1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 28 மே 2015 (14:19 IST)

கோரிக்கையை நடிகர் சங்கம் ஏற்காவிட்டால்... விஷாலின் சவால்

நடிகர் சங்கத்தின் இப்போதைய நிர்வாகிகள், குறிப்பாக செயலாளர் ராதாரவி தனது தன்னிச்சை செயல்பாட்டால் நடிகர் சங்கத்தை சொந்த சொத்தாக பாவித்து வருகிறார். கேள்வி கேட்பவர்களை, நீ யாருடா கேட்பதற்கு என்று பண்ணையார்த்தனமாக பொதுமேடையிலேயே பேசி வருகிறார். நாடக நடிகர்களும் நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களின் பின்புலத்தால் கிடைத்துவரும் மெஜாரிட்டி ஆதரவை தனது எதேச்சதிகாரத்துக்கு ராதாரவி பயன்படுத்துகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
 
நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தையும், நடிகர் சங்க கட்டிடத்தையும் தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டத்தை ராதாரவியும், சரத்குமாரும் செயல்படுத்தினர். சொந்த இடத்தில் வேறொருவர் கட்டிடம் கட்டுவார், நடிகர் சங்கத்துக்கு அதில் கொஞ்சம் இடம் தரப்படும். இந்த உமி நெல் ஸ்டைல் ஒப்பந்தத்தை எதிர்த்து விஷால் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
 
தனது ஆதரவாளர்களுடன் புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தினரை நேற்று நேரில் சந்தித்தார் விஷால். ராதாரவியின் நாடக ஆதரவை குலைக்கும் விஷாலின் இந்த முயற்சிக்கு பெரும் ஆதரவு நாடக நடிகர்களிடமிருந்தே கிடைத்தது. அவர்களிடையே பேசியவர், எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்களின் உழைப்பால் உருவான நடிகர் சங்கக் கட்டிடத்தை, தனியார்வசம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ஏற்க முடியாது. அங்கு திருமண மண்டபத்துடன் கூடிய புதிய சங்கக் கட்டிடம் கட்ட வேண்டும். அவ்வாறு செய்தால், நடிகர்களின் குடும்பத்தினர் வாடகையின்றி திருமணத்தை நடத்திக் கொள்ள வசதியாக இருக்கும். இந்தக் கோரிக்கையை நடிகர் சங்கம் ஏற்காவிட்டால், சங்கத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என்றார்.
 
இதன் மூலம் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதை வெளிப்படையாக அறிவித்துள்ளார் விஷால்.