வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (11:54 IST)

கமல், பாரதிராஜா கலந்து கொண்ட வல்லதேசம் பாடல்கள் வெளியீட்டுவிழா

என்.டி.நந்தா என்பர் இயக்கியிருக்கும் படம், வல்லதேசம். அனுஹாசன், நாசர், அமீத், டேவிட் நடித்துள்ளனர். எல்.வி.முத்துகுமாரசாமி, ஆர்.கே.சுந்தர் இசையமைத்துள்ளனர். இதன் பாடல்கள் வெளியீட்டுவிழா நேற்று நடந்தது. நடிகர் கமல், இயக்குனர் பாரதிராஜா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் கமல், பெண்களுக்கு படங்களில் முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று பேசினார். அவரது பேச்சு - 
 
"புதிய முயற்சிகளை பாராட்ட வேண்டும். வரவேற்க வேண்டும். அந்த நோக்கத்தில் தான் இந்த விழாவில் நான் கலந்துகொண்டேன். ஒரு பெண்மணியை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர். இது சிறந்த முயற்சி. இப்போதெல்லாம் பெண்களை மையமாக வைத்து எடுக்கும் படங்கள் குறைந்து விட்டன. எனது வாத்தியார் (டைரக்டர் கே.பாலச்சந்தர்) பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் நிறைய எடுத்தார். அவரை போல் படங்கள் எடுக்கும் டைரக்டர்கள் குறைவாக உள்ளனர். 
 
வீட்டில் பெண்கள் ராஜ்ஜியம் நடக்கிறது என்று சொல்கிறோம். ஆனால் சினிமாவில் அப்படி இல்லை. இந்த படத்தை பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்தில் துணிந்து எடுத்து உள்ளனர். இதுபோல் படங்கள் வரவேண்டும். டிரைலரை பார்க்கும் போது உயர்ந்த தொழில்நுட்பம் தெரிந்தது.

ஹாலிவுட் படமோ என்று நினைக்க வைத்தது. ஆனால் அப்படிப்பட்ட படாடோபம் இல்லை. குறைந்த ஆட்களை வைத்து இந்த படத்தை எடுத்து உள்ளோம் என்று படத்தின் டைரக்டர் என்னிடம் சொன்னார். 
 
எதிர்காலத்தில் இப்படித்தான் நடக்க போகிறது. 4 ஆயிரம் பேரை வைத்து படம் எடுத்து 200 பேர் மட்டுமே பார்க்கின்ற நிலை இருப்பதை தவிர்த்து, 200 பேரை வைத்து படம் எடுத்து கோடிக்கணக்கானோர் படத்தை பார்க்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் அப்படித்தான் நடக்க போகிறது. இதன்மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும். சிறு சிறு குழுக்கள் இந்த பணிகளில் ஈடுபடுவார்கள். அது சினிமா தொழிலுக்கு நல்லது. கட்டுப்பாட்டோடு செயல்பட்டு படத்தை எடுத்துள்ளனர்."
 
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.