வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வியாழன், 27 ஜூலை 2017 (19:15 IST)

'தரமணி' படத்திற்கு ஏ சான்றிதழ் கேட்டது ஏன்?- இயக்குநர் ராம் விளக்கம்

தனது 'தரமணி' திரைப்படத்தில் கதாநாயகி மது அருந்துவது மற்றும் புகைப்பது உள்ளிட்ட பல கட்சிகளை நீக்கவேண்டும் அல்லது ஏ சான்றிதழ் (A- Adults only, 18 வயதிற்கு அதிகமானவர்கள் மட்டும் ) வழங்கப்படும் என்று தணிக்கை குழு கூறியபோது, ஏ சான்றிதழை தான்கேட்டு பெற்றதாக அத்திரைப்பட இயக்குநர் ராம் தெரிவித்தார்.


 

 
'ஏ சான்றிதழ் பெற்றதில் வருத்தமில்லை'
 
ஐ.டி எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களின் வாழ்க்கை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் நிஜத்தில் நடக்கும் நிகழ்வுகளை படமாக்கியுள்ளதாக கூறும் ராம், ''படத்தில் பல காட்சிகளை நீக்கிவிட்டு யு/ஏ (U/A - 12 வயதிற்கு குறைந்த குழந்தைகள் பெற்றோர் துணையுடன் மட்டுமே பார்க்கவேண்டும்) அல்லது யு (U-unrestricted public exhibition-அனைவரும் பார்க்கலாம்) சான்றிதழ் பெறவேண்டும் என்று நான் எண்ணவில்லை,'' என்றார்.
 
''ஏ சான்றிதழ் பெறுவதால் திரைப்படத்தின் கருத்தை அப்படியே கொடுக்கமுடியும் என்பதால், அந்தச் சான்றிதழையே வழங்குமாறு கேட்டுக்கொண்டேன்,'' என்றார் ராம்.
 
அவர் மேலும் கூறுகையில், ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படங்கள் அனைத்தும் பாலியல் தொடர்பான படங்கள் என்ற தவறான கண்ணோட்டம் சமூகத்தில் நிலவுகிறது. அந்த கருத்தை உடைக்கும் படமாக 'தரமணி' திரைப்படம் இருக்கும் என்கிறார்.


 

 
''பெண்கள் ஏ சான்றிதழ் பெற்ற படங்களுக்கு செல்வது என்பது சிக்கலான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. பெரியவர்கள் பார்க்க உகந்த படம் என்றால் அதில் பெண்களும் அடங்குவர். 'ஏ சான்றிதழ் வழங்கப்பட்டாலும், எனது படத்தின் கதைக்காக அதிக எண்ணிக்கையில் பெண்கள் வந்துபார்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
 
தணிக்கை குழுவினர் சொல்வது என்ன?
 
பல திரைப்படங்களில் பெண்கள் மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறும் பட தணிக்கை குழு உறுப்பினர் எஸ்.வி.சேகர், ''மது அருந்தும் காட்சி மட்டுமே தரமணி படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டதற்கு காரணம் அல்ல. படம் வெளியாகும் முன்னர் தணிக்கை தகவல்களை தெரிவிக்கக்கூடாது,'' என்றார்.