1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : வியாழன், 10 ஜூலை 2014 (15:16 IST)

உதயநிதியின் நண்பேன்டா படப்பிடிப்புக்கு தடை - திருப்பி அனுப்பப்பட்ட உதயநிதி, சந்தானம்

உதயநிதி தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் தயாரித்து நடித்து வரும் படம் நண்பேன்டா. நயன்தாரா ஜோ‌டியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நடத்தப்பட்டது. தற்போது தஞ்சையில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் அறிமுக இயக்குனர் ஜெகதீஷ்.
தஞ்சை மணிமண்டபம் அருகே அரசு குழந்தைகள் இல்லமும், அரசு கூர்நோக்கு இல்லமும் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சிறைக்கூடமாகும். கூர்நோக்கு இல்ல வளாகத்தில் நண்பேன்டா படப்பிடிப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்தனர். ஆனால் திடீர் மழைக் காரணமாக படப்பிடிப்பு நடைபெறவில்லை.
 

மறுநாள் உதயநிதி, சந்தானம் உள்ளிட்ட படப்பிடிப்புக்குழு கூர்நோக்கு இல்ல வளாகத்துக்கு வந்தனர். ஆனால் அதன் ஊழியர்கள் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என தடை விதித்தனர். முறையான அனுமதி கடிதம் பெறாததால் அவர்கள் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்புக்குழு திரும்பிச் சென்றது.
அரசுசார் இல்லங்களில் படப்பிடிப்பு நடத்த சென்னையிலுள்ள சமூக பாதுகாப்புத்துறை இயக்குனர் அலுவலகத்தில் முறைப்படி அனுமதி வாங்க வேண்டும். அதற்கான கடிதம் படப்பிடிப்புக்குழுவால் சென்னையில் கொடுக்கப்பட்டது. ஆனால் குறித்த காலத்தில் அனுமதி கிடைக்கவில்லை என தெரிகிறது. அதனால் அனுமதி கேட்டு அனுப்பிய கடிதத்தின் நகலை வைத்து படப்பிடிப்பு நடத்த முயன்றுள்ளனர். அதன் காரணமாகவே படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கவில்லை என கூர்நோக்கு இல்லத்தின் ஊழியர்கள் தெரிவித்தனர்.