வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 27 ஆகஸ்ட் 2016 (17:50 IST)

தான்தோன்றித்தனமாக பேசாதீர்கள் - விஷாலை விளாசிய திருப்பூர் சுப்பிரமணியம்

எத்தனை நாள் தூங்காமல் கொதித்துக் கொண்டிருந்தாரோ. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பஜ்ஜி, போண்டா சாப்பிடுகிறார்களே தவிர வேலை ஒன்றும் நடப்பதில்லை என்று பேட்டிளித்த விஷாலை விட்டு விளாசியிருக்கிறார் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம்.


 
 
அந்த அறிக்கையை பார்ப்போம்.
 
"தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருப்பவர்கள் மட்டுமே திறமைசாலிகள், தமிழ் சினிமாவில் இருக்கும் பிற சங்கங்கத்தில் இருப்பவர்கள் எல்லோரையும் முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டு நடிகர் விஷால் தன் இஷ்டத்துக்கு தான்தோன்றித்தனமாக பேசிவருகிறார். இது நியாயமில்லை. தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் என்று மூன்று சங்கங்கள்தான் தமிழ் திரையுலகத்தின் ஆணிவேர். 
 
தயாரிப்பாளர்கள் முதலீடு போடுகிறார்கள். விநியோகஸ்தர்கள் படங்களை விலைக்கு வாங்குகிறார்கள். திரையரங்கு உரிமையாளர்கள் மக்களுக்கு திரையிட்டு காட்டுகிறார்கள். சினிமாவில் இருக்கும் ஏனைய சங்கங்கள் இந்த மூன்று அமைப்புக்கும் சப்போர்ட்டிவ்வாக இருந்து வருகிறது. இதுதான் உண்மை.
 
ஒரு திரைப்படம் உருவாவதற்கு மூலகர்த்தா தயாரிப்பாளர்கள். அவர்களை பஞ்சாயத்து பண்ணுவதற்கு மட்டும் முன்னாடி வந்து விடுகிறார்கள் என்று கேலி செய்வது கண்டனத்துக்குரியது. இருபது வருஷத்துக்கு முன்பு விஷால் அப்பா ஜி.கே.ரெட்டி தயாரிப்பில் சரத்குமார் நடித்த மகாபிரபு திரைப்படம் ரிலீஸாக முடியாத அளவுக்கு நெருக்கடியை சந்தித்தது. அப்போது இதே தயாரிப்பாளர்கள் பஞ்சாயத்து செய்ததால்தான் அந்தபடமே ரிலீஸானது.
 
அடுத்து விஷால் நடித்த பாயும்புலி ரிலீஸ் செய்யும்போது செங்கல்பட்டு பகுதி விநியோகத்தில் பிரச்சனை ஏற்பட்டது. அப்போதும் மதுரையில் இருந்த என்னை போன் போட்டு பஞ்சாயத்து செய்ய அழைத்தனர். இதே விஷாலும் அந்த பஞ்சாயத்தில் அமர்ந்து இருந்தார். நாங்கள் பஞ்சாயத்து செய்தால் சரியாகாது என்று இன்று சொல்லும் இவர் அன்று ஏன் பாயும்புலி படரிலீஸ் பஞ்சாயத்தில் ஏன் கலந்து கொண்டார். அன்றைக்கு நடிகர் சங்கத்தை வைத்துக்கொண்டு பாயும்புலியை ரிலீஸ் செய்ய வேண்டியதுதானே. அப்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உதவியால்தானே தனது படத்தை விஷால் ரிலீஸ் செய்தார்.
 
தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் போண்டா, பஜ்ஜி சாப்பிடுகிறார்கள் என்று விஷால் கிண்டல் செய்து கேவலமாக பேசி இருக்கிறார். நடிகர்கள் நடித்து முடித்த பிறகு அதோடு நம் வேலை முடிந்து விட்டது என்று போய்விடுகிறார்கள். அதன்பின் அந்த படத்தை பணத்தை செலவு செய்து எடுத்த தயாரிப்பாளர் எப்படி இருக்கிறார்? உயிரோடு இருக்கிறாரா? என்று மனிதாபிமான முறையில் எண்ணி பார்ப்பதுகூட கிடையாது. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலும் ரஜினி, கமல் காலத்திலும் பிரச்சனைகள் வந்து கொண்டுதான் இருந்தது. அப்படி பிரச்சனைகள் வரும்போது தயாரிப்பாளர்களோடு ஹீரோக்களும் ஒன்றாக அமர்ந்து பிரச்னையை பேசி சுமூகமாக தீர்ப்பார்கள். இன்றைக்கு சினிமாவில் நடிக்கும் ஹீரோக்கள் தங்கள் படத்துக்கு ஒரு பிரச்சனை என்றால் எத்தனை ஹீரோக்கள் முன்வந்து நிற்கிறார்கள்?
 
நாங்கள் எங்கள் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தில் ஒரு தியேட்டரில் திருட்டு விசிடி எடுத்தால் அந்த தியேட்டரை காலவரையரையின்றி மூடச் சொல்கிறோம். நீங்கள் உங்கள் நடிகர் சங்கத்தில், ஒரு நடிகர் தயாரிப்பளருக்கு அதிக செலவு வைத்தால் அந்த நடிகரை தடை பண்ணுங்கள் என்று நீங்கள் சொல்ல தைரியம் இருக்கிறதா? ஒரு திரைப்படத்தை ஆரம்பிக்கும்போது ஒரு தயாரிப்பாளர் ஒரு பட்ஜெட்டில் ஆரம்பிக்கிறார். அதே படத்தை முடிக்கும்போது ஹீரோ அவர் வசதிக்கு ஏற்றபடி பட்ஜெட்டை அதிகமாக இழுத்துவிட்டு விடுகிறார்.
 
முதலில் படத்தின் கதை என்னவென்றே தெரியாமல் நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் தயாரித்து வருகிறார்கள். ஏனென்றால் தற்போது முன்னணியில் இருக்கும் பத்து ஹீரோக்கள், அவர்கள்தான் கதை, கதாநாயகி, காமெடி நடிகர், இசையமைப்பாளர், டைரக்டர் என்று எல்லோரையும் தேர்வு செய்கிறார்கள். ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் எங்கள் படம்.. என்று தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். அதே படம் தோற்றுப்போய் விட்டால் இந்தப் படத்துக்கும் எங்களுக்கும் சம்மந்தமே இல்லை என்று தயாரிப்பாளர், டைரக்டர் பக்கம் கையைக் காட்டிவிட்டு தப்பித்துக் கொள்கிறார்கள். வெற்றி தோல்வி எல்லாவற்றிலும் நடிகர்கள் பங்கு எடுங்கள்.
 
நான் சினிமாவுக்கு வந்து 35 வருடங்கள் ஆகிறது. இந்த சினிமாவில் எந்த தயாரிப்பாளர் பங்களா வைத்து இருக்கிறார் என்று சொல்லுங்கள். எல்லா தயாரிப்பாளரும் இருக்கிற பங்களாவை விற்று இருக்கிறார்கள். அதற்கு யார் காரணம், ஹீரோதான் காரணம். நீங்கள் தயாரிப்பாளர்கள் வாழவேண்டும் என்று நினைத்து படத்தில் நடியுங்கள்.
 
இப்போது இருக்கின்ற தயாரிப்பாளர்களில் பாதிபேர் நடிகர்கள்தான் என்று விஷால் சொல்லி இருக்கிறார். டைரக்டர் ஷங்கர் ஐந்து படங்கள் தயாரித்தார். 
 
அப்புறம் வேண்டாம் என்று விட்டுவிட்டார். கே.எஸ்.ரவிக்குமார் ஒரு படம் தயாரித்தார். அதோடு ஒதுங்கிக் கொண்டார். விஷால் மூன்று படங்கள் தயாரித்தார் அவ்வளவுதான். நடிகர்கள் எல்லாம் தயாரிப்பாளராக இருக்கிறார் என்று எந்த அடிப்படையில் சொல்கிறார் விஷால். ஒரு தயாரிப்பாளர் கஷ்டப்பட்டு கடன்வாங்கி ஒருவரை நடிக்கவைத்து உயரத்தில் ஏற்றிவிட்டால் ஏற்றிவிட்ட ஏணியையே உதைக்கிறீர்கள். நீங்கள் சாதாரண நிலையில் இருந்தபோது சண்டைக்கோழி படத்தின் வாயிலாக உங்களுக்கு அடையாளம் கொடுத்தவர் டைரக்டர் லிங்குசாமி. அவர் படத்தை தயாரித்து கஷ்டப்பட்டு நின்றாரே அப்போது விஷால் நீங்கள் எங்கே போனீர்கள்?
 
நாங்கள்தான் இரவு, பகலாக பேசி லிங்குசாமியின் பிரச்னையைத் தீர்த்தோம். நடிகர்கள் ஒழுங்காக நடித்து ஒத்துழைப்பு கொடுத்தால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பஞ்சாயத்து நடத்த வேண்டிய அவசியமே இல்லை. இப்போது வெளியாகும் புதுப்படங்களின் சாட்டிலைட் விற்பனையே கிடையாது. 
 
நடிகர்கள் அதற்காக தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்கிறார்களா? இல்லை எங்கள் சாட்டிலைட் தொகைக்கு சம்பளப் பணத்தை குறைத்துக் கொண்டு கொடுங்கள் என்று எந்த நடிகராவது சொல்கிறாரா? சாட்டிலைட் விற்கவில்லை என்றாலும், ஒவர்ஸீஸ் விற்கவில்லை என்றாலும் எனக்கு ஒரு கவலையும் இல்லை, எனக்கு பேசிய சம்பளத்தை ஒரே தொகையாக லம்ப்பாக கொடுத்து விடுங்கள் என்றுதானே நடிகர்கள் ஒற்றைக் காலில் நிற்கிறீர்கள். அப்புறம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு தயாரிப்பாளரை குறைசொல்கிறீர்கள்?" 
 
- விஷால் இதற்கு உங்க பதில் என்ன?