வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Updated : புதன், 20 ஆகஸ்ட் 2014 (12:57 IST)

கத்தி, புலிப்பார்வை படங்களுக்கு எதிராக 65 இயக்க தலைவர்களின் கூட்டறிக்கை

கத்தி, புலிப்பார்வை படங்களுக்கு எதிரான குரல்கள் வலுப்பெற்று வருகின்றன. தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் 65 இயக்கங்களைச் சார்ந்தவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள், சமூக இயக்கங்கள், தமிழர் அமைப்புகள் என பல்வேறு அமைப்புகளின், கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் அறிக்கை ஒன்று இயக்கங்கள் சார்பில் வெளியிடப்பட்டது. அந்த கூட்டறிக்கையின் விவரம் வருமாறு.
அன்று வியட்நாம் போரின் கொடூரத்தை உலககுக்கு எடுத்துச் சொன்னது ஒரு சிறுமியின் படம். அதேபோல் தமிழீழ விடுதலைப் போரின் உச்ச கொடூரத்தை சர்வதேச சமூகம் முன்வைத்தது தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் இளைய மகன் பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் குறித்த புகைப்படங்கள்.
 
சிங்கள வல்லூறுகளிடம் உயிருடன் சிக்கி நெஞ்சப் பரப்பெங்கும் வஞ்சகத்தார் துப்பாக்கி குண்டுகளால் துளைத்த அந்தப் பிஞ்சுவின் புகைப்பட காட்சிகள் கண்டு கதறியழுது கண்ணீர் விடாத இதயம் எதுவும் இல்லை. தற்போது பாலச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்வதாக கூறும் வகையில் புலிப் பார்வை என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதன் காட்சிகளைப் பார்க்கும் மனசாட்சி உள்ள எந்த மனிதருமே இப்படி ஒரு அப்பட்டமான இனத்துரோக சிந்தனையுடன் கூடிய படம் தமிழகத்தில் இருந்து வெளியாகிறதே என்று கொந்தளிக்கத்தான் செய்வார்கள்.
இந்த படத்தின் காட்சிகள் அனைத்திலுமே பாலகன் பாலச்சந்திரன் சிறார் போராளியாக சித்தரிக்கப்படுகிறார். இது உண்மைக்கு மாறானது. அத்தனை காட்சிகளிலுமே துப்பாக்கியுடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சீருடையுடனுமே பாலச்சந்திரன் பாத்திரம் வலம் வருகிறது.
 
உச்சகட்ட கொடூரமாக தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன், பாலச்சந்திரனுக்கும் சிறார்களுக்கும் ஆயுத பயிற்சி கொடுப்பதாக காட்சிகள் வருகின்றன. இவை அனைத்துமே சிங்களத்தின் பொய்யுரைக்கு வலுச்சேர்க்கவே பயன்படும். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் தொடர்பான உண்மை புகைப்படம் எதனிலும் அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கச் சீருடையுடன் ஆயுதப் போராளியாக இருந்ததே கிடையாது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆளுமை செலுத்திய காலத்தில் பாலகன் பாலச்சந்திரன், அங்கு கல்வி கற்றுக் கொண்டிருந்தார். அது தொடர்பான செய்திகளும் படங்களும் உலகத்தின் பார்வைக்கும் வந்திருக்கின்றன. ஆனால் போர்முனையில் பாலகன் பாலச்சந்திரன் பலியானதாக காட்டி அந்தப் படுகொலையை நியாயப்படுத்தத் துடிக்கிறது புலிப் பார்வை திரைப்படம். இது சிங்களப் பேரினவாதத்தின் பொய்யுரைக்கு வலு சேர்க்கிற திரைப்படம்.
 
பாலகன் பாலச்சந்திரன் போன்ற பிஞ்சுக் குழந்தைகளையும் அப்பாவி பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி சிங்களப் பேரினவாதம் படுகொலை செய்ததை நியாயப்படுத்துகிற இனவெறியின் உச்சகுரலே புலிப் பார்வை திரைப்படம். இனக்கொலை புரிந்த குற்றச்சாட்டின் பேரில் சிங்களப் பேரினவாத அரசு பன்னாட்டுப் புலனாய்வுக்கு உள்ளாகியிருக்கும் நேரத்தில் சிங்களத்தைக் காப்பாற்றும் முயற்சியாக இத்திரைப்படம் வந்துள்ளது. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
 

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கத்தி திரைப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் கடந்த ஒரு மாத காலமாக ஓடிக் கொண்டிருக்கிறன. தமிழீழ பிரச்சனையில் ஒட்டுமொத்த தமிழகமே ஒன்று திரண்ட நிலையில், இலங்கை பேரினவாத அரசு மீது பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தி தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் சிங்களப் பேரினவாதமும் அதன் தலைமைத்துவத்தில் இருக்கிற போர்க்குற்றவாளியான ராஜபக்சேவும் ஒட்டுமொத்த தமிழினத்தின் கொந்தளிப்பை கொச்சைப்படுத்த, திசை திருப்ப, மழுங்கடிக்க கையில் எடுத்த உத்திதான் தமிழ்நாட்டு சட்டமன்ற தீர்மானத்தை தோற்கடிக்கும் வகையில் தமிழ்த் திரை உலகத்துக்குள் பணத்தை பாய்ச்சுவது என்பது. தமிழ்த் திரை உலகத்தில் ஐங்கரன் கருணாவை அனைவரும் அறிவர். ஆனால் அவருடன் மெல்ல மெல்ல லைக்கா என்ற நிறுவனம் இணைந்து கோடம்பாகத்தில் கால்பதித்தது. அத்துடன் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படத்தை தயாரிக்கிறது லைக்கா நிறுவனம். 
 
இந்த தகவல்கள் வெளியானது முதலே லைக்கா நிறுவனத்துக்கும் ராஜபக்சே குடும்பத்துக்குமான உறவுகள் என்ன என்பது குறித்து நீண்ட பட்டியல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. லைக்கா நிறுவனமே இந்தியாவில் இல்லை என்று சொன்னபோது சென்னையிலே அதன் அலுவலகம் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக லைக்காவின் சுபாஸ்கரன் அல்லிராஜா ஒரு ஈழத் தமிழர் என்று சப்பை கட்டு கட்டப்படுகிறது. ஆமாம் சுபாஸ்கரன் அல்லிராஜா ஒரு ஈழத் தமிழர்தான். சந்தேகம் இல்லையே.
ஆனால் முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக உறவுகள் படுகொலை செய்யப்பட்ட போது நம் இனத்தின் மீது நச்சுகுண்டுகளை வீசிய அதே சிங்கள ராணுவத்தின் ஹெலிகாப்டரில் போய் இறங்கும் அளவுக்கு ராஜபக்சே கும்பலிடம் செல்வாக்கு கொண்ட இன்னொரு டக்ளஸும் கருணாவும்தான் இந்த சுபாஸ்கரன் என்பது உலகத் தமிழினம் நன்கறியும்.
 
முருகதாஸ், விஜய் என்ற தமிழர்கள் செய்யும் இனத்துரோகத்தை இனமானம் உள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்க முடியாது. உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலையை நிகழ்த்திய போர்க்குற்றவாளிகளின் கரங்களில் படிந்திருப்பது நம் தொப்புள்கொடி உறவுகளின் ரத்தம் என்பதை மறந்துவிட முடியாது. ஒரு மனிதனாக இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மனிதப் பேரவலத்தை நிகழ்த்திய மிக மோசமாக மனித உரிமைகளை காலில்போட்டு மிதித்த போர்க்குற்றவாளியான ராஜபக்சேவுடன் யார் கரம் குலுக்கினாலும் மன்னிக்கவும் முடியாது.
 
இப்படி புலிப் பார்வை, கத்தி போன்ற திரைப்படங்கள் தமிழினத்தின் உளவியல் சிந்தனை மீது நடத்தப்படுகிற போரின் வெளிப்பாடே. சிறீலங்காவை புறக்கணிப்போம், அதன் மீது பொருளாதார தடைவிதிப்போம் என்ற முழக்கம் தமிழகத்திலும் உலகெங்கிலும் எழுந்து வரும் நிலையில் தமிழகத்துக்குள்ளேயே சிங்களம் தலை நுழைத்து தொழில் வணிகம் செய்கிற முயற்சியை தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
 
சிங்களத்தின் உளவியல் போரை வெல்ல தமிழர்களாய் ஓரணியில் ஒன்று திரள்வோம், தமிழீழ விடுதலையை மீட்டெடுப்போம்.