1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Updated : சனி, 20 செப்டம்பர் 2014 (11:38 IST)

காரியம் அறிந்து காய் நகர்த்திய தயாரிப்பாளர்

ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் ஐ படத்தை தயாரித்துள்ள ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் கடைநிலையிலிருந்து முன்னுக்கு வந்தவர். முன்பு இவர் தயாரிப்பாளரல்ல, விநியோகஸ்தர். ஜாக்கிசான் படங்களை அதிகம் வாங்கி வெளியிட்டவர். படிப்படியாக முன்னேறி படம் தயாரித்து இப்போது தசாவதாரம், ஐ என பிரமாண்டங்களாக போட்டுத் தள்ளுகிறார்.
ஐ படம் எந்திரனைவிட அதிக பட்ஜெட்டில் தயாரானதாக கூறப்படுகிறது. அதனை வசூல் செய்ய தமிழில் மட்டும் படம் ஓடினால் போதாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று மூன்று மாநிலங்களிலும் படம் சக்கைப்போடு போட வேண்டும்.
 
கேரளா, ஆந்திராவைப் பொறுத்தவரை பிரச்சனை இல்லை. கர்நாடகாவில்தான் வில்லங்கம். கன்னட படங்கள் ஓட வேண்டும் என்பதற்காக பிறமொழிப் படங்களை அவை வெளியாகி சில வாரங்கள் கழித்தே திரையிட வேண்டும் என்ற கொள்கை இப்போதும் கர்நாடகாவில் நடைமுறையில் உள்ளது. மேலும், குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பிறமொழிப் படங்களை கர்நாடக திரையரங்குகளில் வெளியிடவும் முடியாது.
 
இந்த நெருக்கடிகளிலிருந்து விதிவிலக்கு கிடைக்க வேண்டுமானால் கர்நாடக திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் புனித் ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஆதரவு வேண்டும். அதற்கான முதல்முயற்சிதான் ஐ ஆடியோ வெளியீட்டு விழாவில் புனித் ராஜ்குமாரை அழைத்ததும், அர்னால்ட் பக்கத்தில் உட்கார வைத்ததும். 
 
இந்த ட்ரீட்மெண்ட் ஐ -க்கு சாதகமான சூழலை கர்நாடகாவில் உருவாக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.