வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 28 ஜூலை 2015 (19:36 IST)

ஏன் எம்.எஸ்.வி. நிகழ்ச்சிக்கு வந்தேன்? - ரஜினி நெகிழ்ச்சியான பேச்சு

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவையொட்டி அவரது நினைவை போற்றும்விதமாக சென்னை காமராஜர் அரங்கில் இசை நிகழ்ச்சி நடத்தினார் இளையராஜா.

மெல்லிசை மன்னரின் பாடல்களின் நுட்பங்களை விளக்கும்விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.
 

 
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். பிறகு எம்.எஸ்.வி. குறித்து அவர் நெகிழ்ச்சியான உரையாற்றினார். மெல்லிசை மன்னர் மீது அவர் கொண்ட மரியாதையை விளக்கும்விதமாக அந்த பேச்சு அமைந்தது. அந்த பேச்சு வருமாறு -
 
"எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கு சாமி. பெரிய மகான், அவர் நினைவை கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இளையராஜா இசைஞானி. எம்.எஸ்.விஸ்வநாதன் இசை சாமி. அந்த கடவுளை பற்றி ஒரு ஞானிக்கு தான் தெரியும். 
 
அவரைப் பற்றி பாமர மக்களுக்கு இசைஞானிதான் உணர்த்த வேண்டும். இந்த இசை நிகழ்ச்சியில் என்னைப் போன்றவர்கள் கலந்து கொண்டோம் என்பதே பெரிய ஆசீர்வாதம். திறமை என்பது கடவுள் கொடுப்பது. பெற்ற தாய், தந்தையிடம் இருந்து அது வருவது இல்லை. ஜென்மம் ஜென்மமாக வரக்கூடியது. அது ஒரு பிராப்தாம். சரஸ்வதி கடாட்சம். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அது கிடைத்து இருக்கிறது. 
 
பணம், பெயர், புகழ் போன்றவை வரும்போது தலைகால் நிற்காது. ஆனால் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சிறு கடுகளவுகூட தலைக்கனம் இல்லை. அவர் ஒரு இசை கடவுள். 
 
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், பாலசந்தர், ஸ்ரீதர், டி.எம்.சவுந்தரராஜன், சீனிவாஸ், பி.சுசீலா என எல்லோரையும் புகழ் உச்சிக்கு கொண்டு சென்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன். ராமருக்கு உதவிய அனுமன் போல் இருந்தாலும் ஒரு அணில் மாதிரியே வாழ்ந்தார். அப்படிப்பட்ட ஒரு மகானை நான் பார்த்தது இல்லை. இனியும் பார்க்கப் போவது இல்லை. அதனால்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்." 
 
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.