வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Ilavarasan
Last Updated : சனி, 30 ஆகஸ்ட் 2014 (13:22 IST)

சினிமாவில் அதிகம் சம்பாதிக்கிறவங்க அதிகம் கஷ்டப்படுறவங்க கிடையாது - விஜய் ஆண்டனி பளீர் பேச்சு

திறந்த புத்தகம் என்பார்களே அப்படியிருக்கிறார் விஜய் ஆண்டனி. முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் போதே, இனி நான் நடிப்புக்குதான் முக்கியத்துவம் தரப்போறேன் என்று சொல்வதற்கும், படங்களை தொடர்ந்து தயாரிப்பதற்கும் தில் வேண்டும். இன்று (29-08-14) அவரது சலீம் திரைப்படம் வெளியாகியுள்ளது. அதை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் தந்த ஓபன் பேட்டி உங்களுக்காக.


 
 
சினிமா அனுபவம் எப்படி இருக்கு?
 
வீட்டை கட்டிப் பாரு, கல்யாணத்தை செஞ்சிப் பாருன்னு எல்லாம் சொல்வாங்க. அதெல்லாம் ஈஸி. சினிமா எடுக்கிறதுதான் ரொம்ப கஷ்டம். மியூஸிக் டைரக்டரா இருந்தவரைக்கும் ஈஸி வேலை. டைரக்டர்ஸ் வந்து சிச்சுவேஷன் சொல்வாங்க, டியூன் கேப்பாங்க கொடுப்பேன். ஆனா சினிமாவில் வெயிலிலும், மழையிலும் ஒவ்வொருத்தரும் எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு இப்போதான் தெரிஞ்சுகிட்டேன். நான் சொல்றது டைரக்டர், கேமராமேன், லைட்மேன் இவங்களைப் பற்றி. ஹீரோஸுக்கு குடை பிடிச்சிப்பாங்க. ஹீரோயினுக்கும் அந்த மாதிரிதான். கேரவன் எல்லாம் இருக்கும். ஆனா டெக்னிஷியன்ஸ் இருக்கிறாங்க பாருங்க. நாய் படாதபாடு. சினிமாவில் ரொம்ப அதிகமாக சம்பாதிச்சவங்க ரொம்ப கஷ்டப்படுறவங்க கிடையாது. மியூஸிக் டைரக்டர்ஸ்கூட.

சலீம் படத்தோட இயக்குனர் பற்றி சொல்லுங்க...?
 
சலீம் படத்துல நான் நிர்மல் குமார் சாரை இன்ட்ரடியூஸ் பண்றது சந்தோஷமாக இருக்கு. நான் ஒருத்தர்கூட பழகணும்னு நினைக்கிற போதோ, இல்ல ஒருத்தரை இன்ட்ரடியூஸ் பண்ணணும்னு நினைக்கிற போதோ, திறமைங்கிறது முப்பது முப்பத்தைஞ்சு பர்சன்டேஜ் போதும். கேரக்டர் வேணும். என்கூட ட்ராவல் பண்ற ஆள்கள் ரொம்ப முக்கியம். பியூச்சர்ல இவர்கூட வொர்க் பண்ண விரும்புற புரொடியூசர்களுக்கு நான் உத்தரவாதம் தர்றேன். நல்ல பர்சன், நல்ல ஹ்யூமன் பீயிங். பொறுப்பா நம்மை கொண்டு போய் சேர்த்திடுவார். 
 
இந்தப் படத்தின் ஸ்டில்களே அதிகம் பேசப்பட்டது. கேமராமேன் பற்றி சொல்லுங்க...?
 
கேமராமேன் கணேஷ் சந்திரா பற்றி சொல்லணும். சிலவேளை ஷுட் காலையில ஒன்பது மணிக்கு ஆரம்பிச்சு மறுநாள் ஈவ்னிங் ஆறுமணி வரைக்கும்கூட போயிருக்கு. அப்போயெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு எங்கககூட வொர்க் பண்ணியிருக்கார். பிரமாதமாக தன்னோட போர்ஷனை செய்திருக்கார்.
 
உங்க வொய்ப் ஷுட்டிங் ஸ்பாட்ல உங்ககூடவே இருக்கிறதா ஒரு பேச்சு இருக்கே... உண்மையா?
 
என்னோட வொய்ப் பத்தி சொல்லணும். நான் என்ன பண்றேன். சாப்பிட்டாரா. பேசுறதுக்கு முன்னாடி தண்ணி குடித்தாரா இல்லையானு ஒரு குழந்தையை பார்த்துக்கிற மாதிரி பார்த்துகிட்டாங்க. அதுக்கு நான் தகுதியானவனான்னு எனக்கு தெரியாது. பல மனுஷங்கக்கிட்ட இருக்கிற பேட் குவாலிட்டீஸ் எல்லாம் என்கிட்டயும் இருக்கு. நான் மியூஸிக் பண்றதுக்கும், நடிக்கிறதுக்கும் என்னோட எனர்ஜி, ஆணிவேர் என்னோட வொய்ப்தான்.


சலீம் நான் படத்தின் இரண்டாவது பாகமா?
 
நான் படத்தைப் பார்த்துட்டு இதை பார்க்கும் போது பார்ட் டூ மாதிரி இருக்கும். பார்க்காமல் பார்க்கும் போது பார்ட் டூ மாதிரி இருக்காது. அதனால பார்ட் டூ ன்னும் வச்சுக்கலாம், இல்லைன்னும் வச்சுக்கலாம். 
 
முஸ்லீம் பெயரை இரண்டாவது படத்திலும் பயன்படுத்துறீங்க?
 
நான் படத்துல சலீமா மாறுவேன். இதுலயும் சலீம்தான். பெயர் எதேச்சையா அமைஞ்சது. எனக்கு எம்மதமும் சம்மதம்தான். அடுத்தப் படத்துல கார்த்திக்கிங்கிற கேரக்டர் பண்றேன். இந்தப் படத்துலயும் சலீம்னு பெயர் அமைஞ்சதை சந்தோஷமா எடுத்துகிட்டேன். முஸ்லீம் பெயர் டைட்டில்ல அதிகமாக படங்கள் வந்ததில்லைன்னு நினைக்கிறேன். இந்தப் பெயர் அமைஞ்சதும், படத்தின் ஓபனிங்கில் பிள்ளையார் சாங்க் வர்றதையும் பாக்கியமாக கருதுறேன்.
 
படம் எப்படி வந்திருக்கு?
 
பிரமாதமா வந்திருக்கு எல்லோருக்கும் கண்டிப்பா பிடிக்கும்.