வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : செவ்வாய், 22 ஜூலை 2014 (17:21 IST)

காசு... பணம்... துட்டு... மணீ மணீ... கவிப்பேரரசு மீது மாணவர்களின் ஆதங்கம்

கவிப்பேரரசு வைரமுத்து மீதுள்ள அன்பிலும் மரியாதையிலும் அவரை தங்கள் கல்லூரியின் தமிழ் இலக்கிய விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அழைத்திருக்கிறார்கள் ஒரு கல்லூரியின் மாணவர்கள். அவர்களுக்கேற்பட்ட அனுபவத்தை சம்பந்தப்பட்ட மாணவர் ஜோ‌ பிரிட்டோ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விரிவாக கூறியுள்ளார்.
 
இந்த பதிவை ஒட்டிதான் இப்போது இரு பிரிவாக பிரிந்து ஃபேஸ்புக்கில் பலரும் மோதிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பதிவை நீங்களும் படித்துப் பாருங்கள்.
கவிஞர் வைரமுத்து அவர்களை நேரில் சந்தித்து, எங்கள் கல்லூரி தமிழ் இலக்கிய விழாவில் உரை ஆற்ற அழைத்தோம். முதலில் அவர்களுடைய உதவியாளரை தொடர்பு கொண்டு பேசினோம். கவிஞரை நேரில் சந்திப்பதற்கு அனுமதி பெற்றோம். அவர்களை நேரில் சந்தித்தபோது அழைப்பிதழை வழங்கினோம். பின்பு விழாவினைப் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார் . அதன் பின் மகிழ்ச்சியோடு கலந்து கொள்வதாக உறுதி அளித்தார். 

ஆனால் அவர் தரப்பில் சில நிபந்தனைகள் வைக்கப்பட்டது. அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றோம். இறுதியாக ஒரு நிபந்தனை. அவர் எழுதிய மூன்றாம் உலகப்போர் என்ற புத்தகத்தை 500 புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று கூறினார்கள். நாங்கள் அழைப்பு விடுத்திருந்த நிகழ்ச்சி மாணவர்களால் தங்கள் செலவில் நடத்த‌ப்படுகின்ற நிகழ்ச்சி. அப்போது அது மிகப்பெரிய தொகையாக இருந்தது .ஒரு புத்தகத்தின் விலை 240. 500 புத்தகங்களின் விலை 1,20,000 (ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய்) ஆனால் நாங்கள் 300 புத்தகங்கள் வாங்க சம்மதம் தெரிவித்தோம். அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துவிட்டோம். 
 
இரண்டு நாட்களுக்கு‌ப் பின்பு கவிஞருடைய வீட்டு தொலைபேசி எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. அவருடைய உதவியாளர் பேசினார். மீண்டும் 500 புத்தகங்கள் வாங்கியாக வேண்டும் என்று கூறினார். அப்போது 500 புத்தங்கள் வாங்க நாங்கள் தயார் நிலையில் இருந்தாலும், 
 
இப்படிப்பட்டவர் இலக்கிய விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டோம்.
 
ஒருவர் ஒரு புத்தகத்தை எழுதினால் அதை புத்தக ஆர்வலர்கள் தாங்களாகவே வாங்கவேண்டும், இப்படி வலுக்கட்டாயமாக தள்ளக்கூடாது. பிரபலங்கள் எழுதுகின்ற புத்தகங்கள் இப்படித்தான் விற்பனை செய்யப்படுகின்றது. 
 
தமிழை வளர்ப்பவர்களை விட தமிழை வைத்து வாழ்பவர்கள் தமிழ்நாட்டில் அதிகம்.