்லவேளையாக தவறிய பந்தையும் அப்படியே அமுக்கிவிட்டார்.

கடைசி ஓவரை ஜடேஜாவிடம் தோனி கொடுக்க தேவையில்லாமல் 21 ரன்கள் விளாசப்பட்டது. இல்லாவிட்டால் வெஸ்ட் இண்டீஸ் 110 ரன்கள்தான்.

மிஸ்ரா 4 ஓவர் 18 ரன் 2 விக்கெட். ஜடேஜா 4 ஓவர் 48 ரன்கள் 3 விக்கெட். அஸ்வின் 24 ரன் ஒரு விக்கெட்.
தொடர்ந்து இந்தியா ஆடியபோது தவானுக்கு படுமோசமான தீர்ப்பு வழங்கப்பட்டது. லெக் ஸ்பின்னர் பத்ரீ வீசிய பந்து பிட்ச் ஆனது லெக் ஸ்டம்பிற்கு வெளியே அங்கே அது எல்பி தீர்ப்புக்கு லாயக்கற்ற பந்து ஆகிவிட்டது. ஆனால் நடுவர் அவுட் என்றார். படுமோசமான தீர்ப்பு.
FILE

அதன் பிறகு கோலி களமிறங்கினார். ரோகித், கோலி இருவரும் மிகவும் அனாயசமாக விளையாடினர். காரணம் சமி தாக்குதல் பீல்ட் செட் அப் செய்வதை விடுத்து சிங்கிள்களை நிறைய அள்ளி வழங்கினார். ஆனால் கோலி வந்தவுடனேயே பத்ரியை மிட் விக்கெட்டில் தூக்கி சிக்சர் அடித்தார்.

கோலி 34 பந்துகளில் அரை சதம் கண்டு 5 பவுண்டரி 1 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டத்தை சீக்கிரம் முடிக்க ரசல் பந்தை ஒரு சுழற்று சுழற்றினார் பந்து சிக்கவில்லை பவுல்டு ஆனார். 107/2 ஓவர் 14.4. அடுத்த 23 ரன்களை 10 அல்லது 15பந்துகளில் இந்தியா எடுத்திருக்கவேண்டும். கோலியும் ரோகித்தும் 74 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்தனர்.

யுவ்ராஜ் களமிறங்கி ரசலை ஒரு அபார புல் பவுண்டரி அடித்தார். ஆனால் அடுத்தடுத்து ஒரே தடவல். 19 பந்துகளில் அவர் 10 ரன்கள் எடுத்து ஜெயிக்க 3 ரன்கள் இருக்கும்போது கடைசி ஓவரின் 3வது பந்தில் அவுட் ஆக எதிர்முனையில் ரோகித் சர்மா அதிருப்தியை வெளிப்படையாக காண்பித்தார். பெவிலியனில் கோலி கடும் கோபமடைந்தார். தோனி பேடைக் கட்டிக் கொண்டு வெளியில் வந்து நின்றார். இவ்வளவு டென்ஷனைக் கிளப்பி விட்டார் யுவ்ராஜ்.

ஆனால் ரெய்னா வந்து பளார் என்று ஒரு கட் அடித்து முடித்து வைத்தார். ரோகித் சர்மா 55 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்கள் சகிதம் 62 நாட் அவுட்.

இந்தியா 19.4 ஓவர்களில் 130/3. வெற்றி. ஆட்டநாயகனாக தொடர்ந்து 2வது முறையாக அமித் மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டார்.