வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: வெள்ளி, 18 ஜூலை 2014 (18:24 IST)

ஆக. 17 நடிகர் சங்க பொதுக்குழு - பெயர் மாற்றம் குறித்து விவாதிக்கப்படுமா?

ஆடி மாதம் முழுவதும் தமிழ் சினிமா கொஞ்சம் மந்தமாகவே இருக்கும். ஆடி மாதம் புதுப் படங்களுக்கு  பூஜை போடக் கூடாது, நல்ல காரியங்கள் தொடங்கக் கூடாது என்று ஆன்மீக சென்டிமெண்ட். நடிகர் சங்கமும் இந்த சென்டிமெண்டை சின்சியராக கடைபிடிக்கிறது போல. ஆடி முடிந்த மறுநாள் - அதாவது ஆகஸ்ட் 17 -ம் தேதி சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டியிருக்கிறார்கள்.
 
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக சரத்குமார் இருக்கிறார். பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர். இவர்கள் தவிர துணைத்தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என்று பல பதவிகள் உள்ளன. இவர்களின் பதவி காலம் அடுத்த வருடம் முடிகிறது. 2015 - 2018 ஆண்டுகளுக்கான சங்க நிர்வாகிகளை தேர்வு செய்ய எப்போது தேர்தல் நடத்தலாம் என்று தேர்தல் தேதியை முடிவு செய்யவும், சங்கத்தின் வரவு செலவு கணக்கை சமர்ப்பிக்கவும், சங்க நடவடிக்கைகள் மீது விவாதம் நடத்தவும் இந்த பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது.
 
ஆகஸ்ட் 17 சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் பொதுக்குழு கூடுகிறது. சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுக்குழுவில் கலந்து கொள்ள தனித்தனியே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
 
மலையாளம், தெலுங்கு, கன்னட சினிமாக்கள் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கிய போது வைத்த பெயர்தான் தென்னிந்திய நடிகர் சங்கம். இப்போது மலையாளம், தெலுங்கு, கன்னட சினிமாக்கள் அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களை மையப்படுத்தி இயங்குகின்றன. அந்த மாநிலங்களுக்கென்று தனித்தனியே நடிகர் சங்கங்களும் உள்ளன. இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை தமிழ்பட நடிகர் சங்கம் என்று மாற்றலாமே என பாரதிராஜா பலகாலமாக குரல் கொடுத்து வருகிறார். தென்னிந்திய என்று இயங்கி வந்த இயக்குனர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்பட இயக்குனர்கள் சங்கம், தமிழ்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்று பெயர் மாறிவிட்டன. நடிகர்கள் சங்கம் மட்டும் இன்னும் அர்த்தமே இல்லாத தென்னிந்தியாவைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறது. 
 
சென்ற வாரம் நடந்த சினிமா விழாவில்கூட நடிகர் சங்கத்தின் பெயரை மாற்ற பாரதிராஜா வலியுறுத்தினார். இந்தப் பொதுக்குழுவில் பெயர் மாற்றம் செய்யப்படுமா? குறைந்தபட்சம் அது குறித்து விவாதிக்கப்படுமா? 
 
எல்லாம் நிர்வாகிகள் கைகளில்தான் இருக்கிறது.